/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கால், வாயால் ஓவியம் வரைந்து அசத்தல்; கல்லுாரி மாணவருக்கு குவியுது பாராட்டு
/
கால், வாயால் ஓவியம் வரைந்து அசத்தல்; கல்லுாரி மாணவருக்கு குவியுது பாராட்டு
கால், வாயால் ஓவியம் வரைந்து அசத்தல்; கல்லுாரி மாணவருக்கு குவியுது பாராட்டு
கால், வாயால் ஓவியம் வரைந்து அசத்தல்; கல்லுாரி மாணவருக்கு குவியுது பாராட்டு
UPDATED : ஜூன் 05, 2025 07:13 AM
ADDED : ஜூன் 04, 2025 08:42 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கல்லுாரி மாணவர், கால் மற்றும் வாயால் ஓவியங்களை வரைந்து அசத்துகிறார்.
பொள்ளாச்சி அருகே, கோவில்பாளையத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஆரோக்கியசாமி, எலிசபெத் ராணி தம்பதியின் மகன் வினோத் ஆல்வின்.
சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டி வந்தார். படிப்பு நேரம் போக, மீதம் உள்ள நேரங்களில், ஓவியங்களை வரைவது பொழுது போக்காக இருந்தது.
கொரோனா ஊரடங்கு காலத்தில், வீட்டில் இருந்த நேரத்தில், ஓவியத்திறமையை வளர்த்துக்கொள்ள ஆர்வம் காட்டினார். முதலில், கைகளால் வரைந்த ஓவியங்களை, கால்களில் பிரஸ்களை வைத்து வரைய பயிற்சி செய்தார்.
தற்போது, அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நடிகர்கள் என அனைவரது படங்களையும் தத்ரூபமாக, கால், வாயால் வரைந்து அசத்துகிறார்.
மாணவர் வினோத் ஆல்வின் கூறியதாவது:
பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், பி.காம்., பி.ஐ., படித்தேன். ஹிந்தியும் கற்றுக்கொண்டேன். தற்போது, ஆன்லைனில் எம்.பி.ஏ., படிக்கிறேன். ஓவியம் வரைவதால் மனம் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்ந்தேன்.
ஒவ்வொரு படங்களும் வரையும் போது புதியதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதனால், கொரோனா ஊரடங்கின் போது, வாய் மற்றும் கால்களில் பிரஸ்களை வைத்து ஓவியம் வரைய முயற்சித்தேன். முதலில் கஷ்டமாக இருந்ததாலும், தொடர் பயிற்சியால் எளிதாக முடிந்தது. இரண்டு கால்களை கொண்டும், வாயாலும் ஓவியம் வரைய முடிந்தது.
கலாம் உலக சாதனை புத்தகத்தில் எனது சாதனை இடம் பெற்றுள்ளது. பெற்றோர், போலீஸ் எஸ்.ஐ., மைக்கேல், ஆசிரியர்கள் என அனைவரும் எனது முயற்சிக்கு உறுதுணையாக இருந்தனர். ஓவியம் ஒரு அற்புதக்கலை; நம்மை அது ஒழுங்குபடுத்துகிறது.
என்னிடம் உள்ள திறமையை, மாணவர்களுக்கு கற்றுத்தர அரசு வாய்ப்பு கொடுத்தால் பயனாக இருக்கும். அரசு ஓவியக்கலையை ஊக்குவிப்பதன் வாயிலாக, அழியாமல் பாதுகாக்க முடியும்.
இவ்வாறு, கூறினார்.