PUBLISHED ON : ஆக 18, 2026 12:00 AM

காங்., கட்சியைச் சேர்ந்த, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்:
காங்., மற்றும் கூட்டணி கட்சிகளால் தான், முந்தைய தேர்தல்களில் தி.மு.க.,வுக்கு வெற்றி கிடைத்தது. தி.மு.க., ஒன்றும் ஆகாயத்தில் இருந்து வந்து வெற்றி பெறவில்லை. தி.மு.க.,வினரை காங்., பல வருடங்கள் ஒப்பந்தத்தில் எடுத்ததை அவர்கள் மறந்து விட்டனர். கடந்த 2004 முதல் 2026 வரை, எங்களிடம் தி.மு.க.,வினர், எத்தனை முறை ஒப்பந்தம் எடுத்து பணியாற்றி உள்ளனர் என தெரியுமா? மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் என ஏராளமான ஒப்பந்தங்களை, அவர்களுக்கு நாங்கள் கொடுத்துள்ளோம்.
டவுட் தனபாலு:
அது சரி... 'எம்.பி., அமைச்சர் பதவிகள் எல்லாம் மக்களுக்கு பணியாற்ற மட்டுமே என்று மேடைகளில் மட்டும் தான் பேசுவோம்... ஆனா, கூட்டணி எல்லாம் ஒப்பந்தம் எடுத்து செய்ற தொழில் தான்' என்பதை, 'டவுட்'டே இல்லாம விளக்கிட்டீங்களே!
-----
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்:
லோக்சபா தொகுதி மறுவரையறை மூலம், தமிழகத்தில் தற்போதுள்ள 39 தொகுதிகள், 59 ஆக உயரும். இதன் மூலம், தமிழகத்துக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும். தொகுதி மறுவரையறை குறித்து, சில அரசியல் கட்சிகள் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றன. காலப்போக்கில் அதன் நன்மைகளை அனைத்து கட்சிகளும் உணர்ந்து ஆதரிக்கும் நிலை ஏற்படும்.
டவுட் தனபாலு:
வாஸ்தவம் தான்... கடைசியா, 1971ல் நம்ம மக்கள் தொகை, 55 கோடியா இருந்தப்ப தொகுதி மறுவரையறை செய்தாங்க... இந்த 55 வருஷங்கள்ல, மக்கள் தொகை கிட்டத்தட்ட மூணு மடங்கு, அதாவது, 148 கோடியை தாண்டிடுச்சு... அதற்கேற்ப எம்.பி.,க்கள் எண்ணிக்கையை அதிகரிக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
----
தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி:
மத்திய பா.ஜ., அரசை எதிர்த்து தமிழக முதல்வர் விஜயோ, த.வெ.க., அமைச்சர்களோ இதுவரை எந்த கேள்வியும் எழுப்பியதாக தெரியவில்லை. 'மத்திய அரசை எதிர்ப்போம்' என்று வாய் வார்த்தையாக சொல்கின்றனரே தவிர, தமிழகத்தை பாதிக்கும் பிரச்னைகளில் எதிர்த்து பேசுவதில்லை. தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிக்கு எந்த காலத்திலும் வாய்ப்பு இல்லை.
டவுட் தனபாலு:
த.வெ.க.,வை விடுங்க... ஆட்சியில் இருக்கும்போது, மத்திய பா.ஜ., அரசை எதிர்த்த நீங்களே, இப்ப அடக்கித் தானே வாசிக்கிறீங்க... 'தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு எந்த காலத்திலும் வாய்ப்பில்லை'ன்னும், உங்களால உறுதியா சொல்ல முடியுமா என்ற, 'டவுட்' எழுதே!
