அள்ளுவது மட்டும் தான் குப்பை.. உள்ளத்தில் துள்ளுவது தூய்மை
அள்ளுவது மட்டும் தான் குப்பை.. உள்ளத்தில் துள்ளுவது தூய்மை
UPDATED : ஜூலை 19, 2026 02:32 PM
ADDED : ஜூலை 18, 2026 04:31 PM

'குப்பை அள்ற ஆள்தானே… தள்ளி நில்லுப்பா..'
”இதுதான் சமூகம் எங்களுக்கு கொடுத்த முதல் மரியாதை” என்று வறண்ட புன்னகையுடன் பேச தொடங்குகிறார் ஆறுமுகம்.
முப்பது நாற்பது ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து ஓய்வு பெற்ற சிலரை ஒரே இடத்தில் பார்த்தபோது, அவர்கள் சந்தித்த சவால்களை கேட்டு தெரிந்து கொள்ள ஆர்வம் எழுந்தது.
”எங்க சிட்டி ஆபீசுக்கு வருவீர்களா? டீ குடித்து கொண்டே பேசலாம்?” என கேட்டபோது மகிழ்ச்சியாக தலையாட்டினர். ஆறுமுகம், ரவி, சந்திரா, இந்திராணி, துளசியை வரவேற்று பத்திரிகை நிருபர்கள் வேலை செய்யும் இடத்தை சுற்றிக் காட்டினோம். ரிலாக்சாக அமர்ந்து அவர்களோடு நடத்திய உரையாடலில் இருந்து...
ஆறுமுகம்: நாங்க வேலைக்கு சேர்ந்த காலத்துல இருந்து இப்போ வரைக்கும் ரொம்ப மாறி இருக்குங்க. அன்னிக்கு தினமும் 9 ரூபாய் 50 பைசா சம்பளம். மோட்டார் வண்டி, கிளவுஸ் எதுவும் கிடையாது. வெறும் கையிலதான் குப்பை அள்ளணும். மழை வந்துச்சுன்னா பூ மார்க்கெட் பக்கமா போகவே முடியாது. கொழகொழான்னு அள்ளும்போது குமட்டும். வயித்துப் பாடு ஆச்சே. சகிச்சுகிட்டு செஞ்சோம். அப்புறம் பழகிருச்சு.
ரவி: இப்போ மக்கும் குப்பை, மக்காத குப்பைன்னு பிரிக்கிறாங்க. அப்போ மனுஷ கழிவு, மிருக கழிவு, வீட்டு குப்பை எல்லாமே ஒண்ணாதான் கிடக்கும். கூடைல அள்ளி தலைல சுமப்போம். உடம்பு முழுக்க வழியும். மூணு மூணு பேரா சேர்ந்து வேலை செய்வோம்.
துளசி: உடம்பு கஷ்டம் பெருசா தெரியாதுங்க. மனசு ரொம்ப வலிக்கும்.
ஆறுமுகம்: ஆமாங்க. வெலை முடிஞ்சு வீடு போக பஸ்ல ஏத்த மாட்டாங்க. பாத்தாலே நாலு அடி தள்ளி போவாங்க. கழிவு சுமக்ற வேல செய்றான்னு சொல்லி எங்களுக்கு பொண்ணு கொடுக்க மாட்டாங்க.
சந்திரா: அதெல்லாம் நாங்க தான் செய்றோம். ஆனா எதுவும் தெரியாத எங்க குழந்தைகளையும் ஒரு மாதிரியாதான் நடத்துவாங்க. அதான் ரொம்ப வலிக்கும்.
இந்திராணி: அப்பலாம் பொது கழிப்பிடம் எல்லா தெருவுலயும் இருக்கும். வசதியானவங்க தான் வீட்லயே கக்கூஸ் கட்டிக்குவாங்க. பொது கழிப்பறை சுத்தம் செய்ய மாசம் ஒருத்தரை சுழற்சி முறைல அனுப்புவாங்க. தேங்காய் சிரட்டைல ஒரு குச்சிய மாட்டி கழிவுகளை வழிச்சு எடுக்கணும். அதை பக்கெட்டுல கொட்டி, வண்டியில கொண்டு ஊத்தணும்.
