PUBLISHED ON : மே 04, 2024 12:00 AM

க.சுரேஷ், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா - அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர பகைவனும் இல்லை' போன்ற புதிய சொலவடைகளை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர், காமெடி நடிகர் கவுண்டமணி.
அந்த சொலவடைகளை எல்லாம் முழுங்கி ஏப்பம் விடும் விதமாக சில சம்ப வங்கள், தற்போதைய லோக்சபா தேர்தலில் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
பொதுவாக அரசியல் கட்சிகள், கொள்கை, கோட்பாடு என்றெல்லாம் 'பிலிம்' காட்டி, மக்களை ஏமாற்றுவது வழக்கம்.
இப்படி 'பிலிம்' காட்டி, பழம் தின்று கொட்டை போட்ட மூத்த தலைவர்களுக்கே, அவை என்னவென்று விபரமாக தெரியாது.
இதில், கம்யூனிஸ்ட்களும், கொள்கை, கோட்பாடு போன்ற வார்த்தைகளோடு, 'சித்தாந்தம்' என்ற ஒன்றையும் சொல்லி, அலப்பறை செய்வர்.
இந்த தேர்தலில், மேற்படி மூன்று வார்த்தைகளும் காலாவதி ஆகிவிட்டன.
இப்போதுள்ள ஒரே தெளிவான கொள்கை, மக்களை ஏமாற்றி, மூளைச்சலவை செய்து, ஓட்டுகளைப் பெற்று, பதவியில் அமர்வது மட்டும் தான்.
கேரளாவிலுள்ள வயநாடு லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ராகுலும், பா.ஜ.க., வேட்பாளராக கே.சுரேந்திரனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக, அக்கட்சியின் பொதுச் செயலர் ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் மோதுகின்றனர்.
வேடிக்கை என்னவென்றால், 'இண்டியா' கூட்டணி என்ற பெயரில், காங்.,கும், கம்யூ.,வும், மற்ற மாநிலங்களில் கூட்டணியில் உள்ளன. இங்கே, எதிரெதிர்!
கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் ஆகியவற்றை உயிர் மூச்சாக கடைபிடிக்கும் கட்சி செய்யும் காரியமா இது?
இது கூட வேடிக்கையில்லை... இதற்கு மேல் தான் காமெடியே!
வயநாட்டில், ராகுல் வெற்றி பெறுவாரா, வெற்றிகரமாக தோல்வியை ஆரத் தழுவுவாரா என்பது, ஜூன் 4ம் தேதி தான் தெரியும்.
ஒருவேளை, தோல்வியை ஆலிங்கனம் செய்ய வேண்டி வந்தால், பார்லிமெண்டில், மோடியை பார்த்து கண்ணடிக்கவோ, கட்டித் தழுவவோ முடியாதல்லவா! அதனால், பாதுகாப்பாக, காங்கிரசின் பரம்பரை லோக்சபா தொகுதியான உ.பி., மாநில அமேதியிலும் போட்டியிடப் போகிறாராம்.
கடந்த, 2019ல், இதே தொகுதியில் போட்டியிட்டு, பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானியிடம் தோற்றார் ராகுல்.
தற்போது, வயநாடு தொகுதியில், கடந்த 26ல் ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது; அமேதியில், வரும் 24ம் தேதி தான் ஓட்டுப் பதிவு.
அதாவது, வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜா, அமேதி தொகுதியில் ராகுலுக்கு ஓட்டளிக்கும்படி, அங்கு சென்று பிரசாரம் செய்வாராம்!
அவர்களைப் பொறுத்தவரை, நாமெல்லாம் முட்டாள்; அவர்களெல்லாம் மேதாவிகள்!
பாடம் கற்பிக்க வேண்டும் இத்தகைய அரசியல் விஷமிகளுக்கு!
பாகிஸ்தானின் அவல நிலை!
வெ.சீனிவாசன்,
திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் பாகிஸ்தான்
பிரதமர், வங்கதேசத்தைப் பார்க்க தனக்கு வெட்கமாக இருக்கிறது என்று
கூறியுள்ளார்.
