sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

மக்களை முட்டாளாக்காதீர்கள்!

/

மக்களை முட்டாளாக்காதீர்கள்!

மக்களை முட்டாளாக்காதீர்கள்!

மக்களை முட்டாளாக்காதீர்கள்!


PUBLISHED ON : ஜூன் 23, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 23, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெ.ஆத்மநாதன், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆடத் தெரியாதவள், தெரு கோணல் என்றாளாம்' என்பது நம் கிராமத்து பழமொழி. அதுபோலவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரும், ஜனநாயக முறையில் தேர்தல் நடக்காது என்பதால், புறக்கணிப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு நல்ல எதிர்க்கட்சியின் பணி, ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி, அதை ஜனநாயக முறையில் எதிர்கொள்வது தான். மக்களாட்சியில் வலுவான எதிர்க்கட்சியே மிக முக்கியமானதாகும்.

பலம் வாய்ந்த எதிர்க்கட்சி அமைந்தால் தான், ஆட்சியாளர்கள் தவறு செய்ய அஞ்சி, மக்கள் நலனில் நாட்டம் செலுத்துவர். உப்பு, சப்பில்லாத காரணங்களை முன் வைத்து, தேர்தல் களத்தில் இருந்து பின்வாங்குவது எந்த அரசியல் கட்சிக்கும் ஏற்புடையது அல்ல.

உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சியாக அ.தி.மு.க., இருக்குமானால், இடைத்தேர்தலில் தவறுகள் நடக்காவண்ணம் பார்த்துக் கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டும். சட்டப்படி இடைத்தேர்தல் நடைபெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி, நேர்மையாக நடைபெறாது என்று இப்போதே சொல்லும் இவர்கள், உண்மையான மக்கள் நலம் விரும்புபவர்களாக இருந்தால் அதை முறியடிக்க முயற்சிக்க வேண்டாமா?

பழனிசாமிக்கு, 'துணிவானவர்' என்ற பட்டத்தை மீடியாக்கள் தந்ததே. ஆனால், எப்போது அவர் ஒற்றை தலைவராக உருவெடுத்தாரோ, அன்று முதல் அவரிடம் இருந்து துணிச்சலான நடவடிக்கைகள் எதையும் எதிர்பார்க்க முடியவில்லை. நம் தலைவர்கள் பலரிடம், 'கை' சுத்தம் இல்லாததே இதற்கு காரணம்.

ஆளுங்கட்சிக்கு எதிராக அதிகமாக குரல் கொடுத்தால், லஞ்ச ஒழிப்பு, 'ரெய்டு' வருமோ என்ற பயம் தான் இதற்கு காரணம். எனவே, அரசியல்வாதிகளே... உங்கள் சுயநலத்திற்காக எடுக்கும் முடிவுகளை மக்கள் மீது திணித்து அவர்களை முட்டாளாக்க வேண்டாம். இப்படி செய்தால், மக்கள் மன்றத்தில் இருந்து படிப்படியாக காணாமல் போய் விடுவீர்கள்.

கள்ளச்சாராயத்திலும் முதலிடத்தில் தமிழகம்!


மா.சண்முகசுந்தரம், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின் அரசு, கள்ளச்சாராயம் குடிப்பவர்களை ஊக்கப்படுத்துகிறதா?

கள்ளச்சாராய சாவுகள் பற்றி கேள்விப்படும் ஒவ்வொருவரும், இந்த அரசை நினைத்து வெட்கப்பட வேண்டும். கள்ளச்சாராய பலிகளுக்கு பொறுப்பேற்று, சம்பந்தப்பட்ட அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டாமா... அமைச்சர்களுக்கெல்லாம் பதவி ஒன்று தான் முக்கியமா... மனிதாபிமானம் என்பதை மறந்து விட்டனரா...?

கள்ளச்சாராய பலிகளையும், சீரழிவுகளையும் நிறுத்த முடியாவிட்டால், ஏன் நீங்கள் ஒரு அரசை நடத்த வேண்டும். கள்ளச்சாராய பலிகளுக்காக மாவட்ட நிர்வாகத்தில், 10 பேரை சஸ்பெண்ட் செய்து விட்டு, 'நடவடிக்கை எடுத்து விட்டோம்' என்று சால்ஜாப்பு சொல்வதற்கு வெட்கப்பட வேண்டாமா?