சந்திரா: மனுஷ கழிவை மனுஷனே அள்ள கூடாதுன்னு சட்டம் வந்த பிறகுதான் கொஞ்சம் நிம்மதி வந்துச்சு. நிறைய படிச்சவங்க, பல ஊருக்கு போய்ட்டு வந்தவங்க கொஞ்சம் அக்கறையா பேசுவாங்க. மத்தபடி யாரும் ஒதுங்கி தான் போவாங்க. அத பாத்து பாத்து மனசு மரத்து போச்சு. கோவமெல்லாம் கிடையாது.
துளசி: யார்கிட்டயும் மரியாத குறைவா பேச மாட்டோம். திட்டினா கூட பேசாம கேட்டுக்குவோம்.
சந்திரா: பாப்பநாயக்கன்பாளையத்துல சாக்கடை அள்ளும்போது ஒரு பர்ஸ் கிடந்துது. நிறைய பணம் இருந்துச்சு. ஒரு ஓட்டல் காரரோடது. கொண்டு போய் குடுத்தோம். இன்னைக்கும் அவர் பாத்தா அன்பா விசாரிப்பார்.
ஆறுமுகம்: தீபாவளி அன்னைக்கு டவுன்ஹால்ல ஒரு அம்மா பைய தவறவிட்டுட்டாங்க. நிறைய பணமும் நகையும் இருக்கு. எடுத்துட்டு போய் போலீஸ்ல குடுத்தோம். அவங்க ஆளனுப்பி அந்த அம்மாவ வரவச்சாங்க. அவங்க நகைய வாங்கிகிட்டு கண்ணீரோட எங்கள வாழ்த்தினாங்க. கண்ணுக்குள்ளயே நிக்குது.
ரவி: அப்பலாம் குழந்தைய கூட குப்பைல வீசிட்டு போயிடுவாங்க. மூணு குழந்தைகளை காப்பாத்தி, நாங்களே தத்தெடுத்து வளத்தோம். இன்னைக்கு அதுங்களுக்கே கல்யாணமாகி, அவங்க குழந்தைகளும் ஸ்கூலுக்கு போறாங்க.
எல்லாரும் சிரிக்கிறார்கள். பெருமை கலந்த மகிழ்ச்சி.
ஆறுமுகம்: காலைல 3 மணிக்கு எழுந்து, மாட்டு வண்டிய ஓட்டிக்கிட்டு 5.30 க்கு ஆபீஸ் போய் கையெழுத்து போடணும். தினமும் 2 தடவ குப்பை எடுக்கணும். வண்டிலயே ஏத்திட்டு போய் 10 மைல்ல இருந்த எரு கம்பெனில (கம்போஸ்ட் நிலையம்) கொட்டிட்டு, மறுபடி வண்டி பேட்டைக்கு திரும்பி, மாடுகளுக்கு தண்ணீர் காட்டிட்டு வீடு திரும்ப 6 மணி ஆயிரும். இப்போ பரவால்ல, ரெண்டு மணிக்கெல்லாம் வேலைய முடிச்சுட்டு கையெழுத்து வாங்கிடுறாங்க.
சென்னை பெங்களூரு போன்ற பெருநகரங்களில் தனியார் நிறுவனங்கள் தூய்மை பணிக்கு பொறுப்பேற்ற பிறகு, தொழிலாளர்களின் வாழ்க்கை முறையில் நிகழும் மாற்றங்கள் குறித்து இவர்களுக்கு அதிகமாக தெரியவில்லை.
”எல்லா வேலையும் கஷ்டந்தாங்க. எங்க வேலை குப்பை அள்றதுங்றதால இன்னும் கொஞ்சம் கஷ்டம்ங்க.. வேற ஒண்ணும் இல்ல” என்று வெள்ளந்தியாக சிரிக்கிறார்கள்.
