PUBLISHED ON : ஜூலை 17, 2024 12:00 AM

எம்.ஆசீர்வாதம், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்த கதை நாம் மூன்றாம் வகுப்பு பயின்ற போது, பாடப்புத்தகத்தில் இருந்த கதை. இந்த கதைக்கும், இந்த பகுதிக்கும், இந்த தலைப்புக்கும் என்ன தொடர்பு என படிப்பவர்கள் ஐயுறலாம். ஆனால், படிக்கப் படிக்க உங்களுக்கே, தொடர்பு விபரமாக, தெளிவாக தெரியவரும்.
போக்குவரத்து வசதிகள் மேம்படாத காலத்தில், மக்களும், வியாபாரிகளும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மாட்டு வண்டி, குதிரை வண்டி அல்லது நடந்தே சென்று வருவர். ஊரில் மளிகை கடை வைத்திருக்கும் செட்டியார், சரக்கு கொள்முதல் செய்ய, மடியில் பணத்தோடும், துணைக்கு ஒரு அடியாளோடும் பக்கத்து நகருக்கு நடைப்பயணமாக புறப்பட்டார்.
செல்லும் வழியில் இருட்டி விடவே, அங்கேயே ஒரு இடத்தில் படுத்து உறங்கி விட்டு, அதிகாலையில் புறப்படலாம் என்று தீர்மானித்து, செட்டியார் ஒரு செடி மறைவிலும், அடியாள் நடக்கும் பாதையிலும் படுத்து உறங்க துவங்கினர்.
நடுநிசியில் ஒரு திருடர் கூட்டம் வந்தது. கூட்டத்திலிருந்து ஒருவன், அடியாளின் உடல் தடுக்கி, கீழே விழுந்தான். விழுந்து எழுந்தவன், அடியாளை ஒரு மரக்கட்டை என்று நினைத்து சக திருடனிடம், 'அண்ணே! கீழே மரக்கட்டை கெடக்குதண்ணே! அதால தடுக்கி விழுந்துட்டேண்ணே...' என்றான். அதற்குள் மற்றொருவனும் தடுக்கி விழுந்து, 'அண்ணே! மரக்கட்டை காலுல காப்பு போட்டிருக்கண்ணே' என்றான்.
அதைக் கேட்ட கூட்டத் தலைவன், 'என்னது? கட்டை காப்பு போட்டிருக்கா? செம்பா, பித்தளையா?' என ஏளனமாக வினவினான். இந்த களேபரத்தில் துாக்கம் கலைந்து விழித்து எழுந்த அடியாள், 'செம்பா, பித்தளையான்னு செடி மறைவுல படுத்திட்டிருக்குற செட்டியாரை கேளு. தெரியும்' என்றான்.
'ஓஹோ! செட்டியார் வேற இருக்காரா? அப்போ நமக்கு நல்ல வேட்டை தான்' என்று சொல்லிக்கொண்டே, செடிமறைவில் படுத்திருந்த செட்டியாரை எழுப்பி, அவர் சரக்கு வாங்க மடியில் கட்டி வைத்து இருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு விரட்டி விட்டனர்.
இந்த கதை சொல்ல வரும் நீதி என்னவென்றால், துணைக்கு அழைத்து செல்பவர், கொஞ்சம் அறிவு உள்ளவராக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் இப்படித்தான் நடக்கும் என்பது தான்.
விஷயத்துக்கு வருவோமா?
வெறும், 16 ஆண்டுகள் மட்டுமே சென்னை ரிசர்வ் வங்கியில் பணியில் இருந்த செல்வப்பெருந்தகைக்கு, லண்டனில் கல்லுாரி வாங்கும் அளவுக்கு சொத்து எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது என்று, பா.ஜ.,வின் தமிழக தலைவர் அண்ணாமலை வினா எழுப்பி இருந்தார்.
அதற்கு செல்வப்பெருந்தகை, 'என் மனைவி லண்டனில் கல்லுாரி வாங்கியதும் உண்மை. அங்கு டைரக்டராக இருந்ததும் உண்மை. ஆனால், அந்த டைரக்டர் பதவியை 2012ம் ஆண்டே ராஜினாமா செய்து விட்டார்.
அந்த லண்டன் கல்லுாரி வாங்க, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தான் 500 கோடி ரூபாய் கொடுத்தார்' என, வலைதளத்தில் பதிவு செய்து விட்டார்.
இப்போது நாம் ஆரம்பத்தில் சொன்ன செட்டியார், அடியாள் மற்றும் செடி மறைவில் இருக்கும் செட்டியாரை கேள் என்பதையும் முடிச்சுப் போட்டு பாருங்கள்.
தான் சிக்கிக் கொண்டால் போதாது என்று சிதம்பரத்தையும் சேர்த்து கோர்த்து விட்டார் பாருங்கள்... அங்கே நிற்கிறார் மிஸ்டர் செல்வப்பெருந்தகை!
