/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
அவருக்கு மட்டுமா... அனைவருக்குமா?
/
அவருக்கு மட்டுமா... அனைவருக்குமா?
PUBLISHED ON : ஏப் 21, 2024 12:00 AM

ஆர்.மணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மக்களை பாதுகாப்பதாகக் கூறி சேவை செய்ய வந்தவர்களுக்கு, எதற்கு பாதுகாப்பு, துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும்? உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்' என அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சிக் கழக தலைவர் முருகேசன் தொடர்ந்த வழக்கில், மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி உத்தரவிட்டு, முருகேசனின் மனுவை தள்ளுபடி செய்து இருக்கிறார்.
முருகேசனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை என்று, விலாவாரியாக, விளக்கமாக உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.புகழேந்தியின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பு, வரவேற்கும் வகையில் இருந்தாலும், நமக்கு சில சந்தேகங்களும் எழுவதை சுட்டிக் காட்டாமல் இருக்க இயலவில்லை.
மனுதாரர் முருகேசன் மட்டுமல்ல... ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, துரைமுருகன், நேரு, சேகர்பாபு, எ.வ.வேலு, டி.ஆர்.பாலு போன்ற இன்னபிற அரசியல்வாதிகளும் கூட, மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்துள்ளோம் என்று கூறிக் கொள்பவர்கள் தான். இவர்கள் ஒவ்வொருவரும், வீட்டை விட்டு வெளியே புறப்பட்டு விட்டால், பாதுகாப்புக்காக, கூடவே ஒரு போலீஸ் படையும், இயந்திரத் துப்பாக்கி ஏந்திய வீரர்களும், வாகனங்களும் அணிவகுத்து செல்கின்றன.
இவர்கள் சென்று சேரும் இடம் வரை, வழி நெடுகிலும் சாலைகளின் இருபுறமும் காவலர்கள் நின்று கொண்டிருப்பதை காணலாம்.
அது மட்டுமின்றி, இவர்களது வாகனம் செல்லும் வழியில், எங்கெல்லாம் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளதோ, அங்கெல்லாம், ஒரு போலீஸ் படையே நின்று கொண்டு, வாகனங்களை நிறுத்தி வைத்து, பொதுமக்களை வெயிலிலும், மழையிலும் வதைத்துக் கொண்டிருப்பதையும் காணலாம்.
இவர்கள் அனைவரும் கூட, மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தானே?
மக்கள் சேவகர்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை என்ற உத்தரவு, இந்த அரசியல்வாதிகளுக்கும் பொருந்த வேண்டும் அல்லவா?
ஆக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பி.புகழேந்தி அளித்திருக்கும் உத்தரவு, இவர்களுக்கு பொருந்துமா, பொருந்தாதா?
கட்சித் தாவல் தடுக்கப்படுமா ?
சாந்தி
தேவி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய,
'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில், 'இந்தாண்டு
லோக்சபா தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்
கட்சி தாவினால், உடனடியாக பதவி இழக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு
வரப்படும்' எனக் கூறி இருக்கிறது.
உலகின் தலைசிறந்த ஜனநாயக
நாடுகளுள், இந்தியாவும் ஒன்று. ஆனால், சில ஆண்டுகளாகவே, ஜனநாயகத்தை
பணநாயகம் வென்று விட்டதோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு, கட்சித் தாவல்
பலமாக நடக்கிறது.
ஆட்சியமைக்க, மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்து
எடுப்பது ஒரு கட்சியை; ஆனால், ஆட்சி அமைப்பது வேறொரு கட்சி. உதாரணம்,
மஹாராஷ்டிரா. வயிற்றெரிச்சல் தான் ஏற்படுகிறது.
தாய் கட்சிக்கு
துரோகம் செய்து விட்டு, பணம், பதவிக்காக வேறு கட்சிக்கு தாவுபவர்கள், அந்த
கட்சிக்கோ அல்லது நாட்டிற்கோ விசுவாசமாக இருப்பர் எனக் கருதவே முடியாது.
