PUBLISHED ON : மே 15, 2024 12:00 AM

என்.ஏ.நாக சுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் கட்சியில் தலைமுறை தலைமுறையாக அரசியல் பண்ணும் ப.சிதம்பரமும், அவர் மகன் கார்த்தியும் என்னென்னவோ செய்து ஒவ்வொரு முறையும் வெற்றி பெறுகின்றனர். ஒவ்வொரு முறையும், தொகுதிக்கும், மக்களுக்கும் ஒன்றும் செய்வதில்லை; இது அவர்கள் மீதான நிரந்தர குற்றச்சாட்டு!
சில தினங்களுக்கு முன் கார்த்தி சிதம்பரம், 'தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு வேணும்' என பேசி இருந்தார்.
நீட் தேர்வு குறித்து வழக்கில் வாதாடி, இனி நீட் தேர்வு ரத்து என்பது நடக்காத காரியம் என்ற தீர்ப்பை, மக்களுக்கு அறியத் தந்தவர், கார்த்தியின் தாய் நளினியே!
கார்த்தியிடம் சில கேள்விகள்...
* யாரை திருப்தி பண்ண, நீங்கள் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்கிறீர்கள்?
*ஏழை வீட்டு பிள்ளைகள் வெற்றி பெற்று மருத்துவர் பணிக்குச் செல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?
* பணக்காரராக ஆனால் மக்குப் பிள்ளைகளாகப் பிறந்தவர்கள், டாக்டராக முடியவில்லையே என்ற ஆதங்கமா உங்களுக்கு?
* தனியார்வசம் உள்ள மருத்துவக் கல்லுாரிகள் நீட் தேர்வு நடைமுறையால், கல்லா கட்ட முடியாமல் போகிறதே என்ற வருத்தமா?
* தமிழக குழந்தைகளின் திறமையை, குறைத்து மதிப்பிடுவது ஏன்?
* படிப்பின் மாண்பை உணர்வதற்குள், அக்குழந்தைகள் கஞ்சா போதைக்கு அடிமையாகி, சிக்கி சின்னாபின்னமாவது கார்த்திக்குத் தெரியவில்லையா? அவர்களை மடைமாற்றும் முயற்சிக்கு, முட்டுக்கட்டை போடுவது ஏன்?
* தி.மு.க., - எம்.பி., கனிமொழியின், 'தாலி அறுப்பை ஒழிப்பேன்' என்ற வீர வசனம், பொய்யாகிப் போக வேண்டும் என்ற எண்ணமா? கார்த்தி, வெயிலில் அதிகம் அலைந்து திரிந்து விட்டாரோ என நினைக்கத் தோன்றுகிறது.
மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் தாங்க!
-வி.எஸ்.ராமு,
செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்து, 39 தொகுதிகளின் மின்னணு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 39 மையங்களில் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு
பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளரின் முகவர்கள், 24 மணி நேரமும்
பாதுகாப்பில் உள்ளனர். அறைக்கு உள்ளேயும், வெளியேயும்கண்காணிப்பு
கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி,
ஈரோடு, தென்காசி, விழுப்புரம் தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில்
பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் செயல்பாடு முடங்கியதால், உடனே பழுது சரி
செய்யப்பட்டுள்ளது.
'அய்யோ.... அந்த தொகுதியில் வைக்கப்பட்டுள்ள
மின்னணு இயந்திரங்கள் அறையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள்
செயல்படவில்லை... இந்த தொகுதியில் செயல்படவில்லை' என, கட்சிக்காரர்கள்
கொதித்து பொங்கி எழுந்து விட்டனர். கடும் உழைப்பை கொடுத்து, பெருமளவு பணம்
செலவு செய்து, ஒவ்வொரு வேட்பாளரும் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
சில
மணி நேரத்திற்குள், கேமராக்கள் சரி செய்யப்பட்ட போதிலும், அந்த சில மணி
நேரம் கட்சியினரால் நிலைகொள்ள முடியவில்லை; தவியாய் தவித்து விட்டனர்.
அதே
நேரம், நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதி,
ஐந்தாண்டுகள் நமக்காக நடுநிலையுடன் உண்மையாக உழைக்க வேண்டும் என்று மக்கள்
எதிர்பார்ப்பதும் நியாயம் தானே?
