PUBLISHED ON : ஏப் 27, 2024 12:00 AM

எஸ்.சின்னராசு டேவிட், தென்காசியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டில் பல்வேறு வகையான வழக்குகளை நீதிமன்றங்கள் அன்றாடம் சந்தித்து கொண்டிருக்கின்றன. சிவில் வழக்குகள், சிட்பண்ட் மோசடி, பைனான்ஸ் கம்பெனி வழக்குகள் போன்றவை அவற்றில் சில.
இது போன்ற வழக்குகள் ஏதாவது, எந்த நீதிமன்றத்திலாவது ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து கொண்டு இருக்கிறதா? சற்று சிந்தித்து பாருங்கள்.
எண்ணி மூன்றே மூன்று வாய்தாக்கள்; அந்த மூன்று வாய்தாக்களுக்குள் பிரதிவாதி, உரிய பதில் தாக்கல் செய்யவில்லை என்றால், நான்காவது வாய்தாவின் போது, வழக்கு தொடுத்த வாதிக்கு சாதகமாக, எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு வழங்கப்பட்டு, பிரதிவாதியை கைது செய்து சிறையில் தள்ள உத்தரவும், அதற்கான வாரன்டும் பிறப்பிப்பது நடைமுறை.
இதே நடைமுறையை, எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளிலும் கடைபிடித்தால், நீதிமன்றங்களில் ஆயிரக் கணக்கான வழக்குகள் ஆண்டுக்கணக்காக நிலுவையில் இருக்குமா?
இந்த நடைமுறை மட்டும் பின்பற்றப்படுமானால், ராகுல், சிதம்பரம் போன்ற அரசியல்வாதிகள், தொடர்ந்து 30, 40 முறைகளுக்கு மேல், ஜாமின் பெற்று, 'என்னைப் பார்! என் அழகைப் பார்!' என்று வெளியுலகில் வீதி உலா வந்து கொண்டிருக்க முடியுமா?
கோளாறு என்பதற்கு வாய்தாவுக்கு மேல் வாய்தாவும், ஜாமினுக்கு மேல் ஜாமினும் வழங்கி, வழக்கை ஆண்டுக்கணக்காக இழுத்தடித்து கொண்டிருக்கும் நீதிமன்றங்களே காரணம்.
கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?
முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதா?
ஏ.ஸ்ரீவாஸ்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 22ம் தேதி
வெளியான, 'தினமலர்' நாளிதழில், 'ரயில் கழிப்பறைகளில் பயணம், ரயில்வே
மறுப்பு' என்ற செய்தியை படித்தேன். சில நாட்களுக்கு முன், கோவையில் இருந்து
அசாம் மாநிலத்தின் சில்சார் செல்லும் எஸ்பிரசில், '2 டயர் ஏசி' கோச்சில்
பயணித்தேன். மூன்று மாதம் முன்பே முன்பதிவு செய்திருந்தேன்.
ஆனால்,
கழிப்பறை கூட செல்ல முடியாதபடி, பீஹார், அசாம் மாநிலங்களை சேர்ந்த பெண்கள்
உட்பட 10க்கும் மேற்பட்ட பயணியர் பெரும் மூட்டை முடிச்சுகளுடன், கதவருகில்
உட்கார்ந்தும், நின்றும் இருந்தனர். அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி வழி
ஏற்படுத்திக் கொண்டு, 'டாய்லெட்' சென்று வருவதே பெரும்பாடாகி விட்டது.
இந்த
நிலை இந்த ஒரு ரயிலில் மட்டும் இல்லை. வடகிழக்கு மாநிலங்கள் செல்லும்
எல்லா ரயில்களிலும் இந்த கூத்துதான். ரயில்வே அதிகாரிகள் முழு பூசணிக்காயை
சோற்றில் மறைப்பது போல் அறிக்கை விட்டு எந்த பயனும் இல்லை.
கம்பார்ட்மென்டில்
உள்ள பரிசோதகரோ அல்லது காவலரோ எதுவும் செய்ய முடியவில்லை என்பதே உண்மை.
வேண்டுமென்றால், மேற்படி புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பிரத்யேகமாக
ரயில்கள் விடலாம்.
இதனால், மற்ற ரயில் வண்டிகளில் அவர்கள் இவ்வாறு
சட்ட விரோதமாக ஏறுவதை, அந்தந்த ரயில் நிலையங்களிலேயே தடுத்து விடலாம்.
இல்லை என்றால், பணத்தை கொட்டி கொடுத்தும், எங்களை போன்ற பயணியரின்
அவஸ்தைகளுக்கு முடிவே இருக்காது.
நிம்மதியாக சென்று வாருங்கள்!
