PUBLISHED ON : மார் 27, 2024 12:00 AM
எச்.ஆப்ரகாம், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுபான கொள்கை விஷயத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, புதுடில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த கெஜ்ரிவால் ஒன்றும், ஏனோதானோ அரசியல்வாதி அல்ல.
அரசு அதிகாரியாக உயர் பதவியில் இருந்து, சட்டத்தை, 'ஏ டு இசட்' கரைத்து குடித்தவர்.
அந்த டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை ஒரு முறை அல்ல, இருமுறை அல்ல, கிட்டத்தட்ட ஒன்பது முறைகளுக்கு மேல் சம்மன் அனுப்பி உள்ளது.
அமலாக்கத்துறை அனுப்பி இருந்த சம்மன்களுக்கு மரியாதை கொடுத்து, முன்னரே இந்த கெஜ்ரிவால் ஆஜராகி இருந்தால், கைதிலிருந்து தப்பித்து இருக்கலாம்.
ஆனால், இந்த கெஜ்ரிவால், 'ஆஜராகாமல், டிமிக்கி கொடுத்தால், எப்படியும் கைது செய்வர். அதை வைத்து அனுதாபம் தேடி, லோக்சபா தேர்தலில் வெற்றிக்கனிகளை அறுவடை செய்து விடலாம்' என்று திட்டம் போட்டுவிட்டார்.
கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை பாராட்டி, முதன் முதலாக அறிக்கை வெளியிட்டு இருப்பவரே, அந்த கெஜ்ரிவாலை அரசியலுக்கு அறிமுகப்படுத்திய சமூக சேவகர் அன்னா அசாரே தான்.
அறிமுகப்படுத்திய ஆசானே, அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கொண்டிருக்க, இந்த ஏனோதானோ அரசியல்வாதிகளின் புலம்பல் ஓசை, நம் காதுகளை செவிடாக்குகிறது; ஜனநாயகம் என்றால் என்ன என்ற சந்தேகத்தையும் விதைக்கிறது.
'அப்பாடக்கர்' துரைமுருகனின், சிந்தனையை சிதறடிக்கும் ஸ்டேட்மென்ட்டை பாருங்கள்...
'கெஜ்ரிவாலின் கைது, எதிர்க்கட்சிகளுக்கு பாதிப்பு என்பதை விட, இந்த நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பு.
'தேர்தல் களத்திலே நிற்கும் போது, அந்த நேரத்தில் நடுவில் இறங்கி, தன்னிடத்தில் அதிகாரம் இருக்கிறது என்ற போக்கில், இத்தகைய செயல் செய்வது, ஜனநாயகத்திற்கு அழகல்ல, மோடிக்கு அழகல்ல என்பது என் கருத்து' என, 'கருத்து' தெரிவித்து இருக்கிறார்.
அன்று சட்டசபையில், ஜெயலலிதாவின் புடவையை இழுத்தபோதே, துரைமுருகனின் ஜனநாயக பார்வையை நாட்டு மக்கள் தெரிந்து கொண்டிருக்கிறோம்; இப்போது, கெஜ்ரிவாலின் கைதுக்கு ஜனநாயகத்தை சந்திக்கு இழுத்து இருக்கிறார்.
தெரியாமத்தான் கேக்குறேன்... ஜனநாயகம்னா என்ன?
மாநகரவாசிகளை குறை சொல்வதா?
பி.செண்பகவள்ளி,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் ஒரு
வாசகர், மாநகரவாசிகள் அதிகம் ஓட்டு போடுவதில்லை என்று குறை கூறி இருந்தார்.
உண்மை தான் அவர் சொல்வது.
ஏனெனில், சென்னை போன்ற பெரு நகரங்களில்
பெரும்பாலும், எந்த முக்கிய அரசியல்வாதியும் போட்டியிட விரும்புவதில்லை.
ஜாதிப் பாசமும், ஊர்ப் பாசமும் அவரை அரித்துத் தின்று விடுகிறது. தனக்குப்
பிடித்த இடத்தில் போட்டியிடக் கிளம்பி விடுகிறார்.
இதனால், என்னைப் போன்ற நகரவாசிகளுக்கு மிகவும் பிடித்த வேட்பாளர்களாக இருந்தாலும், அவர்களுக்கு ஓட்டு போட முடிவதில்லை.
லோக்சபா
தேர்தலுக்காக நான் ஓட்டு போடும் தொகுதி, ஸ்ரீபெரும்புதுார். இங்கு
பெரும்பாலும், தி.மு.க.,வில்டி.ஆர்.பாலு தான் போட்டியிடுவார்.
இவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றாலும், படித்து வளர்ந்தது அனைத்தும் சென்னையே.
இவரை
எதிர்த்து யார் போட்டியிட்டாலும் தோற்று விடுவோம் என்ற பயத்தில், முகமே
அறியாத, சின்னமே தெரியாத நபர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்படுவர்.
பிரபல
சின்னத்தைச் சேர்ந்தவர் என்றாலும், முகம் அறியாதவராக இருப்பார். எனக்குப்
பிடித்தவருக்குத் தானே நான் ஓட்டு போட முடியும்! 'பரவாயில்லை; சின்னத்தில்
போடுகிறேன்' என்றெல்லாம் ஓட்டு போட முடியாது.
டி.ஆர்.பாலு, 1996 முதல் ஐந்து முறையாக, இதே தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று வருகிறார்.
ஐந்து முறையாக எம்.பி.,யாக உள்ளவர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை முன்னேற்றிக் காட்டி இருக்க வேண்டும் அல்லவா! நடந்ததா?
புகைப்படங்களில்
தென்படுவது போல், சட்டை கசங்காமல், அலுங்காமல், குலுங்காமல் கட்சிப்
பணியாற்றி, 'பெரிய ஆள்' என்ற தோரணையிலேயே, காலம் கடத்தி விட்டார்.
டி.ஆர்.பாலு, ஒரு உதாரணம் தான்!
சட்டசபை தேர்த லையோ, மாநகராட்சி தேர்தலையோ கேட்கவே வேண்டாம். நாங்கள் படும் பாடு, சொல்லி மாளாது!
வெற்றி
பெற்ற எம்.எல்.ஏ., தொகுதிப் பக்கம் தலைவைக்க மாட்டார் என்பது, எல்லா
தொகுதியிலும் நிலவும் பிரச்னை தான்; கவுன்சிலர்கள், 'செயல்பாடு'களைக்
கேட்டாலோ, காதே கூசும்!
நம் வீட்டில், 'டிரெய்னேஜ்' பிரச்னை
என்றால், அவருக்கு காசு வெட்டினால் தான், அப்பிரச்னை சரியாகும். நாம்
எதற்காக வரி கட்டுகிறோம்? வேட்பாளரை நாம் தேர்ந்தெடுப்பது எதற்காக? நமக்கு
சேவை செய்ய தானே?
எனக்குப் பிடித்த வேட்பாளர், அடுத்த தொகுதியில்
நின்றால், நான் எப்படி அவருக்கு ஓட்டு போட முடியும்? நம் தேர்தல் நடைமுறை
அதற்கு இடம் கொடுக்கவில்லையே?
அரசியல்வாதிகள் தங்கள்பதவி மோகத்தை அனுபவிக்க, மாவட்டங்களைப் பிரிப்பது துவங்கி, வார்டுகள் வரை பிரித்து மேய்கின்றனர்.
லோக்சபா
தேர்தலுக்கு, நமக்குப் பிடித்த வேட்பாளர், நாடு அளவில், எங்கு நின்றாலும்
ஓட்டு போடலாம் என்று, தேர்தல் நடைமுறையை மாற்றியமைத்து, அதன் வழியே
பிரதமர், அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்தால் நல்லது எனத் தோன்றுகிறது.
சட்டசபைக்கு, மாநில அளவில் ஓட்டு போட்டு, முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை வேண்டும்.
எனக்குப்
பிடித்த வார்டு கவுன்சிலர், சிறப்பான செயல்பாடு கொண்டவர் என்றால்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எங்கு போட்டியிட்டாலும், பெரும்பாலானோர் அவருக்கு
தான் ஓட்டு போடுவர். அவர் கீழ் அதிகாரிகளை நியமித்து, பணிகளை
மேற்கொள்ளலாமே?
அப்போது, புற்றீசல் கட்சிகள் அனைத்தும் மறையும்;
கவுரவமான அரசியல்வாதிகள் உருவாவர்; ஓட்டு போடுபவர்களுக்கும் மனத் திருப்தி
ஏற்படும்.
மாநகர்களில் வசிக்கும் பல பேர் ஓட்டு போடாததற்கு,
அரசியல்வாதிகள் மீதுள்ள கடும் கோபம் தான் காரணமே தவிர, வீட்டை விட்டு நகரக்
கூடாது என்ற எண்ணம் கிடையாது!

