PUBLISHED ON : ஜூன் 22, 2024 12:00 AM

ஆர்.பாலமுருகன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு... நீங்கள் நலம்; ஆனால், தமிழக மக்களாகிய நாங்கள் நலமாக இல்லை. காரணம்...
l துாத்துக்குடி ஆர்.டி.ஓ., ஆபீசில் கணக்கில் வராத 1.16 லட்சம் பறிமுதல்
l மதுரை, மேலுாரில் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு தருவதற்காக, 3 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற கடமை தவறாத அரசு அதிகாரிகள்l சிதம்பரத்தில் போலி சான்றிதழ் அச்சடித்து வழங்கிய இருவர் கைது
l கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி, எக்கச்சக்க பேர் மரணம்.
இவை எடுத்துக்காட்டாக உள்ள சில விஷயங்கள் தான். ஆனால், இதுபோன்ற செய்திகளை தான், தினமும் பத்திரிகைகளில் படிக்கிறோம். தமிழகத்தில் இனி சாமானிய மக்கள் நிம்மதியாக வாழ்வது கேள்விக்குறியே. தமிழகம் விரைவில், மக்கள் வாழ்வதற்கு தகுதி இல்லாத மாநிலமாக மாறப் போகிறது.
தமிழகத்தில் நடக்கும் விஷயங்கள் உங்கள் காதுகளுக்கு எட்டுமா, எட்டாதா என்பது எங்களை போன்ற மக்களுக்கு சிதம்பர ரகசியமாகவே உள்ளது. 'நாம் நல்லாட்சி தான் நடத்திக் கொண்டிருக்கிறோம்' என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்!
ஆனால், உங்கள் அரசின் நற்பெயரும், அவப்பெயரும் உங்களுக்கு கீழ் இருக்கும் அரசு அதிகாரிகளின் கையில் தான் இருக்கிறது. அவர்கள் சரியாக செயல்படவில்லை எனில், உங்கள் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுவது உறுதி.
இங்குள்ள அதிகாரிகளுக்கு கடமையை மிஞ்சிய அலட்சியம் வந்து விட்டது. இதற்கு காரணம், தண்டனையின்மையா அல்லது அரசியல்வாதிகளின் முழு ஒத்துழைப்பா? இதை எல்லாம், ஒரு ரகசிய குழு அமைத்து விசாரித்து இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, சாட்டையை சுழற்றும் நேரம் வந்துவிட்டது.
தயவுசெய்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனைகளை கொடுங்கள் முதல்வர் அவர்களே... அப்போது தான் தமிழகமும், மக்களும் முன்னேற முடியும்.
எனவே, அச்சமின்றி சாட்டையை சுழற்றுங்கள். வெற்றி உங்களுக்கு மாலையாக வந்து விழும். ஓட்டுக்காக பார்க்காமல், மக்களுக்காக பாருங்கள்.
கள்ளச்சாராய மரணங்களுக்கு இணையாக நீங்கள் எவ்வளவு லட்சங்கள் கொடுத்தாலும், அந்த உயிர்கள் மீண்டு வரப்போவதில்லை. உங்கள் பதவிக்காலம் முடிவதற்குள், இதுபோன்ற குற்றங்களை தயவுசெய்து குறைத்து, மக்களை காப்பாற்றுங்கள்.
வலிமையான தலைவர் வரு வாரா?
வெ. சீனிவாசன்,
திருச்சி யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் நடந்த
தமிழக காங்., பொதுக்குழு கூட்டத்தில், 'எத்தனை காலம் தான் தி.மு.க., தோளில்
ஏறி பயணிப்பது'என்ற ஆதங்கத்தை பலர் பகிர்ந்து கொள்ள, சிலர், 'தி.மு.க.,
இல்லாமல் பயணித்தால் தோற்றுப் போவோம்' என்ற தற்போதைய யதார்த்தத்தையும்
விளக்கியுள்ளனர்.
இளங்கோவன் போட்டியிட்ட ஈரோடு இடைத்தேர்தலில்
வெற்றி பெற தி.மு.க., என்னவெல்லாம் செய்தது என்பதை நாம் அறிவோம். அதேபோல்
தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்
செய்யப்பட்டதற்கும், தி.மு.க.,வே காரணம் என்பதை அனைவரும் அறிவர். எனவே,
அவர்கள் இருவரும் தி.மு.க.,வுக்கு ஆதரவாக பேசியதில் வியப்பில்லை.
