PUBLISHED ON : ஜூலை 21, 2026 12:00 AM

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்: முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம், அனைத்து தடைகளையும் தாண்டி, வரும் 23ல் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றனரோ, அதேபோல் படத்தில் நடித்த முதல்வர் விஜயும், நானும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த படம், மக்களுக்கு ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.
டவுட் தனபாலு: முதல்வர் விஜய் ஏற்கனவே நடிச்ச படம், பல தடைகளை தாண்டி வெளியாவது நல்ல விஷயம் தான்... ஆனா, ஒரு துறைக்கு பொறுப்பான அமைச்சராக இருக்கும் நீங்க, இன்னும் விஜய் ரசிகர் என்ற மனநிலையில் இருந்து வெளி வரலையோ என்ற, 'டவுட்' தான் வருது!
----
தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு: 'தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து ஏற்றுக்கொண்டால் தான், பள்ளிக்கல்வித் துறைக்கான நிதியைத் தருவோம்' என்று மத்திய அரசு பிடிவாதம் பிடிக்கிறது. நிறுத்தப்பட்ட 3,500 கோடி ரூபாய் கல்வி நிதியை வழங்கக் கோரி, மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியும் நிதி தரவில்லை.
டவுட் தனபாலு: கடந்த தி.மு.க., ஆட்சியினரும், இதே பாட்டைத் தான் பாடிட்டு இருந்தாங்க... நீங்களும் அதையே பாடுறதுக்கா, தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினாங்க என்ற, 'டவுட்' வருதே... 'தி.மு.க., அரசு மாதிரியே த.வெ.க., அரசும் செயல்படுது'ன்னு பா.ஜ., கூறும் குற்றச்சாட்டை, 'டவுட்' இல்லாம நிரூபிச்சிட்டீங்க!
-----
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: என் வாழ்க்கையில் இரண்டு பெருந்தவறுகளை செய்து விட்டேன். ஒன்று, 2006ல் அ.தி.மு.க.,வுடன் உடன்பாடு வைத்தது. அன்று மட்டும் அ.தி.மு.க.,வுடன் சேராமல் இருந்திருந்தால், ம.தி.மு.க., வலிவும், பொலிவும் பெற்றிருக்கும். கடந்த 2017ல், பா.ஜ.,வை எதிர்ப்பதற்காக தி.மு.க.,வுடன் உடன்பாடு செய்தது, இரண்டாவது பெரும் பிழை. பொதிகை மலை உறுதியாக இருப்பதை போல, இன்றைய அரசியலில் நானும், ம.தி.மு.க.,வும் சரியான முடிவுகளை மேற்கொண்டு இருக்கிறோம். இனி நமக்கு எந்தவித கேடும், யாரும் செய்ய முடியாது.
டவுட் தனபாலு: இன்னும் சில ஆண்டுகளுக்கு பின், 'த.வெ.க.,வுடன் கூட்டணி சேர்ந்தது மூன்றாவது பெரும் பிழை'ன்னு சொல்ல மாட்டீங்க என்பதற்கு, ஏதாவது உத்தரவாதம் தர முடியுமா...? இனி உங்க கட்சிக்கு எந்த கேட்டையும், யாரும் செய்யவே முடியாது... ஏன்னா, உங்க கட்சிக்கு நீங்களே அதை பல முறை பண்ணிட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
