/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
ஜானகியுடன் சசிகலாவை ஒப்பிடாதீர்கள்!
/
ஜானகியுடன் சசிகலாவை ஒப்பிடாதீர்கள்!
PUBLISHED ON : ஜூலை 27, 2024 12:00 AM

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக முன்னாள் முதல்வர் ஜானகியை போல், சசிகலாவும் அ.தி.மு.க.,வை விட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்' என ஊடகங்களில் கூறியுள்ளார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி.
'ஜானகியை போல் சசிகலாவும், அ.தி.மு.க.,வை விட்டு ஒதுங்க வேண்டும்.நாங்கள் இப்போது தான் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்' என்கிறார், எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார்.
'ஆடுகின்ற காலும், பாடுகின்ற வாயும் சும்மா இருக்காது' என்று ஒரு சொல்லாடை உண்டு. அதைபோல, ஓராண்டு அல்ல, 36 ஆண்டுகள் அ.தி.மு.க.,வின் அதிகார மையத்தில் இருந்த சசிகலாவை ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்றால் அவர் எப்படி ஒதுங்குவார்?
அவரை அ.தி.மு.க.,வில் சேர்த்தால் ஏதேனும் ஒரு மாவட்டத்திற்கு மகளிர்அணி செயலராகி, 'புரட்சி தமிழர் பழனிசாமி வாழ்க' என, பதாகையை ஏந்தி கோஷம் போட மாட்டார்.
அ.தி.மு.க.,வின் தலைமை பதவியை எப்போது அடைய போகிறோம் என்று குறிக்கோளாக இருப்பார். ஓன்றுமே இல்லாத இப்போதே, 'நான் அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர்' என்று சொல்லி வருகிறார். அதனால் தான், அ.தி.மு.க.,வினர் பயப்படுகின்றனர்.
ஆனால், ஜானகி அப்படி அல்ல. தனக்கு அ.தி.மு.க.,வில் எந்த பதவியும் வேண்டாம். தான், கட்சியில் நீடித்தால் குழப்பம் நேரிடும் என்பதற்காக, கட்சியை விட்டு ஒதுங்கிக் கொண்டவர்.
கடந்த, 1947, 1948, 1950களில் வெளியான, ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, மருதநாட்டு இளவரசி, மோகினி போன்ற திரைப்படங்களில் நடித்து சம்பாதித்த பணத்தில் தான், சென்னை, ராயப்பேட்டையில் அ.தி.மு.க., அலுவலகம் இருக்கும் இடத்தை வாங்கினார் ஜானகி.
தன் மனைவி பெயரில் இந்த இடம் இருந்தால், தனக்கு பின் கட்சியை வழி நடத்துபவர்கள் கட்சி அலுவலகத்திற்குள்நுழைய முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று நினைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்., அதனால், தான் இறப்பதற்கு ஐந்து மாதத்திற்கு முன், அந்த இடத்தை தன் பெயரில் கட்சிக்கு தானமாக தர தன் மனைவியிடமே கோரிக்கை வைத்தார்.
எம்.ஜி.ஆரை மட்டுமே உலகம் என்று நினைக்கும் ஜானகி 1987, ஜூலை 27ல் அந்த இடத்தை 'அ.தி.மு.க., நிறுவனர், தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன்' எனும் பெயருக்கு, கட்சிக்காக தானமாக தந்தார்.
அதற்கான பதிவையும் செய்து ஆவணங்களை எம்.ஜி.ஆரிடம் மகிழ்ச்சியுடன் கொடுத்தார் ஜானகி. அதுமட்டும் அல்ல. அதற்கான வருமான வரி பணத்தையும், கட்சி பணத்தில் இருந்து கேட்காமல், தன் சொந்த பணத்தையே கட்டினார். இதுதான் ஜானகியின் தியாகம்.
