/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
தடகளத்தில் தடம் பதிக்கும் ‛தாத்தா'; 78 வயதில் சாதிக்க துடிக்கும் மனம்
/
தடகளத்தில் தடம் பதிக்கும் ‛தாத்தா'; 78 வயதில் சாதிக்க துடிக்கும் மனம்
தடகளத்தில் தடம் பதிக்கும் ‛தாத்தா'; 78 வயதில் சாதிக்க துடிக்கும் மனம்
தடகளத்தில் தடம் பதிக்கும் ‛தாத்தா'; 78 வயதில் சாதிக்க துடிக்கும் மனம்
ADDED : ஜன 15, 2024 11:11 PM

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த 78 வயது முதியவர் மூத்தோர் தடகள போட்டிகளில் முத்திரை பதித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வருகிறார்.
இளைய தலைமுறையினர் ஏழு வயதிலேயே உடல் பருமன் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டு நடக்கவே சிரமப்படும் நிலையில் 78 வயதில் தடகள போட்டிகளில் அசத்தி வருகிறார்.
திருப்புவனம் புதூரை சேர்ந்தவர் துரைப்பிச்சை 78. விவசாயியான இவர் பிளஸ் 2 வரை படித்து விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுகிறார். புதூரில் இருந்து திருப்புவனம் நகருக்கு நாள் ஒன்றுக்கு பத்து முறை நடந்தே சென்று வருகிறார். தினசரி நடந்தே வயலுக்கு சென்று வருவதாக கூறும் இவர் இந்த வயதில் கூட வயலில் இறங்கி பணியாற்றுகிறார்.
வரப்பு வெட்டுவது , வாழை , தென்னைக்கு தண்ணீர் பாய்ச்சுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பள்ளியில் படிக்கும் போதே தடகளத்தில் ஆர்வம் கொண்டு போட்டிகளில் பங்கேற்று அப்போதைய அமைச்சர் நெடுஞ்செழியனிடம் பரிசு பெற்றதை பெருமையுடன் நினைவு படுத்துகிறார்.
முழுக்க முழுக்க விவசாயத்தில் ஈடுபட்டாலும் தினசரி மைதானம் சென்று 10கி.மீ., வரை நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த 2012 முதல் மூத்தோர் தடகள போட்டிகளில் பங்கேற்று மாநில மற்றும் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை பெற்று பரிசு வென்றுள்ளார்.
2013ல் கர்நாடகாவில் நடந்த 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும், மாநில அளவில் நெல்லையில் இருமுறை வெள்ளி பதக்கமும், திருச்சி, காரைக்குடியில் நடந்த போட்டிகளில் வெண்கல பதக்கமும் பெற்றுள்ளார்.
100 மீ., 400 மீ., 500 மீ., ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெள்ளி, வெண்கலம் வென்றுள்ள இவருக்கு தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள்.
துரைப்பிச்சை கூறுகையில் :
சிறுவயதில் இருந்தே தடகளத்தில் ஆர்வம் அதிகம், பள்ளி அளவிலேயே கபடி, ஓட்டப்பந்தயத்தில் பரிசு பெற்றேன். படிப்பு முடிந்த உடன் விவசாய பணிகளில் ஈடுபட தொடங்கி திருமணம் முடிந்தது. அதன்பின் போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும் பயிற்சியை கைவிட்டதே இல்லை.
2012ல் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் போட்டியில் பங்கேற்க தொடங்கி இன்று வரை ஹரியானா, திருவனந்தபுரம், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகம் சார்பாக பங்கேற்று பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளேன்.
மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெள்ளி, வெண்கலம் பதக்கம் பெற்றுள்ளேன். தடகளத்தில் தங்கம் வெல்வதே லட்சியம். இன்றும் தினசரி காலை ஐந்து மணிக்கு எழுந்து மைதானத்தில் காலை 9 மணி வரை பயிற்சி மேற்கொண்டு வருகிறேன், போட்டிக்காக தயாராகும் சமயத்தில் மட்டும் கூடுதலாக பயிற்சி மேற்கொள்வேன், என்றார்.
///