/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கராத்தேவில் கலக்கும் கல்லுாரி மாணவி
/
கராத்தேவில் கலக்கும் கல்லுாரி மாணவி
UPDATED : ஜன 03, 2025 03:09 PM
ADDED : ஜன 02, 2025 08:37 PM

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், வேறு விளையாட்டுகளுக்கு கிடைப்பது இல்லை. ஆடும் திறன் இருந்தால் போதும், கிரிக்கெட் வீரர்களுக்கு ஸ்பான்சர்கள் எளிதாக கிடைக்கின்றனர். தற்காப்பு கலையான கராத்தே போன்ற மற்ற விளையாட்டுகளுக்கு ஸ்பான்சர்கள் கிடைப்பது மிகவும் கஷ்டம்.
பெங்களூரு ராஜாஜி நகரில் வசிப்பவர் சைத்ரா ஸ்ரீ, 18. இவருக்கு சிறு வயதில் இருந்தே, கராத்தே என்றால் உயிர். ஒன்றாம் வகுப்பில் இருந்தே கராத்தே கற்று வருகிறார். இதில் பெரும் சாதனைகளையும் செய்துள்ளார். இவரது சாதனையை அடையாளம் கண்ட கர்நாடக அரசு, 2018ல் 'கெம்பே கவுடா' விருது வழங்கி கவுரவித்தது. கித்துார் ராணி சென்னம்மா விருது உட்பட பல்வேறு சங்க, அமைப்புகள் விருதுகள் வழங்கின.
சாம்பியன்
சிறிய வயதிலேயே சர்வதேச அளவிலும், தன் திறனை நிரூபித்துள்ளார். கோப்பை, பதக்கங்கள் வென்றுள்ளார். போலந்து, செர்பியா, பல்கேரியா, ஹங்கேரி, மால்டோவா நாடுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்று, 'சாம்பியன்' பட்டம் பெற்றுள்ளார். டில்லியில் நடந்த போட்டியிலும் பங்கேற்று, வெள்ளி, வெண்கலம் உட்பட ஆறு பதக்கங்களை பெற்றார்.
2019ல் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று, வெண்கல பதக்கம் வென்றார். கடந்த 2021ல் நடந்த சர்வதேச கராத்தே சாம்பியன் ஷிப்பில் வெள்ளி பதக்கம் பெற்றார்.
ஜாம்ஷெட்பூரில் நடந்த போட்டியில் வெள்ளி; 2022ல் தமிழகத்தின் ராசிபுரத்தில் நடந்த போட்டியில் வெண்கலம்; அதே ஆண்டில் கும்டேவில் நடந்த போட்டியில் தங்கம்; மைசூரில் நடந்த தசரா சாம்பியன்ஷிப்பில் தங்கம்; டேராடூனில் நடந்த கியோ ஆல் இந்தியா கராத்தே போட்டியில் வெண்கலம் வென்றார். 2023ல் நடந்த தென்னக கராத்தே சாம்பியன் ஷிப்பில் இரண்டாம் இடம் பெற்றார்.
ஏழை குடும்பங்களை சேர்ந்த பலர், கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டுகளில் சாதனை செய்கின்றனர். இந்தியா சார்பில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் திறன் இருந்தும், பண பிரச்னையால் கிடைத்த வாய்ப்புகளை இழக்கின்றனர்.
கராத்தே சாம்பியன் சைத்ராஸ்ரீயும், அதே சூழ்நிலையை எதிர் கொண்டுள்ளார். கடந்த முறை காமன்வெல்த் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்க, பண பிரச்னையே காரணம். இவரது பெற்றோர் தங்களின் கஷ்டத்தை ஒதுக்கி விட்டு, மகளின் சாதனைக்கு ஆதரவாக உள்ளனர்.
நண்பர்கள், பயிற்சியாளர் ஜெயகுமாரின் ஒத்துழைப்பால் அவர் சாதனை செய்துள்ளார். அவர் சர்வதேச அளவில் மேலும் சாதனை செய்ய பணத்தேவை உள்ளது. இவருக்கு அரசு தேவையான உதவிகளை செய்து, ஊக்கப்படுத்த வேண்டும் என, பலரும் வலியுறுத்துகின்றனர்.
படுசுட்டி
கராத்தே மட்டுமின்றி, படிப்பிலும் சைத்ராஸ்ரீ படுசுட்டி. அம்பேத்கர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், பி.இ., படித்து வருகிறார். விளையாட்டு , கல்வி என, இரண்டிலும் திறமையாக செயல்படுகிறார்.
சைத்ராஸ்ரீ கூறியதாவது: என் பெற்றோர், நண்பர்கள், பயிற்சியாளர் ஜெயகுமாரின் வழிகாட்டுதல், அகில இந்திய ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் தலைவர் அருண் மாச்சையா, முதன்மை செயலர் பார்கவ் ரெட்டியின் ஊக்கத்தால், என்னால் சாதனை செய்ய முடிந்தது. நாடு, வெளிநாடுகளில் சாதனை செய்ய வேண்டுமானால், லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும்.
என்னை போன்ற ஏழை திறமைசாலி விளையாட்டு வீரர்களை, அரசு அடையாளம் காண வேண்டும். அரசு, உள்ளாட்சி பிரதிநிதிகள் எனக்கு ஸ்பான்சர் செய்தால், என்னால் மேலும் சாதனை செய்து, நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -