நடிகர் மம்முட்டியின் உதவியால் கேட்கும் திறன் பெற்ற இரு குழந்தைகள்
நடிகர் மம்முட்டியின் உதவியால் கேட்கும் திறன் பெற்ற இரு குழந்தைகள்
UPDATED : ஆக 19, 2026 12:25 AM
ADDED : ஆக 19, 2026 12:21 AM

கூடலுார்: கேரள மாநிலம் வண்டிப்பெரியாறில் பிறவியிலேயே கேட்கும் திறனை இழந்த இரு குழந்தைகளுக்கு நடிகர் மம்முட்டியின் உதவியால் கேட்கும் திறன் பெற்றனர்.
வண்டிப்பெரியாறைச் சேர்ந்த சோனு -- போபினா தம்பதி குழந்தைகள் மிஹாயேல் 6, மிஹோக் 3. இருவருக்கும் பிறவிலேயே காது கேட்கும் திறன் குறைபாடு இருந்தது. அவர்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உள்காதில் கேட்கும் செல்களில் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இரு குழந்தைகளுக்கும் உள்ள பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சிறுவயதிலேயே 'கோக்ளியர் இம்பிளான்ட்' அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவர்களின் கேட்கும் திறனை மேம்படுத்த முடியும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இச்சிகிச்சைக்கு ரூ.25 லட்சம் செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சோனு தம்பதியினரால் இச்செலவை செய்ய முடியாத நிலையில் தவித்தனர்.
இந்நிலையில் நடிகர் மம்முட்டியின் 'கேர் அன்ட் ஷேர் இன்டர்நேஷனல் பவுண்டேஷன்' மற்றும் ஆலுவா ராஜகிரி மருத்துவமனை இணைந்து காதோடு காதோரம் திட்டத்தின் மூலம் இலவசமாக கோக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
டாக்டர்கள் ராஜேஷ் ராஜு, சஜித் ஆபிரகாம், மயக்கவியல் நிபுணர் ஜோஜி ஆண்டனி கொண்ட மருத்துவ நிபுணர் குழு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்தது. கேட்கும் திறன் குழந்தைகளுக்கு கிடைத்ததால் பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
நடிகர் மம்முட்டி குழந்தைகளுக்கு வழங்கிய கேட்கும் திறன் தான் எங்கள் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய ஓணம் பரிசு என தம்பதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
