PUBLISHED ON : ஜூலை 22, 2026 12:00 AM

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: வரும் 25ம் தேதி முதல், 2027, ஏப்ரல் 17ம் தேதி வரை, சனிக்கிழமை தோறும், ஜெயலலிதா பேரவையின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் நடக்கும். ஜெயலலிதா பேரவை மாநில செயலர் உதயகுமார் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க வேண்டும்.
டவுட் தனபாலு: ஆலோசனை கூட்டங்களை நடத்துறது நல்ல விஷயம் தான்... ஆனா, அவற்றை ஏன் சனிக்கிழமைகள்லயே நடத்துறீங்க... ஒவ்வொரு சனிக்கிழமையும் உங்க கட்சியினர், த.வெ.க.,வின் சென்னை, பனையூர் அலுவலகத்துக்கு படையெடுத்து போய் சேர்வதை தடுக்கவே, அந்த கிழமையில் ஆலோசனை கூட்டங்களை நடத்துறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
---
வி.சி.க., தலைவர் திருமாவளவன்: ஜாதியவாதிகளும், மதவாதிகளும் வி.சி.க.,வை தனிமைப்படுத்த துடிக்கின்றனர். இப்போது, பட்டியல் இனத்தினர் எட்டு பேருக்கு அமைச்சர் பதவி; துணை சபாநாயகர் என ஒன்பது பதவிகளை த.வெ.க., கொடுத்துள்ளதாக கூறி, பிற சமுதாய மக்களிடம், இந்த ஆட்சிக்கு எதிரான வெறுப்பை திட்டமிட்டு பரப்புகின்றனர். ஆனால், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அமைச்சரவைகளில், பட்டியல் இனத்தவருக்கு உரிய பிரதிநிதித்துவம் ஏன் தரவில்லை என கேள்வி எழுப்புவதில்லை.
டவுட் தனபாலு: நீங்க சொல்றது வாஸ்தவம் தான்... ஆனா, கடந்த காலங்களில் அ.தி.மு.க., - தி.மு.க.,வுடன் பல ஆண்டுகள் நீங்க கூட்டணியில் இருந்தீங்களே... அப்ப எல்லாம், 'பட்டியல் சமூகத்தினருக்கு அதிக பிரதிநிதித்துவம் தந்தால் தான் கூட்டணியில் நீடிப்பேன்'னு, நீங்க நிபந்தனை விதிக்காதது ஏன் என்ற, 'டவுட்' வருதே!
----
சிவகங்கை, காங்., - எம்.பி., கார்த்தி: 'தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளித்தால், 2029ல் தமிழக சட்டசபை தேர்தல் வரும்' என, தி.மு.க.,விற்கு பா.ஜ., ஆசை வார்த்தை காட்டுகிறது. அந்த பாதையில் தி.மு.க., சென்றால், தேர்தலில் மோசமான முடிவுகளே அக்கட்சிக்கு கிடைக்கும். பா.ஜ., எதிர்ப்பு நிலையை தி.மு.க., மாற்றினால் விபரீதம் ஏற்படும்.
டவுட் தனபாலு: கிட்டத்தட்ட, 22 வருஷங்களா உங்களுடன் கூட்டணியில் இருந்த தி.மு.க.,வை உதறிட்டு, நீங்க தான் த.வெ.க., பக்கம் தாவுனீங்க... இப்ப, தனி மரமா நிற்கும் அவங்க, உங்க எதிரியான பா.ஜ.,வுடனும் சேரக்கூடாதுன்னு சொல்றதுல ஏதாவது நியாயம் இருக்கா என்ற, 'டவுட்' வருதே!
-----
