PUBLISHED ON : ஆக 02, 2024 12:00 AM

வணிகத்தை விட உயிர் பெரிது!
வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்கொளத்துார், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காடுகளை அழித்து, தோட்டப்பயிர் வளர்ப்பதே வயநாடு நிலச்சரிவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. 'அடர்ந்திருக்கும் காடு உடையதே பாதுகாப்பு அரணாகும்' என்கிறார் திருவள்ளுவர்.
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துஉள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், வயநாடு பேரிடருக்கான காரணம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து
தெரிவித்து உள்ளனர்.
காலநிலை விஞ்ஞானியும், புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலருமான ராஜீவன் கூறுகையில், 'கேரளாவில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இத்தகைய தொடர் மழையால், மண்ணில் ஈரப்பதம் உச்சபட்சத்தை எட்டும் போது, தெவிட்டு மண்ணாகி கரைந்து உருண்டோடி
விடும்.'இப்படியிருக்க, பாரம்பரிய காட்டு மரங்கள் அடியாழம் வரை வேர் பரப்பி, மணலை இறுக பற்றிக்கொள்ளக்கூடியவை. அதுவே ரப்பர் மாதிரியான
தோட்ட மரங்களின் வேர்களால் அவ்வளவாக மணலை இறுக பற்றிக்கொள்ள முடியாது.
'மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வணிக நோக்கத்துக்காக தோட்டப்பயிர்கள் பெருமளவில் விளைவிக்கப்படுவதால், தற்போதைய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது'
என்றார்.இனியேனும், காடுகளை அழித்து, தோட்டப்பயிர் வளர்ப்பதை தவிர்ப்பது நம் கடமை. ஏனெனில், உயிர்களைக் காக்கும் நோக்கம், வணிக நோக்கத்தை விட பெரிது. யோசிப்போம்!
எல்லா மாநில பேரையும் சொல்லுங்கப்பா!
எஸ்.ஆர்.சுப்பு, ஆம்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்திலிருந்து டில்லி சென்றுஉள்ள, 40 பேர், என்ன செய்கின்றனர் எனத் தெரியவில்லை. 'மீம்ஸ்' மன்னர்கள் இவர்களை வெளுத்து வாங்கு
கின்றனர்.நடக்கின்ற சம்பவங்கள் அந்த மீம்ஸ்களை மெய்ப்பிப்பது போலவே உள்ளன.'அனைவருக்குமான உணவு தட்டுகள் காலி செய்யப்பட்டு, இரண்டு தட்டுகளில் மட்டும் பக்கோடாவும், ஜிலேபியும் வைக்கப்பட்டுள்ளன' என, ஆந்திராவுக்கும், பீஹாருக்குமான நிதி ஒதுக்கீட்டைக் குறிப்பிட்டு,
காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகிறார்.
அதற்கு, 'மாநிலங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை என்ற காரணத்திற்காக, அந்த மாநிலங்களே புறக்கணிக்கப்பட்டு விட்டன என மூர்க்கத்தனமாக பேசுவதா?' என, நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் சீறுகிறார்.சரி. மத்திய பட்ஜெட் உரையில் மாநிலங்களின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டுமெனும் போது, மாநில பட்ஜெட்டில் மாவட்டங்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்க வேண்டும் தானே?
பிப்ரவரி 2024ல், தி.மு.க., அரசு தாக்கல் செய்த, 2024- - 25ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், அவர்கள்
கூற்றுப்படி நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில், 27 மாவட்டங்களின் பெயர் இடம் பெறவில்லை.
அரியலுார், செங்கல்பட்டு, கடலுார், தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை.
தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருப்பத்துார், திருப்பூர், நீலகிரி, வேலுார் மற்றும் விழுப்புரம் ஆகியவையே, அந்த விடுபட்ட, 27 மாவட்டங்கள்.
