/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
விழுப்புரத்தில் குளத்தை துார் வாரும் பொதுமக்கள்: அதிகாரிகளை நம்பி பலனில்லை என களத்தில் இறங்கினர்
/
விழுப்புரத்தில் குளத்தை துார் வாரும் பொதுமக்கள்: அதிகாரிகளை நம்பி பலனில்லை என களத்தில் இறங்கினர்
விழுப்புரத்தில் குளத்தை துார் வாரும் பொதுமக்கள்: அதிகாரிகளை நம்பி பலனில்லை என களத்தில் இறங்கினர்
விழுப்புரத்தில் குளத்தை துார் வாரும் பொதுமக்கள்: அதிகாரிகளை நம்பி பலனில்லை என களத்தில் இறங்கினர்
UPDATED : ஜூலை 06, 2024 10:45 AM
ADDED : ஜூலை 06, 2024 05:18 AM

விழுப்புரம்: விழுப்புரம் மகாராஜபுரத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த, மீனாட்சி குளம் பல ஆண்டுகளாக துார் வரப்படாமல் இருந்தது. அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்களே சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் நகரில், மிகவும் பழமை வாய்ந்த மகாராஜபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது.
முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்ட தோடு, அதனுடன் மீனாட்சி திருக்குளமும் உள்ளது. 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கோவில் மற்றும் கோவில் குளம் கடந்த காலங்களில் சிறப்பாக பராமரித்து வந்ததால், சுற்றுப் பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், ஆடு, மாடுகளுக்கு குடிநீர் தேவையும் பூர்த்தி செய்தும் வந்தது.
நகர விரிவாக்கம், குடியிருப்புகள் அதிகரித்ததன் காரணமாக நீண்டகாலம் குளத்தை பராமரிக்காமல் விட்டதால், குளம் ஆக்கிரமிப்பில் மூழ்கியது.
சில ஆண்டுகளுக்கு முன், கிராம மக்கள் சார்பில் கோவில் குளத்தை சீர்படுத்தி, மீட்டெடுத்து தண்ணீர் தேங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பிறகு பராமரிக்காமல் விட்டதால், மீண்டும் புதர்கள் மண்டி குளம் துார்ந்தது.
மிக பழமையான இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலையும், கோவில் குளத்தையும் சீரமைத்து தர வேண்டும் என கலெக்டருக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் சார்பில் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், கடந்த 45 ஆண்டுகளாக அதிகாரிகள் கவனிக்க முன்வரவில்லை.
இனியும் அதிகாரிகளை நம்பி பலனில்லை என கிராம மக்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய அறக்கட்டளையை ஏற்படுத்தி அதன் மூலம் கோவில் குளத்தை புதுப்பித்தும், கோவிலையும் தற்காலிகமாக புதுப்பித்து வழிபாடு நடந்து வருகிறது.
தற்போது கோவில் கும்பாபிஷேக பணிக்காக, புதிதாக கருங்கல் மண்டபத்துடன் கோவில் எழுப்பும் திருப்பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன் தொடங்கியது. அத்துடன் கோவில் குளத்தையும் சீரமைக்கும் பணி தொடங்கி இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.
பொக்லைன், ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் கோவில் குளத்தின் செடி, மரங்களை அகற்றி, துார் வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
குளத்தை ஆழப்படுத்தி, கரையையும் பலப்படுத்தி தண்ணீர் தேக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த குளத்திற்கு கோலியனூரான் வாய்க்காலிருந்து, தண்ணீர் வருவதற்கு வரத்து வாய்க்கால் உள்ளது.
அருகே பாண்டி மெயின் ரோட்டில் உள்ள அனிச்சம்பாளையம் சாலை சந்திப்பு பகுதியிலிருந்து வரும் அந்த நீர்வரத்து வாய்க்காலில் அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக பல ஆண்டுகளாக துண்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இங்குள்ள மழை நீர் மட்டும் குளத்தில் தேங்குகிறது. அதிலிருந்து, உபரி நீர் வழிந்து சாலை அகரம் செல்வதற்கு வாய்க்கால் உள்ளது.
ஆனால், குளத்துக்கான வரத்து வாய்க்கால் துண்டிக்கப்பட்டுள்ளதால், அந்த நீர்வரத்து வாய்க் காலை மெயின் ரோட்டில் இருந்து குளம் வரை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில் குளத்தையும், கான்கிரீட் சுற்றுச்சுவர் கட்டமைத்து நிரந்தரமாக தண்ணீர் தேக்குவதற்கும், குளத்தை அழகு படுத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராஜபுரம் பகுதி பொதுமக்களும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய அறக்கட்டளை நிர்வாகிகளும் கேட்டுக் கொண்டுள்ளனர்.