sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

வேறுபாடுகளை கடந்து அன்பை பொழிந்தவர் வேலாயுதம்!

/

வேறுபாடுகளை கடந்து அன்பை பொழிந்தவர் வேலாயுதம்!

வேறுபாடுகளை கடந்து அன்பை பொழிந்தவர் வேலாயுதம்!

வேறுபாடுகளை கடந்து அன்பை பொழிந்தவர் வேலாயுதம்!

2


UPDATED : மே 12, 2024 10:36 AM

ADDED : மே 12, 2024 12:23 AM

Google News

UPDATED : மே 12, 2024 10:36 AM ADDED : மே 12, 2024 12:23 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண்டைக்காடு கலவரம் நிகழ்ந்த கன்னியாகுமரி பகுதியிலிருந்து, தமிழகத்தின் முதல் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக, 1996ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சி.வேலாயுதம். சமீபத்தில் இவரது மறைவை ஒட்டி எழுதப்பட்ட அஞ்சலி குறிப்புகளில், முஹம்மது அஸ்கர் எழுதிய பதிவு, என் கவனத்தை ஈர்த்தது. அதாவது, 'மாணவ பருவத்தில், தன் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த வேலாயுதம், தன் பேச்சுத்திறனை அடையாளம் கண்டு பாராட்டியதாகவும், அப்போது முதல், எப்போது தன்னை வீதியில் கண்டாலும், வாகனத்திலிருந்து இறங்கி நலம் விசாரித்து செல்வார்' என்றும், வேலாயுதம் பற்றி அஸ்கர் குறிப்பிட்டிருந்தார்.

தன் தந்தையாருடனும், வேலாயுதத்திற்கு ஆழமான நட்பு உருவாகியிருந்தது என்று தெரிவித்திருந்த அஸ்கர், பல நிகழ்வுகளை குறிப்பிட்டு, 'மனிதர்களை வேறுபடுத்தும், எல்லா வேறுபாடுகளையும் கடந்து அன்பை பொழிந்தவர் வேலாயுதம்!' என்றும் பதிவில் முடித்திருந்தார்.

வேலாயுதம் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்மநாபபுரம் தொகுதியைச் சேர்ந்த, திருவிதாங்காடு முஸ்லிம் கல்லுாரி தமிழ் பேராசிரியர்தான் அஸ்கர். அவரின் பதிவு, ஏராளமான இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களால், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதில் ஆச்சரியமே இல்லை.

நிலத்தை விற்று


வெறுப்பு பேச்சுகளால் சூழப்பட்டிருக்கும் இன்றைய அரசியல் களத்தில், தமிழகத்தின் நீண்ட நாகரிக அரசியல் மரபில், வலதுசாரி வழித்தோன்றல்களில் ஒருவர் வேலாயுதம். குமரி மாவட்டத்தில் மட்டுமே குவிந்திருக்கும், 'கிருஷ்ணன் வகை' சமூகத்தை சேர்ந்தவர். பெரிய எண்ணிக்கையோ, செல்வாக்கோ இல்லாத மிகச்சிறிய சமூகம் இது.

வேலாயுதம், 1950ல் பிறந்தவர். பள்ளி நாட்களில் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இணைந்தார். பத்மநாபபுரம் சட்டசபை தொகுதியில், 1989ல் அவரை வேட்பாளராக நிறுத்தியது பா.ஜ., கட்சி.

சாதாரண குடும்ப பின்னணியை சேர்ந்தவரான வேலாயுதம், தன் நிலத்தை விற்றும், உண்டியல் குலுக்கி திரள்நிதி சேகரித்தும் தான், தேர்தல் செலவை எதிர்கொண்டார்; இருந்தும் தோல்வியை தழுவினார். அடுத்து, 1991 தேர்தலிலும் தோல்வி கண்டார். பின், 1996 தேர்தலில் வெற்றி பெற்றார்.

கடந்த, 1996 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 221 இடங்களில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. அ.தி.மு.க., வெறும் நான்கு இடங்களை மட்டுமே பெற்றிருந்தது.

இதுதவிர, 40 லோக்சபா தொகுதிகளும் தி.மு.க., கூட்டணி வசமிருந்தன. 1996, -1998 கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் பிரதமர்களை தீர்மானிக்கும் இடத்தில், தேவகவுடா, குஜ்ரால் அரசில் வலுவான இடத்தில் கருணாநிதி இருந்தார். பார்லிமென்டில் எதிர்பக்கத்தில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., இருந்தது.

தமிழகத்தில், பா.ஜ., தனித்து நின்று எதிர்கொண்ட, 1996 சட்டசபை தேர்தலில், அதன் 143 வேட்பாளர்களில், வேலாயுதம் மட்டுமே வெற்றி பெற்றார்.

ஆச்சரியமூட்டும் வகையில், தமிழக சட்டசபையில் மிக இணக்கமான சூழல் நிலவியது. தன் தொகுதி நலன் சார்ந்து மட்டுமே பேசுபவராகவும், தனக்காக எதுவும் கோராதவராகவும் இருந்த வேலாயுதம், எல்லாரையும் கவர்ந்திருந்தார். வேலாயுதத்துக்கு மிகுந்த மரியாதை தந்தார் முதல்வர் கருணாநிதி. சட்டசபை ஆய்வுக் குழுவிலும் அவருக்கு இடம் கொடுத்தார்.

மிகுந்த மரியாதை


பொதுவாக இத்தகைய கூட்டங்கள் அறிவிக்கப்படும் நேரத்தை கடந்து ஆரம்பிக்கப்படுவதே, அந்த நாட்களில் வழக்கமாக இருந்தது. ஒருமுறை சரியாக 10:00 மணிக்கு கூட்டத்துக்கு வந்து விட்ட வேலாயுதம், 'மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நாமே இப்படி இருக்கலாமா?' என்று கேட்டிருக்கிறார்.