இந்த
கலாசாரம் வளர்வது, ஜனநாயகத்திற்கு எந்த வகையிலும் நல்லது அல்ல என்பதால்,
அடுத்து அமையப் போகும் மத்திய அரசு எதுவாக இருந்தாலும், நாட்டின் நலன்
கருதி, கட்சித் தாவலை தடுப்பதற்கு வேண்டிய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க
முன்வர வேண்டும்.
ஏன் இந்த பாரபட்சம்?
வெ.சீனிவாசன்,
திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தஞ்சை மாவட்டம்,
களஞ்சேரியில் வேத பாடசாலை நடத்தி வருபவர், தன் கருத்தை
வெளிப்படுத்தியதற்காக, சில விஷமிகளால் தாக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது;
வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நான் சிறுவனாக இருந்தபோது, குடந்தையில்
ஒரு கட்சியின் வேட்பாளர் தோற்றதால், பிராமண சமூகத்தினர் பெரும்பாலும்
வசித்த சோலையப்பன் தெருவில், வீடு புகுந்து தாக்கினர்.
தமிழகத்தில், 50- - 60 ஆண்டுகளாகவே ஹிந்துக்கள் விரோத, குறிப்பாக பிராமண வெறுப்பு அரசியலை சிலர் செய்து வருகின்றனர்.
உண்மையில் அந்த சமூகம் தான், சுயநலம் கருதாது மக்கள், நாட்டின் நலன் கருதி கடவுள்களை பிரார்த்தித்து வருகிறது.
நேர்மை,
நாணயம், உழைப்பு, ஒழுக்கம், கட்டுப்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள்
பிராமணர்கள். எந்த சமூகத்தில் பிறக்க வேண்டும் என்பது, நம் கையில் இல்லை.
பிராமண
சமூகத்திலும், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்கள் பலர் உள்ளனர்.
ஆனால், அந்த சமூகத்திற்கு மட்டும், ஜாதி ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ
எந்தவித சலுகைகளையும் அளிக்க பெரும்பாலான அரசியல் கட்சிகள்
முன்வருவதில்லை.
களஞ்சேரியில் நடந்தேறிய சம்பவத்திற்கு காரணமான
குண்டர்களை, அவர்கள் எந்த கட்சியினராக இருந்தாலும், விரைவில் சட்டத்தின்
முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
பஸ்களை சரிசெய்வதில் என்ன சுணக்கம்?
சுதாகர்,
மல்லுார், சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கிராமங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகள், முறையாக
பராமரிக்கப்படுவதில்லை.
மேற்கூரை ஓட்டையாகவும், இருக்கைகள் கிழிந்ததாகவும் உள்ளன. மழைக்காலங்களில் குடை பிடித்து, பேருந்தில் பயணிக்க வேண்டி உள்ளது.
எப்போது சக்கரம் கழன்று விழும், பிரேக் முதலியவை பிடுங்கிக் கொள்ளும் என்ற பயம், பயணியர் மத்தியில் உள்ளது.
பயணியரின்
உடைமைகளை பதம் பார்க்கும் கிழிந்த தகடுகள், பயணியர் கைபிடிக்கும் இரும்பு
கம்பிகள், 'லொடலொட'வென ஆடுவது, இரவு நேரங்களில் பேருந்தின் உள்ளே போதிய
வெளிச்சம் இன்மை ஆகிய குறைகள் நிறைய உள்ளன.
இலவச பேருந்து என்ற பெயரில், பேருந்துகள் இயக்கப்படும் நேரமும் குறைக்கப்பட்டு விட்டது.
இரண்டு
திராவிட கட்சிகளும், ஒருவர் மேல் ஒருவர் குறை சொல்வதை விட்டுவிட்டு, 30
ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் அரசு பேருந்துகளுக்கு பதிலாக, புதிய
பேருந்துகள் வாங்கி, கிராமப்புறங்களிலும், குறைந்த துாரம் பயணம் செய்யும்
மாநகர பேருந்துகளையும் புதுப்பிக்க வேண்டும்.

