PUBLISHED ON : செப் 13, 2026 01:42 AM

தி.மு.க.,வைச் சேர்ந்த, துாத்துக்குடி எம்.பி., கனிமொழி: த.வெ.க., குதிரை பேரம் நடத்தியதன் விளைவாக, இன்று இடைத்தேர்தல் வந்துள்ளது. இவர்கள் தான் மக்களுக்கு, 'நேர்மையான அரசியலை தரப் போகிறோம்' என்று சொன்னவர்கள். உண்மையில் இந்த இடைத்தேர்தல் முற்றிலும் அவசியமற்றது.
டவுட் தனபாலு: கடந்த 2006ல், உங்க தந்தை கருணாநிதி ஆட்சியில், ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., கம்பம் ராமகிருஷ்ணனும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணனும், தங்களது பதவிகளை ராஜினாமா பண்ணிட்டு, உங்க கட்சியில் சேர்ந்தாங்களே... அடுத்து நடந்த கம்பம், திருச்செந்துார் தொகுதிகளின் இடைத்தேர்தல்ல, உங்க கட்சி சார்பில் அவங்களே நின்று ஜெயித்த கதையை எல்லாம் மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டடமே, 900 கோடி ரூபாயில் தான் கட்டப்பட்டது. ஆனால், சென்னையில் 1,200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமை செயலகம் அமைக்க, த.வெ.க., அரசு திட்டமிட்டுள்ளது; இதன் வாயிலாக, திட்டமிட்டே மிகப் பெரிய ஊழலுக்கு அரசு வழிவகுத்துள்ளது.
டவுட் தனபாலு: நீங்க சொல்ற டில்லி பார்லிமென்ட் கட்டுமானப் பணிகள் 2021ல் துவங்கி, 2023ல் முடிஞ்சது... இப்ப, 2026ம் வருஷமே முடியப் போகுது... இந்த மூணு வருஷங்கள்ல சிமென்ட், இரும்பு கம்பி, தொழிலாளர்கள் கூலி எல்லாம் உயர்ந்திருக்கே... அதனால தான், தலைமை செயலக கட்டுமான மதிப்பீடும் உயர்ந்திருக்கு என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!
த.வெ.க., தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்: அரசியல் களம் கண்ட 27 மாதங்களில், தமிழக அரசியல் வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத ஒரு பேரதிசயத்தை, சட்டசபை தேர்தலில் மக்கள் நிகழ்த்தி காட்டினர்; தனி பெரும் கட்சியாக த.வெ.க.,வை உயர்த்தி பிடித்தனர். அதனால், இன்று ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாக்கி, த.வெ.க., ஆட்சியை நிறுவி உள்ளோம். அதன் வெளிப்பாடாக தலைமை தேர்தல் கமிஷன், த.வெ.க.,வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... எம்.ஜி.ஆரே கட்சி துவங்கி, ஐந்து வருஷங்களுக்கு பிறகு தான் ஆட்சியை பிடிச்சார்... ஆனா, உங்களுக்கு ரெண்டே வருஷத்துல தமிழக மக்களின் அங்கீகாரம் கிடைச்சிருக்கு... ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை தொடர்ந்து நடத்தினா, எம்.ஜி.ஆரை போல நீங்களும் அசைக்க முடியாத சக்தியா மாறுவீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
