PUBLISHED ON : செப் 12, 2026 02:16 AM

தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் வேலு: நெடுஞ்சாலை துறை அமைச்சராக நான் இருந்தபோது, 2026 - 27ம் ஆண்டுக்கான 80 சாலை பணிகளுக்கு, 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன்கூட்டியே நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதில், சட்ட விதிகள் மீறப்பட்டதாக த.வெ.க., அரசின் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தது, நிதி நிர்வாக நடைமுறைகளை திட்டமிட்டு திரித்து கூறுவதாகும். அ.தி.மு.க., ஆட்சியிலும் சாலைகள் விரிவாக்கத்துக்காக, 13 ஆயிரத்து 967 கோடி ரூபாய் வழங்க, 2021ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
டவுட் தனபாலு: இப்ப என்ன சொல்ல வர்றீங்க...? 'அ.தி.மு.க.,வினர் ஆட்சியை விட்டு இறங்குறதுக்கு முன்னாடி கிட்டத்தட்ட, 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அரசாணை வெளியிட்டு, 'கமிஷன்' வாங்கிட்டு போயிட்டாங்க... நான் வெறும், 2,000 கோடி ரூபாய்க்கு தான் அரசாணை வெளியிட்டு கமிஷன் வாங்கினேன்'னு சொல்ல வர்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தி.மு.க., தலைமை அறிவிப்பு: தி.மு.க.,வையும், ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியையும், 23 வயதில், 'மிசா'வில் கைதான தி.மு.க., தலைவர் ஸ்டாலினையும் கொச்சைப்படுத்தி, சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியது கண்டனத்துக்குரியது. அவரது பேச்சை கண்டிக்கும் வகையில், மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க., மாவட்டச் செயலர்கள் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கும்.
டவுட் தனபாலு: ஆர்ப்பாட்டங்களில் பேசுவோரை ஜாக்கிரதையா பேச சொல்லுங்க... 'எலும்பை உடைப்பேன், நாக்கை அறுப்பேன்'னு, ஏடாகூடமா பேசிட போறாங்க... அப்புறம் அவங்களுக்காக, உங்க கட்சியின் வக்கீல் அணியினர் தான் முன்ஜாமின், பின்ஜாமின்னு அலையணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: இந்தியாவில் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசித்து, 2023ல் மட்டும் 3.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. 1990ல், இதே முறையில் 2.17 லட்சம் பேர் உயிரிழந்தனர். பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டம் நடைமுறையில் இருந்தும், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது கவலை தருகிறது. இதன் வாயிலாக, இச்சட்டம் எவ்வளவு அலட்சியமாக அமல்படுத்தப்படுகிறது என்பதை உணரலாம். இனியாவது பொது இடங்களில் புகைப்பதை அரசு தடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: நீங்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தப்ப, சினிமாக்கள்ல புகை பிடிக்கும் காட்சிகளுக்கு கடும் கெடுபிடிகள் விதிச்சீங்க... இப்ப, வர்ற எல்லா சினிமாக்கள்லயும் கதை இருக்கோ, இல்லையோ... வண்டி, வண்டியா புகை விடும் காட்சிகள் நிறைய இருக்கு... அதை பார்த்துட்டு நிறைய இளைஞர்கள், ரயில் இன்ஜின் மாதிரி பொது இடங்கள்ல புகை விட்டுட்டு திரியுறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