மாட்டிக்கிட்டாரடி மயிலைக்காளை!
கவனிக்குமா தேர்தல் ஆணையம்?
ஷிவானி
சிவகுமார், செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்:
நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களில் எத்தனையோ பேர், தங்களது ஓட்டை பதிவு
செய்து, ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லாமல்,
ஓட்டளிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
அவர்களுக்கு பாடம் சொல்வது
போல், ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றுத் திறனாளிகளில் சிலராவது, மிகவும்
கஷ்டப்பட்டு நடந்தோ, தவழ்ந்தோ வந்து ஓட்டளிப்பதை பார்க்கும் போது, கண்ணீர்
கசிகிறது; அவர்களின் ஜனநாயக கடமை உணர்வை கண்டு மனம் மகிழ்கிறது.
சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும், அப்படி ஒரு காட்சியை காண முடிந்தது.
இரண்டு
கால்களிலும், முட்டிக்கு கீழே, நடக்க முடியாத விதத்தில் குறைபாடு உடைய, 20
வயது மதிக்கத்தக்க பெண் வாக்களர் ஒருவர், கரடு முரடான மண் தரையில் முட்டி
போட்டு நடந்து வந்து, ஓட்டளித்த காட்சியை பார்த்த போது, மனம் வலித்தது.
ஆனால், அவரது முகத்தில், ஜனநாயக கடமையை நிறைவேற்றிய சந்தோஷத்தைக் காண
முடிந்தது.
எனவே, இப்படிப்பட்ட நடக்க முடியாத மாற்றுத்திறனாளி
வாக்களர்களுக்கு, சக்கர நாற்காலி வசதி செய்து கொடுப்பதுடன், 80 வயதுக்கு
மேல் உள்ள வாக்காளர்கள் விரும்பினால், தபால் ஓட்டு போட அனுமதி உள்ளது போல்,
மாற்றுத்திறனாளிகளும், அவர்கள் விரும்பினால் தபால் ஓட்டு போட அனுமதி
வழங்கவும் தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.
டாக்டர் வேதனைக்கு தீர்வு என்ன?
சுப்ர.அனந்தராமன்,
சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'கட்சி துவங்கி, 35
ஆண்டாகியும் ஆட்சிக்கு வர முடியல, மனம் வலிக்கிறது என ராமதாஸ் வேதனை' என்ற
செய்தியை சமீபத்தில், 'தினமலர்' நாளிதழில் படித்தேன். குறிப்பிட்ட ஒரு
சமுதாயத்துக்கு மட்டும் கட்சி நடத்தினால், 35 என்ன 350 ஆண்டுகளாக கட்சி
நடத்தினாலும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரவே முடியாது. தமிழகத்தில் எத்தனையோ
சமூகங்கள் உள்ளன. அனைவரும் ஒற்றுமையுடன், நல்லிணக்கத்துடன் வாழ்ந்து
வருகின்றனர்.
ஆனால், டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு
மட்டும் இடஒதுக்கீடு கேட்டு, அடம் பிடிப்பதால், மற்ற சமுதாயத்தினர் எப்படி
அவரது கட்சியை ஆதரிப்பார்கள்.
மற்ற கட்சிகளில், குறிப்பாக திராவிட
கட்சிகளில், அந்தந்த மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும்
சமூகத்தினருக்கு எம்.பி., - எம்.எல்.ஏ., சீட்களை தருவர்.
ஜெயித்தால்,
ஆட்சியிலும் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் தருவர். இதனால்
தான், அனைத்து சமூகத்தினரும் அக்கட்சியினருக்கு ஓட்டுகள் போட்டு, ஆட்சியில்
அமர்த்துகின்றனர்.
சொல்ல போனால், ராமதாஸ் குரல் கொடுக்கும்
சமூகத்தினரே, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் பல்வேறு பதவிகளை
அலங்கரிக்கின்றனர்.
ஆனால், ராமதாஸ் கூட்டணி கட்சிகளிடம் வாங்கும்
தொகுதிகளில் 99 சதவீதத்தை குறிப்பிட்ட சமுதாயத்துக்கே கொடுத்துவிட்டு,
ஒப்புக்கு வேறு சமுதாயத்துக்கு ஒரே ஒரு சீட் மட்டும் ஒதுக்குவார். இதனால்
தான், அவர் குரல் கொடுக்கும் சமுதாயத்தினர் கூட, பெருமளவில் அவரை
ஆதரிப்பதில்லை.
இதை பல முறை ராமதாஸ் தனித்து நின்று கிடைத்த
தோல்விகள் மூலம் அறிந்திருப்பார். எனவே, அவரது கட்சியை அனைத்து
சமுதாயத்தினருக்குமான கட்சி யாக மாற்றினால் ஒழிய, அவரது வேதனைக்கு தீர்வு
கிடைக்காது!