சஸ்பெண்ட் செய்தால் மட்டும் கள்ளச்சாராய இழப்புகள் இனி நடைபெறாதா அல்லது கள்ளச்சாராய வியாபாரிகள் தான் ஒழிந்து விடுவரா?

கள்ளச்சாராய வியாபாரிகள் தி.மு.க.,வினராக இருந்தால், எப்படி அவர்களை ஒழித்துக்கட்ட முடியும். மாவட்ட நிர்வாகம் என்ன தான் செய்ய முடியும். அரசியல் தலையீடு இருப்பதால் தானே, அரசு அதிகாரிகள் செயலற்று நிற்கின்றனர் என்பதை ஸ்டாலின் அரசு அறியவில்லையா?

தற்போது நடந்த கள்ளச்சாராய பலிகளுக்கு மாநில உளவுத்துறையும் காரணம். துறை பொறுப்புகளை கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவது தானே முறையாக இருக்கும். அதை விடுத்து, 'ஒரு லட்சம் சாராய வழக்குகள் பதிவு செய்துள்ளோம்' என்று பெருமை அடிப்பது சரியா?

'முதலிடத்தில் உள்ளோம், மூன்றாம் இடத்தில் உள்ளோம்' என்று அடிக்கடி மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், கள்ளச்சாராய விற்பனையிலும், சாவுகளிலும் முதலிடத்தில் இருப்பதை மார்தட்டி சொல்ல வேண்டியது தானே.

எத்தனையோ முன்னேற்றங்களை கண்ட தமிழகம், மேலும் பல சாதனைகளை செய்ய, மது என்ற அரக்கனை முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும். அப்போது தான், தமிழகம் தலைநிமிர முடியும்.

மறு ஓட்டுப்பதிவுக்கு தயாரா ராகுல்?


எஸ்.ராமசுப்ரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தீராத வியாதியில் பீடிக்கப்பட்டிருப்பவன், 'எதைத் தின்றால் பித்தம் தீரும்' என்ற நோக்கில், யார் எதைச் சொன்னாலும் வாங்கிச் சாப்பிட்டு, வியாதியை தீவிரப்படுத்திக் கொள்வான்.

பிரதமர் கனவு கண்டு ஏமாந்த நிலையில் இருக்கும் ராகுலும், அந்த நிலையில் தான் இருக்கிறார்.

தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியையும், பா.ஜ.க.,வையும், பிரதமரையும் சகட்டு மேனிக்கு வரம்பு மீறி, வசைபாடுவதையே வாடிக்கையாக்கி கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ராகுலிடம், அப்படி சிக்கிக் கொண்டிருப்பவர், மிகப் பெரும் பணக்கார தொழிலதிபரான எலான் மஸ்க்.

இந்த மஸ்குக்கும், மோடிக்கும் ஏற்கெனவே, வாய்க்கால் வரப்பு பிரச்னை உண்டு.

அந்த பிரச்னையில் குளிர்காயும் நோக்கத்தோடு, சம்பந்தம் இல்லாமல், நம் நாட்டில் நடந்த தேர்தல் குறித்து கருத்து சொல்லி இருக்கிறார் மஸ்க்.

'மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை நம்ப முடியாது. மனிதர்களால் அல்லது செயற்கை நுண்ணறிவால் அதில் மாற்றங்கள் செய்ய முடியும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கைவிட வேண்டும்' என எலான் மஸ்க், சமூக வலை தளங்களில் பதிவிட்டிருந்தார்.

எலான் மஸ்கின் இந்த வலைதள பதிவை, உடும்பு பிடியாக பிடித்து கொண்ட ராகுல், ஆட்சி பீடத்தில் அமர இயலாத ஆத்திரத்தில், 'நம் நாட்டில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், விமானங்களில் இருக்கும் கருப்பு பெட்டி போன்றது. அதை யாரும் பரிசோதித்து பார்க்க முடியாது. அதற்கு அனுமதியும் தரப்படுவதில்லை.

'இது நம் தேர்தல் நடைமுறையின் வெளிப்படை தன்மை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது' என்று கூறியுள்ளார்.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது எப்போது சந்தேகம் வந்து விட்டதோ, அதன் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவும் இயலாது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, எப்படி 99 இடங்களில் வென்றது என்பது, வாக்காளர்களாகிய நமக்கே சந்தேகத்துக்குரியதாக உள்ளது.

அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, மறுபடியும் ஒரு ஓட்டுப்பதிவு நடத்துவதே, சாலச் சிறந்தது. தயாரா ராகுல்?






      Dinamalar
      Follow us