அது மட்டுமல்ல... 2004- - 2014 தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, 8,054 கோடி.
பா.ஜ.,வின் 2014 - 24 ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி, 1,05,150 கோடி; போதுமா கணக்கு?பாலச்சந்தர் இயக்கிய, நுாற்றுக்கு நுாறு படத்தில் ஒரு காட்சி வரும்.சுவரில் மாட்டப்பட்டி ருக்கும் காலண்டரை திருப்பி, நாகேஷ் அதன் நடுவில், பேனாவால் ஒரு புள்ளி வைப்பார். பிறகு தன் தந்தையைப் பார்த்து, 'இது என்ன?' என
வினவுவார். அதற்கு நாகேஷின் தந்தை, 'தெரியாதா... இது கருப்பு புள்ளி' என்பார். அப்போது நாகேஷ், 'பார்த்தீர்களா? இந்த காலண்டர் முழுதும் உள்ள வெள்ளை பகுதி உங்கள் கண்களுக்கு புலப்படவில்லை. இந்த கருப்பு புள்ளி தான்
கண்ணுக்கு தெரிகிறது' என்பார்.அதுபோல, காமாலை கண் கொண்டு பார்க்கும் கழகத்தினருக்கு, மத்திய அரசு தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக ஒதுக்கியுள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கோடிகள், நிதியாக தெரியவில்லை; பட்ஜெட் உரையில், தமிழ்நாடு என குறிப்பிடாதது மட்டும் தான் பெரிதாக தெரிகிறது.
விபரம் தெரியாமல் இந்த அறிவாளிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கு, அங்கேயே, அப்பொழுதே உடனடியாக அங்குள்ள புத்திசாலிகள் தக்க பதிலடி கொடுத்து விடுகின்றனர்.
ஆனால், இந்த அறிவாளிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகளை மட்டும் தான் இங்கு தமிழகத்திலுள்ள ஊடகங்கள் வெளியிடுகின்றனவே தவிர,
அந்த புத்திசாலிகள் கொடுக்கும் பதிலடிகளை சாமர்த்தியமாக தவிர்த்து விடுகின்றன.இனி மத்தியில் ஆட்சியில் இருக்கும் நிதியமைச்சர்கள் ஒவ்வொருவரும், அந்தந்த ஆண்டுக்கான பட்ஜெட் உரையை பார்லி.,யில் வாசிக்கும் போது, நாட்டிலுள்ள எல்லா மாநிலங்களின் பெயர்களையும் வரிசை யாக கூறி, இந்த பட்ஜெட் இந்த மாநிலங்கள் அனைத்துக்குமான பட்ஜெட் என்று
சொல்லிவிட்டு வாசிக்க துவங்கலாம்.
உணவுபொருட்களிலும்நஞ்சு!
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: மக்கள் அன்றாடம் வாங்கி உண்ணும் பல உணவுகளில், நஞ்சு கலந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
ஆந்திரா மிளகாய் பொடியில் ரசாயனம், பஞ்சு மிட்டாயில் ரசாயனம்,மாங்காய் பழுக்க ரசாயனம், வாழைப்பழம் பழுக்க ரசாயன கல், மீன்கள் கெடாமல் இருக்கவும் நச்சு கலப்பு என, எங்கே போகிறோம் நாம்?
சமீபத்தில் கீரை வாடாமல் இருக்க ஏதோ மருந்து தெளித்து, அதற்குப் புத்துயிர் வருவது போல ஒரு வீடியோ பார்த்தேன். தலைசுற்றியது!
புற்றுநோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள, என்னவெல்லாமோ செய்து கொள்ளும் நாம், நம்மை அறியாமல் இப்படி உணவில் நச்சு கலப்பதை எப்படி கண்டறியப் போகிறோம்?
அச்சமாக இருக்கிறது வாழ்வதற்கே. அரசு தான் ஏதாவது செய்ய வேண்டும். செய்யுமா?
*********************