தாம்பூல வடிவில் டி.வி.ஆர்., ஓவியம்: பழநி ஓவிய ஆசிரியர், மகள் அசத்தல்
தாம்பூல வடிவில் டி.வி.ஆர்., ஓவியம்: பழநி ஓவிய ஆசிரியர், மகள் அசத்தல்
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 08:34 PM

பழநி: தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவத்தை வெற்றிலை, பாக்குடன் தாம்பூல வடிவில் வரைந்து திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்த ஓவியர், அவரது மகள் கவுரவித்தனர்.
பழநியை சேர்ந்த அன்புச்செல்வன் 43, சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மகள் உதயநந்தினி 12, பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார்.
இவர்கள் இருவரும் தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பூலத்தில் இடம் பெறும் வெற்றிலை, பாக்குடன் டி.வி.ஆர்., ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளனர்.
அன்புச்செல்வன் கூறியதாவது:
30 ஆண்டுகளாக ஓவியத்துறையில் இருக்கிறேன். 25 ஆண்டுகளாக தினமலர் நாளிதழின் வாசகராக உள்ளேன். அதன் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரால் ஈர்க்கப்பட்டவன். அவரது வாழ்க்கை வரலாறு மிகவும் புனிதமானது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தாம்பூலம் வைத்து அழைத்து மாநாடு நடத்தி பெருமை சேர்த்தவர்.
அவரது பிறந்த நாளில் தாம்பூல வடிவில் டி.வி.ராமசுப்பையர் ஓவியத்தை நானும், எனது மகளும் தனித்தனியாக வரைந்திருக்கிறோம். 1.5 அடி அகலம், 2 அடி நீளம், பிளாக்ஸ் கெட்ச், ஆயில் பேஸ்ட் மூலம் ஒரு நாளில் இந்த ஓவியத்தை வரைந்துள்ளேன்.
தினமலர் நிறுவனம் எனக்கு லட்சிய ஆசிரியர் விருது வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது. எனது வாழ்நாள் முழுவதும் டி.வி.ராமசுப்பையர், தினமலர் நாளிதழுக்காக எனது படைப்புகள் மூலம் நான் மரியாதை செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்றார்.
உதயநந்தினி கூறுகையில், ‘‘எனது தந்தை ஆண்டுதோறும் டி.வி.ராமசுப்பையரின் உருவப்படத்தை வரைவார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது கடல் தாமரை புத்தகத்தை வாசிக்க கொடுத்தார். அதில் தாம்பூலம் கொடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கான மாநாட்டிற்கு அழைத்தது பற்றிய ஓவியம் வரைய ஆர்வம் ஏற்பட்டது. 15 இன்ச் அகலம், 40 இன்ச் உயரத்தில் அட்டையில் டி.வி.ஆரின் ஓவியத்தை ஆயில் பெயிண்ட் மூலம் வரைந்து உள்ளேன்’’ என்றார்.
