UPDATED : ஜூலை 03, 2026 09:16 AM
ADDED : ஜூலை 03, 2026 06:45 AM

கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்து வரும் அகழாய்வில் இதுவரை 25 உறை கிணறுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2014ல் முதன் முதலில் நதிக்கரை நாகரீகம் குறித்த அகழாய்வு நடத்தியது.
இதில் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் கல்வி, தொழில்துறை, விவசாயம் ஆகியவற்றில் மேம்பட்ட சமூகமாக வாழ்ந்ததற்கான பொருட்கள் கிடைத்தன.அதன் பின் தமிழக தொல்லியல் துறை இன்று வரை வைகை ஆற்றை ஒட்டி உள்ள கீழடியில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. வைகை நதிக்கரையோரம் மக்கள் வாழ்ந்ததற்கான பொருட்கள் கிடைத்தாலும் வறட்சி காலங்களில் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தியிருக்கின்றனர். இதற்காக ஊற்று தோண்டி சுடுமண்ணால் செய்யப்பட்ட உறைகிணறுகளை பயன்படுத்தியுள்ளனர். மூன்று அடுக்கு முதல் 32 அடுக்கு வரையிலான உறைகிணறுகள் கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்டன.
6ம் கட்ட அகழாய்வில் 32 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டது. தமிழகத்திலேயே இதுதான் மிகப்பெரிய அடுக்குகள் கொண்ட உறைகிணறு. இவை குடிநீர், விவசாயம், நெசவு தொழில் ஆகியவற்றிற்கு பயன்படுத்தியிருக்க கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
11ம் கட்ட அகழாய்வில் கிடைத்த உறை கிணறு சற்று தொலைவில் தண்ணீர் கொண்டு செல்ல பயன்படுத்தும் சுடுமண் குழாய், செங்கற்களால் கட்டப்பட்ட வடிகால் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டது. எனவே இந்த இடத்தில் தொழிற்சாலை இயங்கி இருக்க கூடும். உறைகிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல வடிகால் அமைப்பு பயன்பட்டிருக்க கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கீழடி அகழாய்வில் இதுவரை அகரத்தில் 12 உறைகிணறுகளும், கீழடியில் தற்போது கண்டறியப்பட்ட உறைகிணற்றையும் சேர்த்து 13 உறைகிணறுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட சில உறை கிணறுகள் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவைகளாக இருக்க கூடும் என கருதப்படுகிறது. ஒன்றின் மேல் ஒன்றாகவும், ஒன்றுக்குள் ஒன்றாக சொருகும் அமைப்புடனும், ஒன்றினுள் ஒன்று இறுக்கமாக சேரும் வகையிலும் என மூன்று வித உறை கிணறுகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.
