/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கோவில்பட்டியில் சர்கார் பட பாணியில் டெண்டர் ஓட்டு போட்ட தொழிலாளி
/
கோவில்பட்டியில் சர்கார் பட பாணியில் டெண்டர் ஓட்டு போட்ட தொழிலாளி
கோவில்பட்டியில் சர்கார் பட பாணியில் டெண்டர் ஓட்டு போட்ட தொழிலாளி
கோவில்பட்டியில் சர்கார் பட பாணியில் டெண்டர் ஓட்டு போட்ட தொழிலாளி
ADDED : ஏப் 20, 2024 02:50 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செக்கடி தெருவை சேர்ந்தவர் வடிவேல் ராஜா, 40; சமையல் தொழிலாளி. இவர், அவசர வேலைக்காக துாத்துக்குடி சென்றார். பின்னர், கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஓட்டுச் சாவடியில் வடிவேல் ராஜா ஓட்டுப் போட சென்றார்.
அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள் வடிவேல் ராஜாவின் ஓட்டு ஏற்கனவே செலுத்திவிட்டதாக தெரிவித்தனர். இதனால், வடிவேல் ராஜா அதிர்ச்சி அடைந்தார். ஓட்டுப் போடுவதற்காக தூத்துக்குடியில் இருந்து வந்த பஸ் டிக்கெட்டை அவர் அதிகாரிகளிடம் காட்டினார்.
இருந்தபோதும் அதிகாரிகள் சம்மதிக்காததால் அவர் அங்கிருந்து விரக்தியுடன் வெளியேறினார். சிறிது நேரத்தில் மீண்டும் ஓட்டுச்சாவடிக்கு சென்ற வடிவேல் ராஜா எனது ஓட்டை நான் போட்டே ஆக வேண்டும் என அடம் பிடித்தார். நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தில் இதேபோல போல ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்.
இதையடுத்து, வடிவேல் ராஜாவிடம் சமரசம் பேசிய அதிகாரிகள், ஒருவரது ஓட்டை வேறு ஒரு நபர் செலுத்தி விட்டதால்தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் விதிமுறைகளின் படி ஓட்டுச் சீட்டை பயன்படுத்தி டெண்டர் வோட் பதிவு செய்ய முடியும் என தெரிவித்தனர்.
அதற்கு சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, வடிவேல் ராஜாவின் ஆவணங்களை சரி பார்த்த தேர்தல் அலுவலர், ஓட்டுச் சீட்டு முறையில் அவரை ஓட்டுப் போட அனுமதித்தார். ஓட்டுச் சீட்டை பெற்று ரப்பர் முத்திரையை பயன்படுத்தி வடிவேல் ராஜா தனது ஓட்டை பதிவு செய்தார். அந்த ஓட்டுச் சீட்டை ஓட்டுச் சாவடி தலைமை அதிகாரிடம் ஒப்படைத்தார்.
பெயர் பட்டியலில் உள்ள போட்டோ தெளிவாக இல்லாத காரணத்தினால் இதுபோன்ற தவறு நடைபெற்றதாக, அந்த ஓட்டுச் சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரம்பூர்
பெரம்பூரில் உள்ள சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியில் தீட்டி தோட்டத்தைச் சேர்ந்த முகமது ரபி, 29; என்பவரின் ஓட்டு, வேறொருவர் போட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு, '49பி' பிரிவின்படி ஓட்டு போடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி '49பி' விதியின் படி- நம் ஓட்டை வேறு யாரும் பதிவு செய்திருந்தால், அதனை நீங்கள் தேர்தல் அதிகாரியிடம் தெரியப்படுத்தி, அவரின் கேள்விகளுக்குத் தக்க பதிலளித்து, ஓட்டுச் சீட்டு மூலம் உங்கள் ஓட்டை பதிவு செய்யலாம். அதற்கு முன் படிவம் '17பி'யில் உங்கள் பெயரைப் பதிவிட வேண்டும். இதன்படி, தன் ஓட்டை முகமது ரபி பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
வாணியம்பாடி
வேலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி, கோனாமேடு நகராட்சி தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியில், புத்தநகரை சேர்ந்த அரவிந்தன் ஓட்டு போட வந்தார்.
அவருடைய ஓட்டை வேறு ஒருவர் போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மற்றவர்கள் ஓட்டு போட முடியாமல் தவித்தனர்.
தகவலறிந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், ஓட்டுச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர் சமாதானம் செய்ய முயன்றும் வேறு வழியில்லாமல், அவருக்கு டெண்டர் ஓட்டு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் பிரத்யேகமாக அச்சிடப்பட்டிருந்த ஓட்டு சீட்டில் ஓட்டுப்பதிவு செய்தார்.