சகலரும் அதிர்ச்சியில் பார்க்க, 'நானும், 10 மணிக்கே வந்து விட்டேன். எல்லோரும் வந்து சேரட்டும் என்று, என் அறையில் அமர்ந்தபடி கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தேன்' என்று கூறிய கருணாநிதி, அதற்குப்பின் இந்தக் கூட்டங்கள் கொஞ்சமும் தாமதமின்றி நடத்தப்படுவதை உறுதி செய்தார்.

குமரி மாவட்டத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினரான வேலாயுதம் அழைக்கப்பட்டிருக்கிறார். அவரும் தவறாமல் பங்கேற்று இருக்கிறார்.

குமரியை தமிழகத்தோடுஇணைக்கும் எல்லை போராட்ட தியாகிகள், 172 பேருக்கு ஓய்வூதியம் அளிப்பது, மாம்பழத்துறையாறு அணை இவையெல்லாம் வேலாயுதம் முன்வைத்து, அரசால் அப்போது நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள்.

கடமைப்பட்டவன்


சட்டசபையில் ஒருமுறை ஹிந்துத்துவத்தையும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பையும் உயர்த்தி பேச தலைப்பட்டிருக்கிறார் வேலாயுதம். பலரும் குறுக்கிட்டிருக்கின்றனர். சட்டென்று எழுந்த கருணாநிதி, 'நாம் பேசும்போது அவர் கேட்டார் இல்லையா; இப்போது, அவர் பேச நாம் கேட்போம்' என்று சொல்லி நீண்ட நேரம் வேலாயுதம் பேச வழிவகுத்தார். இதை பின்னாளில் நினைவு கூர்ந்திருக்கிறார் வேலாயுதம்.

ஐக்கிய முன்னணி ஆட்சி கலைந்து, 1998ல் லோக்சபா தேர்தல் நடந்த போது, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அமைத்தது. அ.தி.மு.க., 18 இடங்களை கைப்பற்றியது.

அப்போது, மத்திய பா.ஜ., அரசுக்கு அ.தி.மு.க., விதித்த ஒரே நிர்பந்தம், 'மாநிலத்தில் உள்ள தி.மு.க., அரசை பதவி நீக்க வேண்டும்!' என்பதே. இதற்கு, பா.ஜ., செவி சாய்க்காத சூழலில் ஆதரவை திரும்ப பெற்றார் ஜெயலலிதா.

வாஜ்பாய் அரசு கவிழ்ந்து, நாடு இன்னொரு தேர்தலை எதிர்கொண்டது. இடைப்பட்ட காலத்தில் நடந்த மாற்றங்கள் எதுவும், வேலாயுதத்திடம் பெரிய மாற்றங்களை உண்டாக்கவில்லை. சட்டசபையில் எப்போதும் போல, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி உறுப்பினராக செயல்பட்டார்.

'அரசை எந்தெந்த விஷயத்தில் எதிர்க்க வேண்டுமோ, எதிர்க்கிறேன்; எங்கெல்லாம் மக்களுக்காக அரசுடன் உரையாட வேண்டுமோ, அப்போதெல்லாம் உரையாடுகிறேன். நான் என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் கடமைப்பட்டவன்' என்றார்.

அரசியல் கொதிநிலையில் இருந்த 1998ல், இதய நோயால் பாதிக்கப்பட்ட வேலாயுதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது, அவரை நேரில் சென்று கருணாநிதி சந்தித்தது தேசிய அளவில் செய்தியானது.

இதன்பின், 1999ல் தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்து தேர்தலில் வென்று, மத்தியில் கூட்டணி அரசும் அமைந்தது. 'பா.ஜ., தலைவர்கள் பலர், அப்போது தி.மு.க., உடன் நெருக்கமாகினர்; தனிப்பட்ட வகையில் பல காரியங்களை சாதித்துக் கொண்டனர்; அப்போதும், வேலாயுதம் முன்னர் போலவே இருந்தார்' என்கின்றனர்.

தன் வீட்டை தந்து


அடுத்து நடைபெற்ற, 2001, 2006 சட்டசபை தேர்தல்களில் வேலாயுதம் தோல்வியை தழுவினார். 'எனக்கு அரசியல் ஆர்வம் போய்விட்டது' என்றவர், சமூகப் பணிகளுக்கு களம் மாறிக்கொண்டார்.

ஆர்.எஸ்.எஸ்., சார்ந்த சேவா பாரதி அமைப்பானது, மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான காப்பகம் நடத்த இடம் தேடிய போது, புதிய கட்டடம் கட்டப்படும் வரை, தன் வீட்டை அவர்களுக்கு தந்து விட்டு, சேவா பாரதி அலுவலகத்தில், ஓர் அறையில் தங்கியிருந்தார் வேலாயுதம் என்றும் சொல்கின்றனர்.

உள்ளூர் பா.ஜ.,வில் ஒரு பிரிவினருக்கு வேலாயுதம் மீது வருத்தம் இருந்தது.

'கட்சியினர் பிரச்னை என்று, அவரின் உதவியை நாடினால், அவர்கள் மீது தவறில்லை என்றால் துணை வருவார்; இல்லாத பட்சத்தில் உதறி விடுவார்' என்ற பேச்சு குமரி வட்டாரத்தில் உண்டு. எல்லோரிடமும் அவர் இணக்கம் காட்டியதையும் கூட குறையாக பேசியோர் உண்டு. மக்கள் அவருடைய இந்த நாகரிக அரசியலுக்காகவே அவரை என்றும் நினைவு கூர்வர்!






      Dinamalar
      Follow us