காமராஜருக்கு
பிறகு, வலிமையான பிராந்திய தலைவர்களை காங்கிரஸ் மேலிடம் வளர விடுவதில்லை;
கூட்டணி கட்சிக்கு ஒத்து ஊதும் தலைவர்களையே நியமிக்கின்றனர். தற்போதுள்ள
தலைவர் கூட, தி.மு.க., சிபாரிசில் நியமிக்கப்பட்டவர் தான் என்று
கூறுகின்றனர்.
நல்லவன், கெட்டவனோடு சேர்ந்தால், நல்லவனும்
கெட்டவனாகவே பார்க்கப்படுவானல்லவா... அது போலவே, தி.மு.க., செய்யும்
தவறுகளுக்கு எல்லாம் காங்கிரசார் முட்டுக் கொடுக்க வேண்டி உள்ளது.
எனவே,
தி.மு.க., தலையீடு இல்லாமல், அனைவருக்கும் ஏற்புடைய, வலிமையான தலைவர்
ஒருவர் தமிழக காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கோஷ்டிப் பூசல்கள்
ஏதும் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். தி.மு.க., நல்லது
செய்தால் பாராட்டவும், தவறு செய்தால் கண்டிக்கும் துணிவும் வேண்டும்.
மேலும்,
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல்,
தி.மு.க.,வினரை போல் திறம்பட கள பணியாற்ற தேவையான தொண்டர்களை தயார் செய்தல்
போன்ற பணிகளையும் முடுக்கி விட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால்,
சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக
உருவெடுக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.
அண்ணாதுரைக்கும், தி.மு.க.,வுக்கும் சம்பந்தமே இல்லை!
ஆர்.மகேசன்,
அருப்புக் கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழகத்தில், 1949-ல் அண்ணாதுரையால் துவக்கப்பட்ட தி.மு.க.,வுக்கும்,
தற்போதைய திராவிட மாடல் தி.மு.க.,வுக்கும் சம்பந்தமே இல்லை என்பது, சமீப
கால நிகழ்வுகள் வெட்டவெளிச்சமாக்குகின்றன.
சமீபத்தில் நடந்து
முடிந்த லோக்சபா தேர்தலில், தோல்வியுற்ற பா.ஜ., தலைவர் அண்ணாமலையை
இழிவுபடுத்தி, ஆட்டின் கழுத்தில் அவர் படத்தை தொங்கவிட்டு,
காட்டுமிராண்டித்தனமாக நடுரோட்டில் அந்த ஆட்டை வெட்டி ஆனந்தம் அடைந்தனர்
தி.மு.க., தொண்டர்கள். எவ்வளவு கீழ்த்தரமான, அதிர்ச்சி தரக்கூடிய செயல்
இது. தலைமையோ, வாயே திறக்கவில்லை.
கடந்த, 1967-ல் நடந்த சட்டசபை
தேர்தலில், காங்கிரஸ் தலைவர் காமராஜர் தோற்றார். தி.மு.க.,வினர் அனைவரும்
மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர். ஒருவர் மட்டும் ரசிக்கவே இல்லை. அவர் தான்,
கட்சித் தலைவரான அண்ணாதுரை. 'காமராஜரின் தோல்வியை யாரும் கொண்டாடக் கூடாது'
என உத்தரவு போட்டார்.
கடந்த, 1962-ல் சீனப் போர் நடந்தபோது,
தி.மு.க.,வின் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த அண்ணாதுரை, 'காங்கிரஸ் நமக்கு
எதிரியாக இருந்தாலும், தேச நலன் தான் முக்கியம்' என்று கூறி, யுத்த நிதி
வசூலித்து நேருவிடம் ஒப்படைத்தார்.
அண்ணாதுரை முதல்வராக பொறுப்பேற்ற
பின், 'அரசின் வருமானத்திற்காக மது விலக்கை ரத்து செய்வது, மூட்டைப்
பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதற்கு சமம்' என்று கூறி, தன் மது
விலக்கு கொள்கையில் உறுதியாக இருந்தார்.
இப்போது புரிகிறதா, இக்கடிதத்தின் முதல் வாக்கியத்தின் பொருள்?