/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
கூரை ஏறாதவர் வைகுண்டம் போவாராம்!
/
கூரை ஏறாதவர் வைகுண்டம் போவாராம்!
PUBLISHED ON : ஏப் 13, 2024 12:00 AM

என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
* நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 500 ஏக்கரில், நாட்டுக்கோழி பண்ணை வைத்து, தினமும் இரண்டு முட்டைகள், அரை லிட்டர் பால் குடித்து விட்டு, மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்வர். அனைவருமே, பயில்வான்கள் போல சும்மா கம்பீரமாக வலம் வருவர்
* நான் தனியாக ஒரு கிரிக்கெட் அணி உருவாக்குவேன். எனது கிரிக்கெட் வீரர்கள், ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிப்பர்...
யார் இதைச் சொன்னது... அந்த வாய்ச்சவடால் வீரர் சீமான் தான்!
இவர் இதுவரை, சினிமாவிலும் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை; அரசியலிலும் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை.
உள்ளாட்சி தேர்தல் முதல் லோக்சபா தேர்தல் வரை, இதுவரை எந்த தேர்தலிலும், வெற்றி காணவே இல்லை; டிபாசிட் இழந்தது தான் மிச்சம்.
இதுவரை இவரது கட்சி சின்னமாக இருந்த கரும்பு விவசாயி சின்னத்தையும், இந்த தேர்தலில் பறிகொடுத்து விட்டார். சின்னத்தைக் கூட தக்க வைக்க முடியாதவர், நாட்டுக் கோழி பண்ணை வைக்கப் போகிறாராம்.
'கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்' கதை தான்.
வாயால் வடை சுடும் கலையில் வல்லவர்களாக இதுவரை, திராவிடச் செம்மல்கள் மட்டுமே இருந்தனர்; இந்த பட்டியலில் சீமானும் சேர்ந்து விட்டார்.
இவர் பேசுவதையெல்லாம் பார்த்தால்... ஹா ஹா ஹா... ஹா ஹா ஹா!
கோட்டை விட்டாச்சு!
எம்.எஸ்.ரவிசங்கர்,
ைஹதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: ஒரு மாநிலத்தின் எல்லையை, அந்த மாநிலத்தின் சம்மதம் இல்லாமல்
வெளிநாடுகளுக்கு கொடுக்கக் கூடாது என்ற சட்டம் இருக்கிறது. அந்த
சட்டத்தின்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் அது வெற்றிபெறும்.
'கச்சத்தீவு
விவகாரத்தில், இலங்கை அரசின் அனுமதி இல்லாமல், அந்த பகுதியில், நம் நாடு
எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது' என்ற ஒரு ஷரத்தையும் சேர்த்து,
காங்கிரசும், தி.மு.க.,வும், அப்பகுதியை இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டன.
நம்
கையில் கச்சத்தீவு இருந்திருந்து, அதில் நம் கடற்படையை நிறுத்தி
இருந்தால், நம் மீனவர்களுக்கும் பாதுகாப்பு; இலங்கை வழியே சீனா நம்மை
அண்டும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்காது; இலங்கைக்கும் சிம்மசொப்பனமாகி
இருப்போம்.
லடாக், அருணாச்சலில்சீனா; மணிப்பூரில் போதைக்காக
மல்லுகட்டும்மியான்மர், வங்கதேசம்; கச்சத்தீவில் இலங்கை என அனைத்தையும்
தாரை வார்த்தது, காங்., அரசு தான். இது குறித்தெல்லாம், காங்., ராகுலும்
வாய் திறக்க மாட்டார்; கேட்டால், 'என் காதே கேக்கலே' என்பது போல்
ஸ்டாலினும் நடந்து கொள்வார்.
கோட்டை விட்டாச்சு!
கவனிக்குமா மத்திய அரசு!
சு.ஸ்ரீனிவாசன்,
கோவையில் இருந்து எழுதுகிறார்: மத்திய அரசால் ஓய்வூதியம் பெறுபவர்களில்
முன்னாள் தொலைத்தொடர்பு ஊழியர்களும், நான்கரை லட்சம் பேர் இருக்கின்றனர்.
இந்த
முன்னாள் தொலைத் தொடர்பு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களாக இருந்து, சில
ஆண்டுகளுக்கு முன், பி.எஸ்.என்.எல்., என்ற மத்திய அரசு நிறுவனத்துக்கு
அரசால் அனுப்பப்பட்டவர்கள்.
மேற்படி ஊழியர்கள் அவர்களது பணி
ஓய்வுக்கு பின் மத்திய அரசு ஓய்வூதியர்களாகவே கருதப்பட்டு, மத்திய அரசு
ஓய்வூதியர்களுக்கு இணையாக ஓய்வூதியம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது;
கொடுக்கப்படவில்லை.
மத்திய அரசின் நிர்வாக தீர்ப்பாயத்தில், மேற்படி
ஊழியர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. ஆனால், மத்திய அரசு, தான் அளித்த
வாக்குறுதிக்கு மாறாக, மேல்முறையீடு செய்துள்ளது. அரசு தன் வல்லடி போக்கை
மாற்றி, மேற்படி பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்களின் நிம்மதியான வாழ்க்கையை
உறுதி செய்ய வேண்டும்.
'ஒன்வே டிராபிக்' அல்ல கூட்டணி!
வி.எச்.கே.ஹரிஹரன்,
திண்டுக்கலில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'வயநாடு லோக்சபா
தொகுதியில், இ.கம்யூ., வேட்பாளரை எதிர்த்து, காங்., ராகுல் போட்டியிடுவது,
அரசியல் நெறி மீறும் செயல். இந்துத்துவா ஆழமாக உள்ள வட மாநிலங்களில்,
ராகுல் போட்டியிட வேண்டும்' என, கேரள முதல்வர் பினராயி விஜயன்
கூறியுள்ளார்.
பினராயி பேச்சு, பா.ஜ.,வுக்கு தான் சாதகமாக அமையும்.
'மாநில
பிரச்னைகளை மறைத்து, காங்கிரசை, குடியுரிமை சட்ட சிக்கலில் தள்ளி
விடுகிறார் பினராயி' என, மாநில காங்., தலைவர் சதீசன் பதிலடி கொடுக்கிறார்.
இவர் சொல்வது சரி தான்.
'கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றுவதாக
இருந்தால், ஆம் ஆத்மி கட்சியை, காங்கிரஸ் விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது'
என்கிறார் பினராயி. 2019 லோக்சபா தேர்தலில், 19 தொகுதிகளை காங்.,
வென்றுள்ளது. அந்தக் கோபத்தில் இப்போது, அக்கட்சியை விட்டுக் கொடுப்பது
பினராயி தானே?
கூட்டணி என்பது, 'ஒன்வே டிராபிக்' அல்ல!
'குற்றம்' பார்க்கில் அரசியல் இல்லை!
சுப்ர.அனந்தராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'தமிழக எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீது, 581 வழக்குகள் நிலுவை: அரசு தகவல்' என்ற செய்தியைப் படித்ததும், அதிர்ச்சி ஏற்படவில்லை.
சாதாரண,
'பிக் பாக்கெட்' திருடர்கள் மீது வழக்கு வேக வேகமாக பதியப்பட்டு,
அதிவிரைவில் 'உள்ளே' தள்ளும் படலத்தை நாம் பார்க்கிறோம்; வரவேற்கிறோம்.
ஆனால் இந்த, 'லா மேக்கர்ஸ்' மீதெல்லாம் அவ்வளவு சுலபமாக வழக்குகள் பதிய முடியாது; பதிந்தாலும் விசாரணைக்கு வராது.
ஏன் தெரியுமோ... தம் மீதான வழக்கை, தாமே விசாரணைக்கு எடுக்க யாராவது பரிந்துரை செய்வரா? சீச்சீ!
ஆனந்த்
வெங்கடேஷ் போன்ற நேர்மையான, தர்ம நியாயத்தை நிலை நாட்டும் உத்தமமான
நீதிபதிகளை, நாடு முழுதும் நியமனம் செய்தால் தான், இந்த 581 பேர் 'கம்பி'
எண்ண முடியும். அதுவரை, 'குற்றம்' பார்க்கில் அரசியல் இல்லை!
நெ.1 என்பது இவற்றில் தான்!
சதீஷ்
குமார், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இரண்டு திராவிட
கட்சிகளும், 50 ஆண்டு கால ஆட்சியில், கீழ்க்கண்டவற்றில் தான் நெ.1 ஆகி
உள்ளன.
டாஸ்மாக் விற்பனை, மது குடிப்போர் எண்ணிக்கை, ஆற்றுமணல்
கொள்ளை, கனிம வளம் கொள்ளை, நிர்வாக திறமையின்மை, இயற்கை சீற்றங்களின்போது
கோட்டை விடுதல், லஞ்ச லாவண்யம், சொத்து குவிப்பு, சமநிலையற்ற சமூக நீதி,
அரசு துறைகளிலும் லஞ்சம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சுகாதார சீர்கேடு,
ஆக்கிரமிப்பு, கடன், ஓட்டுக்காக இலவசங்களை அள்ளித் தெளித்தல்.
படித்தவர்களாகிய நாம், இவர்களிடம் எதற்கு கைநீட்ட வேண்டும்? ஒற்றுமையுடன் இருந்து, பாடம் கற்பிப்போம்!

