PUBLISHED ON : மார் 07, 2025 12:00 AM

ஆர்.சந்தானகிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசு ஆர்டிகள் 356ன் துணையோடு திராவிட மாடல் ஆட்சியை கலைத்து விட்டால், 'ஐயோ பாவிகள் ஆட்சியை கலைத்து விட்டனர்' என்ற அனுதாபத்தை வாக்காளர்கள் மனதில் தோற்றுவித்து, 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்ற திட்டத்துடன், ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறது தி.மு.க.,
ஹிந்தி எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை போன்றவை பயன் தராத நிலையில், தற்போது, தொகுதி மறுசீரமைப்பு எனும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.
தொகுதி மறுசீரமைப்பில், தமிழகம் எட்டு லோக்சபா தொகுதிகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனக்கூறி, அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
'இப்போதிருக்கும் 543 தொகுதிகளோடு, கூடுதலாக 33 சதவீத தொகுதிகளை, அதாவது 179 தொகுதிகளை அதிகரிக்கலாம்; அதன்படி பார்த்தால் தமிழகத்திற்கு கூடுதலாக 13 தொகுதிகள் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது' என்கிறார் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி.
அனைத்துக் கட்சி கூட்டம் கூடி முடிவெடுத்து விட்டால், தொகுதி சீரமைப்பு என்ற, 'கான்செப்ட்'டை மத்திய அரசு கிடப்பில் போட்டுவிடுமா என்ன?
தொகுதி மறுசீரமைப்பின் வாயிலாக என்ன நிகழ்ந்து விடப்போகிறது? எம்.பி.,க்களின் எண்ணிக்கை கூடும் அல்லது குறையுமே தவிர, அதனால், மக்களுக்கு ஒரு பயனும் உண்டாகப் போவதில்லை.
தற்போதுள்ள 39 எம்.பி.,க்கள் பார்லிமென்டின் என்ன செய்து கொண்டிருக்கின்றனரோ, அதைத்தான், 52 எம்.பி., க்கள் செய்யப் போகின்றனர்!
ஆனால், என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், தீர்மானங்கள் போட்டாலும், எவ்வளவு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்பு, உள்ளிருப்பு, வெளிநடப்பு நடத்தினாலும், மத்திய அரசு, ஆர்டிகள் 356ஐ பயன்படுத்தி தி.மு.க., அரசை ஒருபோதும் கலைக்காது.
காரணம், திராவிட மாடல் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளால், மக்கள் வெகுண்டு எழுந்து, அவர்களை வீட்டுக்கு அனுப்பும் மனமாற்றம் ஏற்படும் வரை காத்திருப்பரே தவிர, அனுதாப அலை வீசும் வாய்ப்பை வழங்கவே மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்!
வெறுப்பே மிஞ்சும்!
எஸ்.சுந்தாஸா,
தஞ்சாவூர்மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு ஊழியர்
மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ- -- ஜியோ'விற்கும்,
தமிழக அமைச்சர்களுக்கும்இடையே நடந்த பேச்சு தோல்வி அடைந்ததால், உயர்
நீதிமன்ற உத்தரவை மீறி, அடையாள போராட்டத்தை, பிப்., 25ல் நடத்தினர்,
ஜாக்டோ- -- ஜியோ அமைப்பினர்.
தங்களின், 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றாததால், இப்போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும்
மாணவர் களுக்கு தேர்வுகள் நடைபெறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும், பொது
தேர்தல் நடக்கும் சமயங்களிலும் இந்த அமைப்பினர் தங்கள் போராட்டத்தை
தீவிரப்படுத்துகின்றனர்.
பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு
பொதுத்தேர்வு நடைபெறும் நேரங்களில், ஆசிரியர் சங்கங்கள் போராட்டம்
நடத்துவதால், பொது மக்கள், இவர்களது சில நேர்மையான கோரிக்கைகளுக்கு கூட
ஆதரவு அளிப்ப தில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி
காலத்தின்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதி தலைமையில், ஜாக்டோ -
ஜியோ கூட்டமைப்பினர் மாநாடு நடத்தினர்.
கடந்த பொது தேர்தலின்
போதோ, சங்க உறுப்பினர்கள், தி.மு.க.,வை ஆதரித்து நேரடியாகவே தேர்தல்
பணியாற்றினர். இப்போது, தாங்கள் ஆதரித்த கட்சிக்கு எதிராகவே போராட்டம்
நடத்துவதுடன், தமிழக அரசை மிரட்டும் தொனியில் செயல்படுகின்றனர்.
