/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ஆட்டுப்பால் விற்பனையில் அசத்தும் வாலிபர்
/
ஆட்டுப்பால் விற்பனையில் அசத்தும் வாலிபர்
UPDATED : டிச 15, 2024 03:41 PM
ADDED : டிச 14, 2024 11:20 PM

பட்டப்படிப்பு படித்து விட்டு நிறைய இளைஞர்கள் தங்கள் விரும்பும் வேலை கிடைப்பது இல்லை என்று புலம்பி கொண்டு இருப்பர். சிலர் வேலைக்கே செல்லாமல் கூட இருப்பர்.
ஆனால் சில வாலிபர்கள், 'வாழ நினைத்தால் வாழலாம்... வழியா இல்லை'; பூமியில் ஆழக் கடலும் சோலையாக ஆசை இருந்தால் நீந்தி வா என்ற பாடல் வரிக்கு ஏற்ப செயல்பட்டு வருகின்றனர். இவர்களில் ஒருவர் திலீப்.
கர்நாடகா - தமிழக எல்லையில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் யலந்துார் அருகே பன்னிசாரி கிராமத்தை சேர்ந்தவர் திலீப். பட்டதாரி. இவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. சோர்ந்து போகாத அவர், தனது தந்தை ரகுவுடன் சேர்ந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தார்.
பெரும் நகரங்களில் ஆட்டுப்பால் தேவை இருப்பது பற்றி திலீப்பிற்கு தெரிந்தது. இதனால் பஞ்சாபில் இருந்து பீட்டல் இனத்தை சேர்ந்த 10 ஆடுகளை வாங்கினார்.
அந்த ஆடுகளை, இந்த ஊர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு மாற்றினார். ஆடுகளை பராமரிக்க வீட்டின் பின்புறம் ஆடு பண்ணை ஒன்றையும் அமைத்தார். இயற்கையான உணவுகளை கொடுத்து நன்கு பராமரித்து வருகிறார். ஆடுகளிடம் இருந்து கறக்கப்படும் பாலை, பெங்களூருக்கு அனுப்பி வைத்து அதன் மூலம் நல்ல லாபம் பார்க்கிறார்.
இதுகுறித்து திலீப் கூறியதாவது:முதலில் பஞ்சாபில் இருந்து, பீட்டல் இனத்தின் 10 ஆடுகளை வாங்கி வந்தேன். அந்த ஆடுகளில் இருந்து கிடைக்கும் பால் சுவையாக இருந்ததால், அதை விற்பனை செய்தேன். ஆடுகளை வளர்ப்பதற்காக அரசு கடன் மற்றும் மானியம் வழங்குகிறது. தற்போது பல்பொருள் அங்காடிகளிலும், ஆட்டுப்பாலுக்கு அதிக டிமாண்ட் உள்ளது. ஒரு லிட்டர் பாலை, 100 ரூபாய் முதல் 125 ரூபாய் வரை விற்பனை செய்கிறேன். மூன்று நாட்களுக்கு ஒரு முறை பெங்களூருக்கு பால் அனுப்பி வைக்கிறோம். கீரைகள், சோளம், தினை புல் உள்ளிட்ட இயற்கை உணவுகளை தான் ஆடுகளுக்கு கொடுக்கிறோம்.
படித்து முடித்துவிட்டு, வேலை கிடைக்காமல் இருந்த போது, கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் இப்போது தன்னிறைவு வாழ்க்கை வாழ்கிறேன். ஆடு வளர்ப்பை இளைஞர்கள் நேசிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். வரும் நாட்களில் மேலும் ஆடுகளை வாங்க திட்டம் வைத்து உள்ளேன். வேலை இல்லை என்று யாரும் கவலைப்பட வேண்டாம். இந்த உலகில் எப்படி என்றாலும் வாழலாம். இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -