PUBLISHED ON : மே 10, 2024 12:00 AM

என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பா.ஜ.,வின் பொய் பிரசாரம் பற்றி புகார் அளித்தால், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுப்பதில்லை. தேர்தல் கமிஷன் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், மக்கள் மீது நம்பிக்கை வைத்து, 'இண்டியா' கூட்டணி தேர்தலை சந்திக்கிறது' என்று, புலம்பி இருக்கிறார் ப.சிதம்பரம் அவர்களின் தவப்புதல்வன் கார்த்தி.
இவர்களுக்கு தேர்தல் கமிஷன் மீது மட்டுமா நம்பிக்கை இல்லை... மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீதும் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலை சந்திக்கும் இவர், லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி படுதோல்வி அடைந்தால், ஓட்டு போட்ட மக்கள் மீதும் குறை சொல்ல தயங்க மாட்டார்.
தேர்தல் கமிஷனின் செயல்பாடு பற்றி குறை சொல்லும் கதர் சட்டை பேர்வழிகள், அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சி.பி.ஐ., போன்ற அமைப்புகளையும் குறை சொல்லத்தான் செய்கின்றனர். அதாவது, இவர்கள் பேச்சை கேட்டால், அவை நல்ல அமைப்புகள் இல்லை என்றால், எல்லாம் மத்திய அரசின் தலையாட்டி பொம்மைகள் என்பர்.
காமாலைக்காரனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் நிறமாக தெரிவது போல, தேர்தல் கமிஷன் செயல்பாடுகளும் இவர்களுக்கு நம்பிக்கை தராமல் போனதில் ஆச்சரியம் இல்லை. 'ஆட தெரியாத ஆரணங்கு, தெரு கோணலாக இருக்கிறது' என்று குற்றம் சொல்வது போல, தேர்தல் கமிஷன் மீது அநியாயமாக பழி சுமத்தி இருக்கிறார் கார்த்தி.
தமிழகம் தார் பாலைவனமாகி விடும்!
சதீஷ்குமார், சிங்காரத்தோப்பு, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளி, பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளது, மத்திய அரசின் அமலாக்க துறை. தற்போது, இது தொடர்பான விசாரணைக்கு ஐந்து மாவட்ட கலெக்டர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
போலி ரசீதுகள், போலி ட்ரிப் ஷீட்களை இவர்களே அடித்து போலியான அரசு சீல், முத்திரை பயன்படுத்தி பல ஆயிரம் டன் மணலை அள்ளி வெளிச்சந்தையில் விற்று, பல ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதித்துள்ளனர். இந்த மணல் மாபியாக்களை உருவாக்கியது யார்?
சாலைகளில் ஒருவர் தலைக்கவசம் அணியவில்லை என்றால் உடனே அபராதம் விதிக்கின்றனரே... இவ்வளவு கோடி ரூபாய் மதிப்புள்ள மணல் சட்டவிரோதமாக அள்ளப்படும்போது போலீஸ், வருவாய், நீர்வளம் மற்றும் கனிம வளத் துறை அதிகாரிகள், அமைச்சர் எல்லாம் துாங்கி கொண்டு இருந்தனரா அல்லது மாதாந்திர கமிஷன் வாங்கி கொண்டு கமுக்கமாக இருந்தனரா?
இப்படியே தமிழகத்தில்ஆற்று மணலையும், கனிம வளங்களையும்,மலைகளையும் உடைத்து சுரண்டி சுரண்டி கொள்ளை அடித்தால் கடைசியில் தமிழகம், பாலைவனமாக மாறுவது உறுதி.
ஏற்கனவே, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. 40 ஆண்டுக்குமுன்பிருந்த ஏரி, குளங்கள், கண்மாய்கள் இன்று இல்லை; மேட்டூர் அணை வறண்டு, பாளம் பாளமாக வெடித்து கிடக்கிறது; பரிசல் இயங்கிய மேட்டூர் அணையில் இன்று பஸ் ஓடுகிறது...
மற்றொருபுறம், விவசாய நிலங்களும் காடுகளும் அழிக்கப்பட்டு, ரியல் எஸ்டேட் மற்றும் வீடுகள், கட்டடங்கள் அதிகரித்து உள்ளதால், தமிழகத்தில் கோடை வெப்பம் ஆண்டுக்காண்டு அதிகரித்தபடியே உள்ளது.
தமிழகத்தை ஆண்ட மற்றும் ஆளும் இரு திராவிட கட்சிகளும், இயற்கை சார்ந்த எந்த ஒரு விஷயத்திலும் நேர்மையாகவும், உண்மையாகவும் இல்லை. தமிழகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தங்களது கஜானா நிரம்பினால் போதும் என்று தான் இருக்கின்றனர்.
இயற்கையின் மீது ஆர்வம் இல்லாத அரசும், ஆட்சியாளரும் இருந்தால், தமிழகம் தார் பாலைவனமாவதை ஒருபோதும் தடுக்க முடியாது!
கடுமையான தண்டனைகள் வேண்டும்!
ப.ராஜேந்திரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மது மற்றும் போதைப் பொருள்களின் தாக்கம் குற்றச் செயல்களை பெருக வைக்கிறது; கஞ்சா போதை, கொலை கொள்ளை போன்ற குற்றச் செயல்களைத் துாண்டி விடுகிறது.
வட மாநிலங்களில் கஞ்சா, எந்த வித தடங்கலும் இல்லாமல் பயிரிடப்படுகிறது என்று, 'வாட்ஸாப்' செய்தி தெரிவிக்கிறது. மது போதைக்கு அடிமையானவர்கள், கஞ்சாவிலும் சுகத்தை கண்டு, போதையேறி, குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தொழிலாக வைத்துக் கொள்கின்றனர்.
பெருகும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த சிலர், டாஸ்மாக் நேரத்தைக் குறைப்பது தீர்வாக அமையும் என்கின்றனர்.
குடி போதைக்கு அடிமையானவர்கள், டாஸ்மாக் செயல்படும் நேரத்தை அக்கறையுடன்கவனித்து மற்ற முக்கிய வேலைகளைக் கூட அலட்சியமாகத் தள்ளி விடுகின்றனர். குடிக்கு அடிமையானவர்களின்குடும்பங்கள் பல, சீர்கெடுகின்றன.
குடும்பத்தையே கவனிக் காமல் குடிப் பழக்கத்திற்கு ஊறிப் போன மக்கள் நாட்டைப் பற்றி எங்கே கவலைப்பட போகின்றனர்?
அன்றாட தேவைகளில், உணவு கூட இல்லாமல் போகலாம்; ஆனால் மது பாட்டிலுக்கு தான் முக்கியத்துவம் என்ற மனப்பான்மைக்கு ஆளாகி விடுகின்றனர்.
ஆட்டோ ஓட்டும் டிரைவர், 'நேத்து நைட் 'புல்'லா போட்டுட்டு 'ரெஸ்ட்' எடுத்துட்டேன் மச்சி...' என்று சொல்லும் போது, இப்போது அவர் எந்த நிலையில் இருக்கிறாரோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கூட, இப்போதெல்லாம் ஓடி ஒளிவதில்லை. மதுவின்தாக்கத்துடன் கொலையை செய்து விட்டு, கொலை நடந்த மூன்றாவது அல்லது நான்காவது நாளிலேயே சரண்டர் ஆகி ஜாமினிலும் வெளியே வந்து விடுகின்றனர்; திறமையான வக்கீல்களைத் தங்கள் பக்கம் வைத்துக் கொண்டு வாதாடுகின்றனர்.
பெரும்பாலான வழக்குகள், ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு, உண்மையான நோக்கங்கள் மறைந்து விடுகின்றன; தீர்ப்பும் களங்கம் அடைகிறது.
முஸ்லிம் நாடுகளில் வைத்துள்ள கடுமையான தண்டனை உள்ள சட்டங்கள், நம் நாட்டில் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே, இந்த அவலங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.