/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
எருமை யாருக்கு சொந்தம்? உ.பி., போலீசார் நுாதன தீர்ப்பு
/
எருமை யாருக்கு சொந்தம்? உ.பி., போலீசார் நுாதன தீர்ப்பு
எருமை யாருக்கு சொந்தம்? உ.பி., போலீசார் நுாதன தீர்ப்பு
எருமை யாருக்கு சொந்தம்? உ.பி., போலீசார் நுாதன தீர்ப்பு
ADDED : ஜூலை 07, 2024 01:25 AM

லக்னோ, உத்தர பிரதேசத்தில் ஒரே ஒரு எருமை மாட்டுக்கு, இருவர் உரிமை கொண்டாடிய நிலையில், பல மணிநேரம் பஞ்சாயத்து பேசியும் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து போலீசார் எருமையின் உண்மையான உரிமையாளரை நுாதன முறையில் கண்டுபிடித்து அவரிடம் மாட்டை ஒப்படைத்தனர்.
உ.பி., மாநிலம் பிரதப்கர் மாவட்டத்தின் மகேஷ்கஞ்ச் அருகேயுள்ள கிராமம், ராய் அஷ்கரன்பூர். இந்த ஊரை சேர்ந்த விவசாயி நந்த்லால் சரோஜ். இவருக்கு சொந்தமான எருமை மாடு, சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து மாயமானது.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மூன்று நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின், பக்கத்து கிராமமான புரே ஹரிகேஷில் ஹனுமன் சரோஜ் என்ற விவசாயி வீட்டில் எருமை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதை தர மறுத்ததுடன், எருமை தனக்கு சொந்தமானது என்று வாதிட்டார்.
இதையடுத்து நந்த்லால், கிராம பஞ்சாயத்தில் புகார் அளித்தார். பஞ்சாயத்து அமைப்பினர், நந்த்லால் மற்றும் ஹனுமன் ஆகிய இருவரையும் அழைத்து பேசினர். பல மணிநேரம் நடந்த விசாரணைக்கு பின்னும் எருமை யாருக்கு சொந்தம் என முடிவுக்கு வரமுடியவில்லை.
இதையடுத்து இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றது. போலீசார் அதிரடி யோசனை ஒன்றை தெரிவித்தனர். அதன்படி, எருமை யார் பின்னால் செல்கிறதோ அவர் தான் உண்மையான உரிமையாளர் என அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, இரு கிராமங்களுக்கும் பொதுவான ஒரு இடத்தில் எருமையை நிறுத்தி, நந்த்லாலையும், ஹனுமனையும் நடக்க செய்தனர். பின்னர் எருமையை அவிழ்த்து விட்டதும், அது, நந்த்லாலை பின்தொடர்ந்து, அவரது வீட்டுக்கு சென்றது.
இதையடுத்து, அவர் தான் எருமையின் உண்மையான உரிமையாளர் என போலீசார் முடிவு செய்து, அவருடன் அனுப்பி வைத்தனர். எருமையை திருடிய ஹனுமன் சரோஜை போலீசாரும், பொதுமக்களும் எச்சரித்து அனுப்பினர்.