UPDATED : மே 19, 2024 11:59 AM
ADDED : மே 18, 2024 11:48 PM

எ ன்னங்க இப்படி அடிக்குது வெயிலு, தாங்க முடியல. இந்த வருஷம் மாதிரி, எந்த வருஷமும் இப்படி அடிக்கிறத கண்டதில்ல. பலர் சங்கடப்பட்டு, கடந்த வாரம் வரை சொல்லியது இது. இப்படி சொல்லிய பலர் எங்காவது ஒரு மரம் இருந்தாலும், அங்கே நின்று வெயிலை தணித்துக் கொண்டனர்.
'மரம் தாய்;அதை மறந்தாய்'என்று, கவிஞர் அறிவுமதி சொன்னது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. சாலையோர மரங்களின் கீழே இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. பழக்கடைகளுக்கும் இடம் கொடுத்திருக்கிறது மரம்.
சமீபத்தில் சமூக வலைதளத்தில் கண்ட ஒரு காட்சி, மரத்தின் கீழே எடுக்கப்பட்ட வெப்பநிலை குறைவாகவும், மரத்துக்கு சற்று தள்ளி வாட்டும் வெயிலில் எடுக்கப்பட்ட வெப்பநிலை அதிகமாகவும் இருப்பதாக காட்டியது.
'உங்களுக்கு நான் எல்லாம் தருகிறேன்... என்னை வெட்டி வீழ்த்தி வருகிறீர்களே... இது நியாயமா?' என்று மரம் கேள்வி கேட்பது, எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்று, தெரியவில்லை.
ஆனாலும், மழை பெய்து வெப்பநிலை சற்று குறைந்து வருகிறபோதிலும், மரத்தின் அருமையை உணர்ந்து கொள்ளாமல், இயற்கையின் மீது நாட்டம் இல்லாமல் இருப்பது தான், இத்தனைக்கும் காரணம்.
வளர்ச்சி என்ற போர்வையில், மரங்கள் வெட்டி வீழ்த்தப்படும் போது, கூடுதலாக மரங்கள் வைக்கப்பட வேண்டும் என்று விதி இருந்தும், நடைமுறைப்படுத்துவது அப்படியே மறைந்து போனது.
அரசின் மீதும், குறிப்பிட்ட துறைகள் மீதும் கோபம் கொப்பளித்தாலும், இயற்கையை பாதுகாக்க நாம் என்ன செய்தோம் என கேள்வி, கண் முன்னால் வந்து போகிறதே.
அதற்கு பதில்... இப்போது மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. தென்மேற்கு பருவ மழையும் வர காத்திருக்கிறது. வீட்டுக்கு ஒரு மரம், வீதிக்கு பல மரம் என களமிறங்கலாமே.
ஒருவர் ஆரம்பித்தால், இருவர் வருவர். இப்படியே கிளை பரவும்.
வீட்டில் பழங்களை சாப்பிடும்போது, அதன் விதைகளை குப்பைத் தொட்டிக்குள் சேர்க்காதீர்கள். சேகரித்து வைத்து, வெளியில் போகும்போது, இந்த இடத்தில் மரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ, அந்த இடத்தில் விதைகளை கொட்டி விட்டு வாருங்கள். நிலம் அப்படியே பிடித்துக் கொள்ளும்.
எந்த ஒரு செயலையும் பிடித்து செய்வதில் தனி சுகம். இதை இயற்கைக்கும் கொடுப்போம்.