கடந்த 1987ல் எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அவரது ஆட்சியை கலைப்பதற்கு முழு காரணம் ஜெயலலிதா தான். அதையும்மனதில் வைக்காமல், தன் கணவர் உழைப்பில் துவக்கிய கட்சி, விழுந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தையும், கட்சிஅலுவலகத்தையும் ஜெயலலிதாவிடமே மீண்டும் ஒப்படைத்தவர் ஜானகி. இதுதான் அவர் செய்த தியாகத்திலும் தியாகம். எனவே தியாகம் செய்த ஜானகியோடு அ.தி.மு.க.,வில் குழப்பம் செய்யும் சசிகலாவை ஒப்பிட்டு பேசாதீங்க!
தமிழ் உவமைகள் இல்லாதது பெரும் ஏமாற்றமே!
வி.சி.கிருஷ்ணரத்னம்,
காட்டாங்கொளத்துார், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய 'இ -
மெயில்' கடிதம்: லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை
23, 2024ல் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் சமூகத்தின்
ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரம்அளிக்கும் என்று பிரதமர் மோடி
புகழ்ந்துள்ளார். பா.ஜ.,வின் நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என்று ராகுல்
விமர்சனம் செய்தார்.
காங்., தேர்தல் அறிக்கையை பட்ஜெட் உரையாக நிதியமைச்சர் படித்திருக்கிறார் என்று ப.சிதம்பரம் கூறினார்.
அரசியல்வாதிகள்
தவிர, இந்த பட்ஜெட்டில் தமிழ் ஆர்வலர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019 முதல், ஆறு பொது பட்ஜெட்களில் இடம்பெற்ற தமிழ் உவமைகள் இந்த
முறை இல்லை என்பதே அது.
தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தில் பிறந்த நிர்மலா சீதாராமன் டில்லியில் படித்து வளர்ந்தவர்.
அப்போது,
தாம் ஒரு தமிழர் என்பதாலும், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ் மீதான
ஆர்வத்தை காட்டும்வகையிலும் பட்ஜெட்உரையில் தமிழ் உவமைக் குறிப்பு இடம்
பெற்றது.
இதில், நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த பிசிராந்தையார்,
பாண்டிய மன்னன் அறிவுடைநம்பிக்கு வரிவிதிப்பின்போது யானையை குறிப்பிட்டு
பாடிய பாடலை உவமையாக்கினார்.
'காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்; நுாறு செறு ஆயினும், தமித்துப்
புக்கு உணினே, வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்' என்ற பாடலை நிதி
அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இதன் அர்த்தமாக, 'காய்ந்து
முதிர்ந்த நெல்லை அறுத்துக் கவளம் கவளமாகத் திரட்டி யானைக்கு உண்ணத்
தந்தால் மா அளவினும்குறைந்த நிலத்தினது என்றாலும் அது பல நாளுக்கு வரும்.
நுாறு வயல்கள் என்றாலும் யானை தனித்துப் புகுந்து தின்றால் வாயில்
புகுவதைவிடக் காலில் மிதிபட்டுப் பாழாகி விடும்'எனக் குறிப்பிட்டவர்
அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.
யானைக்கு உணவாக கவளம்
அளிப்பதுபோல் தம் அரசு வரியை விதிக்கும் எனவும், மாறாக அதை நேரடியாக இறக்கி
வயலை சேதத்திற்கு உள்ளாக்காது எனத் தெரிவித்தார். இதே பட்ஜெட் உரையில்
உருது, சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி மொழிகளின் உவமைகளையும் நிர்மலா
சீதாராமன் பயன்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும், திருக்குறள் உள்ளிட்ட பல தமிழ் உவமைகளை அவர் தவறாமல் குறிப்பிட்டு வந்தார்.
திருக்குறளுக்கு பின் அவ்வையார் பாடலையும் நிர்மலா குறிப்பிட்டிருந்தார்.
இதனால்,
அவர் இந்த முறையும் குறிப்பிட உள்ள தமிழ் உவமை என்னவாக இருக்கும்என்ற
ஆர்வம் நிலவியது. ஆனால், தற்போது தாக்கல் செய்த பட்ஜெட்டில்தமிழ் உள்ளிட்ட
எந்த மொழிக்கான உவமைகளும் இடம்பெறவில்லை.
இது, மொழி ஆர்வலர்களுக்கு இடையே பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கி உள்ளது. இதை நிதியமைச்சர் விளக்க வேண்டும்.