PUBLISHED ON : மார் 31, 2024 12:00 AM

கு.காந்தி ராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகம் முழுவதிலும் அரசியல் கட்சிகள், தொழில் மற்றும் வியாபார நிறுவனங்களிலிருந்து நிதி வாங்கியும், தொண்டர்களிடமிருந்து நன்கொடை பெற்றும், தங்கள் அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்கின்றன.
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறுவது அவற்றில் ஒரு வகை.
நிதி கொடுப்பவர்கள், தாங்கள் கொடுக்கும் தொகையை வங்கியில் செலுத்தி அதற்கு ஈடான தேர்தல் பத்திரங்களைப் பெற்று தாங்கள் விரும்பும் கட்சிகளுக்கு அளிக்கின்றனர்.
நேரடியாக கட்சிகளுக்கு பணம் கொடுக்கும்போது, அவை கணக்கில் காட்டப்படுவதில்லை; தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்படும்போது வங்கிகள் மூலம் வழங்கப்படுவதால் அவை கணக்கில் வருகின்றன.
எனவே, தேர்தல் நன்கொடை வழங்குவதில் புழக்கத்தில் இருக்கும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில், பா.ஜ., இந்த திட்டத்தை கொண்டு வந்தது. இதை தற்போது, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சி பணம் வாங்கியது என்ற பட்டியலைச் சமர்ப்பிக்கச் சொல்லி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கும் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி பட்டியலும் வெளியாகி விட்டது.
பா.ஜ., மிக அதிகமாக, மோசடி நபர்களிடமிருந்து நன்கொடை வாங்கி இருக்கிறது என்று, குறைந்த பத்திரங்கள் பெற்றுள்ள கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. குறைவோ, அதிகமோ, கணக்கில் வந்து விட்டது இல்லையா... இதற்காக தானே இந்த வழக்கமே நடைமுறைப்படுத்தப்பட்டது!
இந்த அடிப்படை உண்மையை, குற்றம் சாட்டும் யாரும், ஏன் புரிந்து கொள்ளவில்லை?
ஆனால், மோசடியாக பணம் வாங்கினீர்கள் என்று குற்றம்சாட்டி, தொடர்ந்து வழக்கு போடுவதோ, நடவடிக்கை எடுப்பதோ இருக்காது; கூப்பாடு போடுவதோடு இந்த விஷயம் அமுங்கிப் போய்விடும்.-
நாம் தான் சுதாரிக்க வேண்டும்!
வி.பத்ரி, கிளாம்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கவர்ச்சிகரமான இலவசங்களை
அறிவித்திருக்கிறார், முதல்வர் ஸ்டாலின்.
பெட்ரோல் 75 ரூபாய்க்கும், சமையல் காஸ் 500க்கும் தருவாராம்.
சட்டசபை தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைப்பதாகச் சொன்னார். அதையே இன்று வரை அவரால் குறைக்க முடியவில்லை.
இந்திய
எண்ணெய் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும், பெட்ரோல், டீசல்,
சமையல் எரிவாயு ஆகியவற்றை, தமிழக அரசு, குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க
வேண்டுமானால், எவ்வளவு குறைக்கிறதோ அந்த தொகையை, எண்ணெய் நிறுவனங்களுக்கு
தமிழக அரசு தந்து விட வேண்டும். முடியுமா இவரால்?
ஏற்கனவே அறிவித்த இலவசங்களால், தமிழக அரசு, கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
வருவாயே இல்லாமல், கடன் வாங்கியே எத்தனை நாளைக்கு காலத்தை ஓட்ட முடியும்?
அரசு எவ்வளவுக்கெவ்வளவு கடன் வாங்குகிறதோ அந்த கடன் சுமை, ஒவ்வொரு தமிழன் தலை மீதும் விழுகிறது.
இவரைச் சொல்லி குற்றமில்லை; நாம் தான் சுதாரிக்க வேண்டும்!
சீமானுக்கு விவேகம் வேண்டும்!
எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையுடன், வீராவேசமாகப் பேசி, ஒரு நாட்டையே தன் கைக்குள் போடுவதற்குக் கிளம்பினார். வீரம் சரி தான்... ஆனால், விவேகம்? ஒரு சதவீதம் கூட இவரிடம் தென்படாது.
