PUBLISHED ON : ஜூன் 26, 2024 12:00 AM

எ.சிரில்சகாயராஜ், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கல்வி, மருத்துவ வசதி மற்றும் குடிநீர் ஆகிய மூன்றையும் குடிமக்களுக்கு தவறாமல், இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை.
இதையெல்லாம் சொல்லிக் காட்டி தற்போது 'தம்பிடி' பிரயோஜனமில்லை.
ஆட்சியாளர்களின் அலட்சிய போக்கால், கல்வி வியாபாரமாகி விட்டது. மருத்துவம், தனியார் கைகளில் சிக்கிக் கொண்டு விட்டது. குடிநீருக்கு லாரிகளையும், தெருக் குழாய்களையும் நம்ப வேண்டியதாகி விட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் உள்ள வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், மலம் கலந்த விவகாரத்திலேயே, இரண்டு ஆண்டுகளாகியும், குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் அரசு திணறிக் கொண்டிருக்கிறது.
துாத்துக்குடியில் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த மூவர் குடும்பத்துக்கும், நிவாரணத் தொகை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
எந்த ஒரு விவகாரத்துக்கும் நிவாரண உதவி வழங்கி விட்டால், பிரச்னையை பூசி மெழுகி முடித்து விடலாம் என்பதே, இந்த திராவிட மாடல் அரசின் கொள்கையாக உள்ளது.
அந்த கொள்கையையாவது ஒழுங்காக, முறையாக, நாணயமாக, நேர்மையாக, சமூகநீதியாக கடைப்பிடிக்கின்றனரா என்றால், அதுவும் இல்லை.
தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கிற கதையாக, கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் அவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், குடி தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்கும் போது, கார் மோதி இறந்தால் 3 லட்சம் ரூபாயும் வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது இந்த திராவிட மாடல் அரசு.
அரசே விற்கும், 'டாஸ்மாக்' கடைச் சரக்கு இருக்க, இந்த குடிகாரர்கள் ஏன் அதை தவிர்த்து, கள்ளச்சாராயம் குடித்து மரணமடைய வேண்டும்?
ஆனால், தெருக்குழாயில் குடிதண்ணீர் பிடிக்கும்போது கார் மோதியதால் உண்டான மரணத்திற்கு, அரசே முக்கிய மூல காரணம்.
அவர்கள் வீட்டு குழாய்களில் தண்ணீர் இணைப்பு இருந்திருந்தால், அவர்கள் தண்ணீர் பிடிக்க குடங்களுடன் வீதிக்கு வந்திருக்க போவதில்லை;
கார் மோதி மூவரும் மரணமடைந்திருக்கவும் மாட்டர்.
மேலும், ஒரு அரசு, குடிமக்கள் அனைவரையும், பொதுவான சமமான கோணத்திலேயே பார்த்து பராமரிக்க வேண்டும்.
கள்ளச்சாராயம் குடித்து கொழுப்பெடுத்து இறந்தால், 10 லட்சமும், குடி தண்ணீர் பிடிக்கும் போது வாகனம் மோதி இறந்தால் 3 லட்சமும் சரிசமமானது இல்லை.
ஒன்று விபத்து அல்லது துர்மரணங்கள் நிகழும் போது, உயிரிழப்பவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கட்டும் அல்லது கள்ளச்சாராயம் குடித்து மாண்டவர்களுக்கான நிவாரணத் தொகையை மூன்று லட்சம் ரூபாயாக குறைக்கட்டும்.
ஒரு தாயானவள் தான் பெற்ற பிள்ளைகள் அனைவரையும் சரிசமமாகத்தான் நடத்துவாள். இதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜாதி ஒழிப்பை விட சண்டை வளர்க்கிறாரே?
பொ.ஜெயராஜ்,
பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், கடந்த ஆண்டு அரசு
பள்ளி மாணவனின் வீடு புகுந்து, சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம்
நடந்தது. அதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே, ஜாதி, இன
உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம்
ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும், தமிழக அரசு, ஓய்வு பெற்ற
நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தது. அவர், இப்போது 650
பக்கங்கள் கொண்ட அறிக்கையை, முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார்.
ஜாதி
பாகுபாடுகளும், ஜாதி மோதல்களும் ஒழிய வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு
உண்மையாகவே இருந்தால், ஜாதிகளைத்தான் முதலில் ஒழிக்க வேண்டும். ஜாதி
அடிப்படையில் வழங்கப்படும் கல்வி, வேலைவாய்ப்பு உட்பட அனைத்து சலுகைகளையும்
ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக பொருளாதார அடிப்படையில்
பின்தங்கியவர்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை
உயர்த்த வேண்டும்.
ஜாதி சங்கங்களும், ஜாதிக்கட்சிகளும் தான், தேசிய தலைவர்களை எல்லாம், தங்கள் ஜாதிகளின் தலைவர்களாக மாற்றினர்.
ஓய்வு
பெற்ற நீதிபதி சந்துருவின் 650 பக்க அறிக்கையால், ஒரு பலனும் ஏற்படப்
போவதில்லை. ஜாதி மோதலை தவிர்க்க வழி கேட்டால், தேவையில்லாமல், நெற்றியில்
குங்குமம், சந்தனம், விபூதியால் திலகம் வைப்பதற்கும், கையில் வண்ணக்
கயிறுகள் கட்டுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஹிந்து
மத நம்பிக்கையான நெற்றியில் திலகம் வைப்பதற்கும் கைகளில் வண்ணக் கயிறு
கட்டவும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியவர், மற்ற மதக் குறியீடுகளையும்
தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட மறந்தது ஏனோ?
ஒருவரின் பெயரை
வைத்துக் கூட, அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்க முடியும்.
எனவே, சிவகுமார், கணேசன், ராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, முருகன் என்பது
போன்ற பெயர்களுக்கு பதிலாக, அவர்கள் எல்லோருக்கும் எண்களால் பெயர் வைத்து
அழைக்க வேண்டும் என்றும் கூற மறந்து விட்டார் போல் தெரிகிறது.
சம்பளம்
கொடுத்த முதல்வர் மனதை மகிழ்விக்கும் விதத்தில், ஹிந்துக்களுக்கு எதிரான
கருத்துடன், தன்னுடைய அறிக்கையை வழங்கி விட்டார் நீதிபதி சந்துரு. வழக்கம்
போல் இந்த அறிக்கையும் நடைமுறைக்கு வரப்போதில்லை என்றே நம்பு வோம்!
முற்போக்கு சிந்தனை வேண்டும்!
பி.வி.ரவிகுமார்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கள்ளக்குறிச்சி,
கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 5 கோடி ரூபாய்க்கு
மேல் நிவாரணம் கொடுக்கப்படுகிறது.
வயிற்றுப் பிழைப்புக்காக பட்டாசு
தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு உயிரிழப்போரின் குடும்பத்துக்கு, இவ்வளவு
தொகை கொடுப்பதில்லையே? அதுவும் இந்த 5 கோடி ரூபாய், மக்களின்
வரிப்பணத்திலிருந்து கொடுப்பது வேதனை.
சாராயம் குடிப்போரின்
கையாலாகாததனத்துக்கு, அவர்களது குடும்பம் பலிகடா ஆவது வேதனை தான். ஆனாலும்,
பாதிப்படையச் செய்வோரிடமிருந்து வசூல் செய்து பணத்தை இவர்களிடம்
கொடுக்கலாமே?
இந்த நிமிடம் முதலே, அரசின் சிந்தனையில்முற்போக்கான, மிகப் பெரிய மாற்றம் வேண்டும் என்பது தெளிவாகிறது.