சிறுவனாக தான் இருந்தபோது, பாகிஸ்தானுக்கு வங்கதேசம்
ஒரு சுமையாக இருந்ததாகவும், தற்போது அது, பாக்.,கைவிட வேகமாக வளர்ந்து
விட்டதாகவும் கூறியுள்ளார்.
'இந்தியாவை விட்டு நாம் ஏன் பிரிந்தோம் என நினைக்கத் தோன்றுகிறது' என, பாக்., மக்கள் வருத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
பக்கத்து
வீடான நம்முடன் நண்பராக இல்லாமல் விரோதம் பாராட்டுதல், சாப்பிட வழியில்லை
என்கிற போதிலும் அணு ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வாங்குவது,
சிறுபான்மையினர்களை கொடுமைப்படுத்துவது, பழைமைவாத கருத்துக்களிலிருந்து
வெளியே வர மறுப்பது...
பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பதிலாக, தீவிரவாதத்தை உற்பத்தி செய்வது போன்ற வேண்டாத வேலை பார்ப்பதால், அந்நாடு சீரழிகிறது.
போறாத
குறைக்கு நம் நாட்டு பகுதியை ஆக்கிரமிப்பது, சுயநலம் மிக்க சீனாவை
கண்மூடித்தனமாக நம்புவது, கடனுக்கு மேல் கடன் வாங்குவது ஆகியவை, பாக்.,கை
புதை குழியில் தள்ளுகின்றன.
வங்கதேசமோ, நம்முடன் நட்பு பாராட்டி,
தீவிரவாதத்தை கத்தரித்து வைத்து, சாமர்த்தியமாக செயல்படுகிறது. பாக்.,
பாடம் கற்க வேண்டியது நிறைய உள்ளது.
தேர்தலில் பாடம் படித்த அண்ணாமலை!
அ.குணா,
கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், இரண்டு
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ., வளர்ச்சி அடைந்துள்ளது என்பது உண்மை.
ஜூன் 4ல் வெளியாக உள்ள லோக்சபா தேர்தல் முடிவுகளில், இது உறுதியாகும்.
எப்போது அண்ணாமலை பா.ஜ., மாநில தலைவராக அமர்ந்தாரோ, அப்போது முதல் தற்போது
வரை, அவரது செயல்பாடுகள் வாயிலாக, பா.ஜ.,தான், திராவிட கட்சிகளுக்கு மாற்று
என்ற எண்ணத்தை தமிழக வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளார்.
அதேநேரம்,
இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு இணையாக, தமிழகம் முழுதும் ஒவ்வொரு
ஓட்டுச்சாவடிக்கும் பா.ஜ., சார்பில் பூத் கமிட்டிகளை ஸ்திரமாக அமைக்க
தவறியதும், வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு வார்டாக சரிபார்க்க தவறியதும்,
அவருக்கு சரியான பாடமாக அமைந்துள்ளது.
வாக்காளர் பட்டியலை
முன்னதாகவே சரிபார்த்திருந்தால், இப்போது கோவையில் ஒரு லட்சம் பா.ஜ.,
ஆதரவாளர்களின் ஓட்டுகள் நீக்கப்பட்டு விட்டதாக புலம்ப நேரிட்டிருக்காது.
இந்த தேர்தல் வாயிலாக, அண்ணாமலைக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைத்து விட்டது.
'அடுத்த
500 நாட்களில் சட்டசபைக்கு தேர்தல் வரவுள்ளதால் இப்போதே அதற்கு
தயாராகுங்கள்' என்று தன் கட்சியினருக்கு அண்ணாமலை கட்டளையிட்டுள்ளார்.
அவரது
வேண்டுகோள்படி பா.ஜ., மாவட்ட, நகர, ஒன்றிய தலைவர்கள் ஒவ்வொரு ஊரிலும்
இப்போது முதலே வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
புதிய வாக்காளர்களை சேர்க்கவும், இறந்தவர்களை நீக்கவும், முகவரி மாறிய
வர்களை கண்டறிந்து சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு
ஆண்டும் தேர்தல் கமிஷன் நடத்தும் வாக்காளர் பெயர் சேர்க்கும், நீக்கும்,
திருத்த முகாம்களை பெருமளவில்பா.ஜ.,வினர் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இல்லை என்றால், இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு போட்டியாக பா.ஜ.,வால்
உருவெடுக்கவே முடி யாது.