இறுதியில் தன் சகாக்களையும், தன் குடும்பத்தையும், தன் உயிரையே இழக்க நேரிட்டது. இவரை நம்பிய நாட்டின் ஒரு பெரும்பகுதி மக்கள், மிகவும் துயரமும், துன்பமும் சந்தித்து, இன்று வரை மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கின்றனர்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து அனுசரிப்புடன் நடந்து கொண்டதால், சட்டசபையில் எதிர்கட்சித் தலைவரானார்.
இதே நிலையில் அவர் தொடர்ந்து இருந்திருப்பாரேயானால், அடுத்து ஆளுங்கட்சியாக வருவதற்கான வாய்ப்பை மக்கள் கொடுத்திருப்பர்.
ஆனால் அவரின் ஆவேசமான பேச்சு, விவேகமற்ற செயல் மற்றும் அவரது கோபம், அவரை கீழ் நோக்கி இறக்கிவிட்டது; கட்சியின் வளர்ச்சி தடைபட்டு, தேய்வு நிலைக்குச் சென்றது.
அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டதால், உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டு, இயற்கை எய்தி விட்டார்.
'என் தலைவர் பிரபாகரன்' என்று மூச்சுக்கு முன்னுாறு தரம் சொல்லும் 'நாம் தமிழர்' கட்சியின் சீமான், பிரபாகரன் பாணியிலேயே, நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொள்கிறார்; இறுதியில் அவர் போலவே தோல்வியை சந்திப்பதற்கு முன்... சிந்திக்க வேண்டும்!
அரசியலுக்கு, வீரத்தை விட விவேகம் தான் தேவை. இந்த விவேகம் இல்லாத காரணத்தால் தான், கரும்பு விவசாயியின் சின்னத்தைக் கோட்டை விட்டார்.
இப்படி வீர வசனம் மட்டும் பேசுவதை விட, விவேகத்துடன், பண்புடன் நடந்து, தொண்டர்களுக்கும் அதைச் சொல்லிக் கொடுத்து, நல்ல சமுதாயத்துக்கு உதாரணமாய் திகழ்ந்து, நெளிவு சுழிவுடன்நடந்து கொண்டால், தமிழகத்தில் ஆளுங்கட்சியாக வர வாய்ப்புள்ளது.
உங்களை நம்பியுள்ள தொண்டர் படையை மோசம்போக வைக்காதீர்கள் சீமான்!
சமூக நீதி இல்லையே?
வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் தே.ஜ., கூட்டணியில், பா.ம.க., அங்கம் வகிக்கிறது. 10 தொகுதிகள் இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் தேர்வில், சமூக நீதியைப் பின்பற்றியுள்ளதாகக் கூறுகிறார் ராமதாஸ். கிருஷ்ணகிரி, திண்டுக்கல், காஞ்சிபுரம் தொகுதிகளில் பெண்கள்; சிதம்பரம், நாமக்கல் தொகுதிகளில் தலித் பிரிவினர்.
சமூக சீர்திருத்தம் பேசும் திராவிடக் கட்சிகள், பெண்கள், தலித்களுக்கு இவ்வளவு பிரதிநிதித்துவம் தரவில்லை.
கேரளாவில், காங்., கூட்டணியின் 20 வேட்பாளர்களில், ஒரே ஒருவர் தான் பெண். அதை காங்., தலைவியே வேதனைப்பட்டு வெளிப்படுத்தி உள்ளார்.
தமிழகத்தில், காங்கிரஸ் - தி.மு.க., வேட்பாளர் தேர்வில், உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை என்று முஸ்லிம்களிடம் அதிருப்தி உள்ளது.
வேட்பாளர் தேர்வில், சமூக நீதி, இட ஒதுக்கீடு பார்முலாவை பின்பற்றாத கட்சிகள், அரசு வேலைவாய்ப்பு, உயர்கல்வி, பதவி உயர்வில் மட்டும் இடஒதுக்கீட்டை செயல்படுத்த தீவிரம் காட்டுவது என்ன நியாயம் என்று கேட்கத் தோன்றுகிறது.