சில மணி நேரம் கேமராக்கள் செயல்பாடு
முடங்கியதால், கொதித்து போராட்டத்தில் குதிக்கின்றனரே... பல நாட்களாக
மின்சாரம், குடிநீர் வசதியின்றி, எத்தனையோ ஊர்களில் மக்கள் இன்றும் அல்லல்
பட்டு கொண்டு தான் இருக்கின்றனர்.
தரமில்லாத சாலை, குடிநீர் குழாய்,
கட்டுமானங்கள், முறையாக குடிநீர் வினியோகமின்மை, அள்ளப்படாத குப்பை, கொசு
மற்றும் நாய் தொல்லை, லஞ்சம் கொடுத்து அரசு அலுவலகங்களில் சேவையை பெற
வேண்டிய அவலநிலை என, மக்களின் அவதிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
கேமரா
பழுதுக்காக கொதித்து எழுபவர்கள், இதுபோன்ற மக்களின் அத்தியாவசிய
பிரச்னைக்கும் கொதித்து எழுந்து, அவற்றை உடனே தீர்ப்பதிலும் ஆர்வம் காட்ட
வேண்டும்.
தயாராவோம் பஸ் கட்டண உயர்வுக்கு!
ருக்மணி
தேவி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய,
'இ - மெயில்' கடிதம்: தனியார் மற்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள்,
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.
வெளியே வந்த
கையோடு, 'அரசின், பெண்களுக்கான இலவச பயண திட்டத்தால், தனியார் பஸ்களில்
கூட்டம் குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையால் ஏற்படும் இழப்பை சரி
செய்ய முடியாமல் சிரமப்படுகிறோம். எனவே, அரசு எங்களுக்கு உதவ வேண்டும்' என
கோரிக்கை விடுத்தனர்.
லோக்சபா தேர்தல் முடிந்தது. அடுத்த இரண்டு
ஆண்டுகளில், சட்டசபை தேர்தல் வர உள்ள தால், முன்கூட்டியே பஸ் கட்டணத்தை
உயர்த்தி விட்டால், தேர்தல் நேரத்தில் மக்கள் அதை மறந்து விடுவர் என்பதை
அறிந்து வைத்து, 'சரடு' விட்டுள்ளனர்.
மின் கட்டண உயர்வு, சொத்து
வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பத்திரப் பதிவு
கட்டண உயர்வு என, ஏகப்பட்ட 'உயர்வு'களைப் பார்த்து விட்டோம். முதல்வரும்,
'சாதனை படைத்து உயர்ந்து விட்டோம்' என, புளகாங்கிதம் அடைந்து உள்ளார்.
எனவே, அடுத்த கட்டண உயர்வுக்குத் தயாராவோம்!
மதுரை பாலம் மிளிருமா?
மு.சு.அன்புமணி,
மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுரையின் வடக்கு --
தெற்கு பகுதியைஇணைக்கும் 'ஆல்பர்ட் விக்டர்' மேம்பாலம், 137 ஆண்டுகள்
கடந்து, நகரின் இதயமாக இயங்கி வருகிறது. மதுரையில், எண்ணற்ற பாலங்கள்
இருந்தும், இன்றும் பலம் வாய்ந்ததாக, ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்
திகழ்கிறது.
கடந்த, 1886, டிசம்பர் 8ம் தேதி, ஆங்கிலேய வைசிராய்,
ஏர்ல் ஆப் டபரின் என்பவர் அடிக்கல் நாட்டினார். இதற்கான கல்வெட்டு இன்றும்,
பாலத்தின் கீழ் முதல் வளைவு சுவற்றில் உள்ளது.
ஆனால் கல்வெட்டு
எழுத்துகள் தெரியாமல், மங்கிக் கிடக்கின்றன. இதுபற்றி புகார் கூறினால்,
நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித் துறை என, பொறுப்பை கைமாற்றி விடுகின்றனரே
தவிர, நடவடிக்கை ஏதும் இல்லை.
மதுரையின் வரலாற்று பெருமைகளில்
ஒன்றான, ஏ.வி.மேம்பாலத்தின் கல்வெட்டு, புதுப்பிக்கப்பட்ட வேண்டும்;
வர்ணங்கள் பூசி அழகுபடுத்தப்பட வேண்டும்.