அ.ரவீந்திரன்,
குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழகத்தில் கருணாநிதியின் இறுதி மூச்சு வரை, தமிழக முதல்வராக ஆக முடியாமல்
ஏங்கி தவித்த மு.க.ஸ்டாலின், தேர்தலில் வெற்றி பெற, தேர்தல் வாக்குறுதிகள்
என ஆசை காட்டி, வென்றார்.
இந்த வாக்குறுதிகளில், பெண்களுக்கு இலவச
பேருந்து பயணம் என்ற திட்டம் மட்டுமே, பெரியளவில் குறை கூறாத வண்ணம்
செயல்படுத்தப்பட்டது. தற்போது, அதிலும் குறைகள் தென்படுகின்றன. 'இலவச
பேருந்துகள் வருவதே இல்லை. கால் கடுக்க நிற்க வேண்டி இருக்கிறது' என,
பெண்கள் புலம்புகின்றனர்.
மற்ற வாக்குறுதிகள் அனைத்தும் பெரும் குளறுபடிகளுடனேயே நிற்கின்றன.
தேசத்தை
ஆள, திராவிட கூட்டணி அமைக்க வேண்டும் என்ற ஐடியாவோடு, பல மாநில தலைவர்களை
சந்தித்துப் பேசி, ஒரு கூட்டணியை இவர் உருவாக்கினார். யார் பிரதமர் என்று
யூகிக்க முடியாத வகையில் இந்த கூட்டணி அமைந்துள்ளது.
இவர் மகன் உதயநிதியின் சனாதன எதிர்ப்புப் பேச்சால், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு, விரிசல் உருவானது.
இப்போது,
இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. தமிழகத்தைத் தாண்டி நீங்கள் வர
வேண்டாம் என, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தடை போட்டு விட்டாரோ என
நினைக்கும் வகையில், மாலத்தீவு கிளம்புகிறார் ஸ்டாலின்.
நிம்மதியாக சென்று வாருங்கள் ஸ்டாலின்!
தீதும் நன்றும் பிறர் தர வாரா !
சி.கார்த்திகேயன்,
சாத்துார், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: பல ஆண்டுகளாகவே, இசை அமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் விஷயமாக,
'ராயல்டி' பிரச்சனையை சந்தித்து வருகிறார் என்பதை விடவும், தானே உருவாக்கி
விட்டார் என்று சொல்லலாம்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தில், ஒரு
சிறிய கிராமத்தில் பிறந்து, தன் திறமையை நிரூபிக்க, உறவினர்கள், நண்பர்கள்
உதவியுடன் இன்று, ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்; உண்மையிலேயே
சாதனைக்குரிய, பாராட்டப் படக் கூடிய விஷயம் இது.
ஆனால், தன்
பாடல்கள் தனக்கே சொந்தம் என்று கூறுவது, பெரிய நெருடல். இளையராஜா
பாடல்களைக் கேட்டு ஆனந்தம் அடையாதவர்களே இருக்க முடியாது.
மகிழ்ச்சி
என்பது நம்முடன் பிறப்பது. கவலைகள், கஷ்டங்கள், வேதனைகள், அவமானங்கள்
ஏற்படும்போது, நாம் சோகமாகி விடுகிறோம். அந்த நேரத்தில், மனதை வருடும்
பாடல்களாக அமைவது இளையராஜாவினுடையவை என்றால் மிகை இல்லை.
அத்தகைய
மகிழ்ச்சியை, ஆண்டவன் கருணையால் கிடைத்த விசேஷ திறன் மூலம் நமக்கு
அளிக்கிறார் இளையராஜா. மற்றவர்களை மகிழ வைப்பதற்காக நான் பிறந்துள்ளேன்' என
இளையராஜா நினைத்தாரானால், இத்தகைய 'சொந்தம் கொண்டாடும்' பழக்கத்திலிருந்து
அவர் விடுபட்டு விடுவார்.
'இசை ஞானி' என்ற சொல்லுக்கு அழகு சேர
வேண்டும் எனில், மேற்படி மனப்பான்மையை இளையராஜா கைக்கொள்வது நல்லது.
கோர்ட், வழக்கு, வியாஜ்ஜியம் எதுவும் அவருக்குத் தேவையில்லை.
ஏழை
ஜாதி என்ற படத்தில், இளையராஜாவே இசையமைத்துப் பாடிய, 'இந்த வீடு நமக்கு
சொந்தமில்லை' என்ற பாடலை, அவரே கேட்டு உணர்ந்தால், இறுமாப்பைக் கைவிட்டு,
தானும் இனிமை காண்பார்;மற்றவர்களுக்கும் இனிமை!
அது இல்லாமல் போகும்போது தான் தீது உண்டாகிறது. தீதும் நன்றும், பிறர் தர வாரா!