ஊதிய
கமிஷன் அமைக்கும் முன், நிலுவைத்தொகை 20 சதவீதம் விடுவிப்பது, பழைய
பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது போன்றவை, இந்த 10 அம்ச கோரிக்கையில் இடம்
பெற்றுள்ளன.
அரசு கஜானா காலியாக இருப்பதால், இவர்களின் எந்தவித கோரிக்கையையும், எந்த ஆட்சி வந்தாலும் நிறைவேற்ற முடியாது என்பதே எதார்த்தம்!
இந்நிலையில்,
'கார்ப்பரேட்' ஆதிக்கம் என்று சொல்லிக்கொண்டே, வேறு எந்த மாநிலத்திலும்
இல்லாத அளவு, தமிழக அரசே தனியார் துறை வேலைவாய்ப்பை ஊக்குவிக்கிறது.
இன்னும் சில ஆண்டுகளில், இன்றுள்ள 60 சதவீத அரசு பணிகள் தனியார்வசம் செல்வது உறுதி!
அரசு
பட்ஜெட்டில் 60 சதவீதம், அரசு ஊழியர் சம்பளம் மற்றும் பென்ஷனுக்கு
செலவிடப்படு வதால், முன்னேற்ற திட்டங்கள் எதுவுமே அரசால் செயல்படுத்த
முடிவதில்லை என்பதே நிதர்சனம்!
எனவே, லஞ்ச புகாரில் சிக்கியவரை
சங்கத்திலிருந்து நீக்குவது, அரசின் நிதிநிலையை சீர்படுத்துவது, மாணவர்
முன்னேற்றத்தில், 100 சதவீத அர்ப்பணிப்போடு செயல்படுவது, போக்சோவில் கைது
செய்யப்படும் ஆசிரியர்களின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பது, தேர்வு
நேரங்களில் போராட்டம் செய்வதில்லை போன்ற உறுதிமொழிகளை ஏற்று, மக்களுக்காக
சில ஆண்டுகள் ஜாக்டோ- - ஜியோ செயல்பட்டால், மக்களும் இவர்களுடன் சேர்ந்து
போராடுவர். இல்லையேல், மக்கள்மற்றும் அரசின் வெறுப் புக்கே ஆளாவர்!
ஒருதலைப்பட்சம் ஏன்?
வெ.சீனிவாசன்,
திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆன்மிக பேச்சாளர்,
ஜக்கி வாசுதேவின் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள யோகா மையம்,
சுற்று சூழல் மாசு வாரியத்தின் அனுமதி பெறவில்லை என்று தி.மு.க., அரசு
வழக்கு தொடர்ந்தது.
'கல்வி நிறுவனங்களுக்கு சில விலக்குகள் உள்ளன; எனவே அது தேவையில்லை' என்று நீதிமன்றம் கூறி விட்டது.
இங்கே
நடக்கும் சிவராத்திரி விழா மிகவும் பிரசித்தம். அரசியல்வாதிகள்,
தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்கும்
இவ்விழாவில், இரவு முழுதும் சிவ பூஜை, சிவன் நாம ஸ்மரணை நடைபெறும்.
சமீபத்தில்,
எந்தக் கட்சி அனுதாபியோ அல்லது எவரால் துாண்டப்பட்டாரோ தெரியவில்லை...
'சிவராத்திரி விழா அங்கே கொண்டாட அனுமதி வழங்கக்கூடாது; அதிக சத்தம்
உண்டாகிறது' என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதையும்
தள்ளுபடி செய்துள்ளது, நீதிமன்றம்.
தவறு செய்திருந்தால், எவராக
இருந்தாலும் சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில்
மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் பலர்
விதிமுறைகளை மீறி பெரும்கட்டடங்கள் எழுப்பியுள்ளனர்; போதுமான ஆசிரியர்கள்,
அடிப்படை வசதிகளின்றி, எத்தனையோ கல்லுாரிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எத்தனையோ
மசூதிகள், சர்ச்சுகள் பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன;
அவற்றையெல்லாம் எவரும் கண்டு கொண்டதாகவோ, நடவடிக்கை எடுத்ததாகவோ
தெரியவில்லை. ஆனால், ஈஷா யோகா மையம் மட்டும்தொடர்ந்து, 'டார்க்கெட்'
செய்யப்பட்டு வருவது மக்கள் மனங்களில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
'இது அனைவருக்கும் பொதுவான அரசு' என்று வெறுமனே கூறுவதை விட்டு, அதை உண்மையில் செயல்படுத்தி காண்பிக்கட்டும்.
அதைவிடுத்து, ஒருதலைப்பட்சமாக நடக்க வேண்டாம்!