PUBLISHED ON : ஆக 21, 2026 01:22 AM

காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிறக்கும் முன்பே, நான் எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளேன். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியது நாங்கள் தான். இதில், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு என்ன? எங்களுக்கு தேசபக்தியை கற்றுக்கொடுக்காதீர். ஒற்றுமைக்கு பதில், பிளவை ஊக்குவித்து நாட்டிற்கு பா.ஜ., சேதம் விளைவிக்கிறது.
டவுட் தனபாலு: உங்களது, 'சீனியாரிட்டி' மீது யாருக்கும், எந்த, 'டவுட்'டும் இல்லை... காஷ்மீர் துவங்கி, கன்னியாகுமரி வரை இருக்கும் காங்., கட்சிக்கு நீங்க தானே தலைவர்... ஆனா, நீங்க எம்.எல்.ஏ.,வா இருந்தப்ப, பிறந்திருக்கவே பிறந்திருக்காத ராகுலை கேட்காம, கட்சியில எந்த முடிவையும் உங்களால சுதந்திரமா எடுக்க முடியுமா என்ற, 'டவுட்' வருதே?
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: த.வெ.க., அரசின் அமைச்சர்கள் அனைவரும், தங்கள், 'வேலை'யை தொடங்கி விட்டனர்; அனைத்து விதமான விஷயங்களையும் ஆரம்பித்து விட்டனர். இதன் அர்த்தம் என்னவென்று அனைவருக்கும் தெரியும். யார் யார், எங்கெல்லாம், 'வாங்குகின்றனர்' என்ற பட்டியல் எங்கள் கையில் உள்ளது. முதல்வரிடம் உள்ள துறையில் நடக்கும், 'டெண்டர்' முறைகேடுகள் உட்பட அனைத்து விபரங்களையும் விரைவில் வெளியிடுவோம்.
டவுட் தனபாலு: உங்க கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கையில் ஆதாரங்கள் மற்றும் புள்ளி விபரங்களுடன் தி.மு.க., ஆட்சியின் ஊழல்களை புட்டு புட்டு வைப்பாரு... அவரை மாதிரி அதிரடியாக செயல்படணும் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தாலும், ஆதாரங்களுடன் பேசினால் தான் மக்களிடம் எடுபடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
வி.சி.க., தலைவர் திருமாவளவன்: உளுந்துார்பேட்டையில் நடந்த வி.சி.க., மாநாட்டிற்கு, முதல்வர் விஜய் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அதற்கு நன்றி தெரிவிக்கவும், 'ஐந்து ஆண்டுகள் எவ்வித இடையூறுமின்றி, த.வெ.க., ஆட்சி தொடர, எங்கள் ஆதரவு உண்டு' என்பதை உறுதிப்படுத்தவும் முதல்வர் விஜயை சந்தித்தோம்.
டவுட் தனபாலு: 'த.வெ.க., ஆட்சிக்கு அஞ்சு வருஷமும் ஆதரவு குடுப்போம்'னு, சொல்றீங்க... ஆனா, அடுத்து நடக்க போற ஆறு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்ல ஆளுங்கட்சி ஜெயித்து விட்டால், உங்க ஆதரவு எல்லாம் அவங்களுக்கு இரண்டாம் பட்சமாகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
