/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தமிழ்த்தாய் வாழ்த்து போட்டிக்கு தயாரா?
/
தமிழ்த்தாய் வாழ்த்து போட்டிக்கு தயாரா?
PUBLISHED ON : அக் 21, 2024 12:00 AM

பா.செண்பகவல்லி,
சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை துார்தர்ஷன்
அலுவலகத்தில், கவர்னர் ரவி கலந்து கொண்ட, 'ஹிந்தி மாதம்' நிகழ்ச்சியில்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பெண்கள், பாடலை முழுமையாக மனப்பாடம் செய்யாமல்
போனதால், பிரச்னை எழுந்து விட்டது.
'தெக்கணமும் அதிற்சிறந்த
திராவிடநல் திருநாடும்' என்ற வரியைப் பாடாமல் விட்டதால் குழப்பம்.
நிகழ்ச்சியின் வீடியோவைப் பார்க்கையில், அவர்கள் தடுமாறியது தெரிந்தது.
ஆனால்,
அவசரப்பட்டு முதல்வரும், அவரது சகாக்களும், நிகழ்ச்சியில் பங்கேற்ற
கவர்னர் ரவியை, 'துரோகி' என, வசைமாரிப் பொழிந்து விட்டனர். துார்தர்ஷன்,
தன் தரப்பில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டாலும், விவகாரத்தை ஊதிப்
பெரிதாக்கி இரண்டு நாட்கள் குளிர்காய்ந்தனர் நம் அரசியல்வாதிகள்.
தெரியாமல் தான் கேட்கிறேன்... தமிழ்த்தாய் வாழ்த்தை எத்தனை பேர் மனப்பாடமாகப் பாடுகின்றனர், சொல்லுங்களேன் பார்ப்போம்!
கவர்னர்
ரவி, தற்போது தான் தமிழ் கற்று வருகிறார்; ஒரு சில இடங்களில் தமிழும்
பேசுகிறார். ஆனால், தவறு நடக்கையில் சுதாரித்து இடைமறித்து அதைத் தடுத்து
நிறுத்தும் அளவுக்கு தமிழில் வல்லமை பெறவில்லை என்பது, முதல்வருக்கும்
தெரியும்.
பொதுமக்களை விடுங்கள்; தமிழ்க்குடி தாங்கிகளாகத் தம்மை
பாவித்துக் கொண்டிருக்கும் தி.மு.க.,வினரில், எத்தனை பேருக்கு தமிழ்த்தாய்
வாழ்த்து மனப்பாடமாய் தெரியும், சொல்லுங்களேன்!
சம்பந்தப்பட்டவரே, அடி பிறழாமல், அட்சரம் பிசகாமல் பாடுவாரா என்பது சந்தேகமே! அவரது மகன்?
இவர்கள்
அனைவருக்கும், தமிழ்த்தாய் வாழ்த்தை, துண்டுச் சீட்டு இல்லாமல், பாடச்
சொல்லி போட்டி வைத்தால், 'ஆங்... இதோ வரேங்ணே...' எனச் சொல்லி,
டாய்லெட்டுக்குள் ஓடி, பின் அங்கிருந்து பின்னங்கால் பிடரியில் பட, தலை
காட்டாமல் ஓடி விடுவர்.
முன்பெல்லாம், அனைத்து பள்ளிகளிலும்
தினமும் வகுப்புகள் துவங்கும் முன், கட்டாயமான முறையில், கடவுள் வாழ்த்து,
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்; தேசிய கீதமும் தவறாமல் இசைக்கப்படும்.
நிறுத்தி, நிதானமாய் இவற்றைப் பாடும்போது, மெய்சிலிர்க்கும்.
இப்போது,
எத்தனை பள்ளிகளில் அதைப் பின்பற்றுகின்றனர் என்று தெரியவில்லை. முதலில்,
பள்ளி நடைமுறை சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துவிட்டு, கூப்பாடு
போடலாம் இந்த அரசியல்வாதிகள்!
உணவில் எச்சில் துப்பும் விஷமிகள்!
எஸ்.ராமசுப்ரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: உத்தரகண்டில், முசோரிக்கு வந்த சுற்றுலா பயணியருக்கு, பழச்சாற்றில் எச்சில் துப்பி பரிமாறிய இரு ஹோட்டல் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, டேராடூனைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவர், ரொட்டிக்கு மாவு பிசையும் போது, அதில் எச்சில் துப்பிய சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தமி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பா.ஜ., ஆளும் மாநிலத்திலேயே இதுபோன்ற விஷமத்தனமான செயல்கள் நிகழும் போது, தெய்வ நம்பிக்கை சிறுதும் அற்ற, ஹிந்து மதத்தையும், அதன் கடவுள்களையும், அதன் ஆலயங்களையும் சகட்டு மேனிக்கு விமர்சித்து, ஆலயங்களை இடித்து தரை மட்டமாக்கிக் கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
நாம் கடந்த பல ஆண்டுகளாக, வீட்டில் விளக்கேற்றவும், கோவில்களில் விளக்கேற்ற வழங்குவதற்கும் தமிழக அரசு நிர்வாகத்திலுள்ள, ஆவின் நெய்யைத் தான் வாங்கி உபயோகித்து கொண்டிருந்தோம்.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று, விடியல் அரசு அமைந்து, ஆவடி நாசர் என்பவர் எப்போது பால்வளத்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டாரோ அப்போது முதல், ஆவின் தயாரிப்புக்களின் தரம் குறைந்து, அவற்றை வாங்குவதை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
கோவில்களில் சுவாமி சன்னிதானத்தில் ஏற்றி வழிபடும் விளக்குகளில், சுத்தம் இல்லாத நெய்யை பயன்படுத்தலாமா? அதனால், ஆவின் தயாரிப்புக்கள் வாங்குவதை நிறுத்தி, அமுல், ஜி.ஆர்.பி., உதயகிருஷ்ணா, திருமலா, ஹெரிட்டேஜ், மில்கிமிஸ்ட், ஆர்.பி.ஜி., ஏ2பி போன்ற தயாரிப்புக்களை வாங்கி உபயோகிக்கத் துவங்கினோம்.
கோவில்களில் விளக்கேற்றி வழிபடுவதே, பாவங்களை போக்குவதற்காக தான். அங்கு கலப்படத்தைக் கலந்தால் என்னாவது!
தற்போது தமிழ்நாட்டில் வீதிக்கு வீதியும், பிளாட்பாரங்களிலும் விற்பனை செய்து கொண்டிருக்கும் பிரியாணி வகைகளிலும் அந்த உத்தரகண்ட் சம்பவத்தை போல, நிகழ்ந்து கொண்டிருப்பதாக, ஒரு வதந்தி உலா வருகிறது.
உணவில் அசுத்தம் ஏற்படுத்தி, மத, இன, மொழி ரீதியாக எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி, பகைமையை ஊக்குவித்து, மத நம்பிக்கையை இழிவுபடுத்தினால், அவர்கள் மீது வழக்கு பதிந்து, குற்றவாளிகளுக்கு 25,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரகண்ட் டி.ஜி.பி., அபினவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டால், பின்னாளில் உதவும்!
பட்டாசு பயன்பாட்டில் கவனம்!
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டம் தான்; தீபாவளி என்றால் பட்டாசு இல்லாமல் பண்டிகை இல்லை.
பட்டாசுகளின் விலைகள் தாறுமாறாக ஏறிவிட்டது; ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகி விட்டது. பல ஆயிரங்கள் செலவழித்து பட்டாசு வெடிப்பவர்களால், சுற்றுப்புற சூழல் மாசுபாடு; அதிக சத்தம்; மலைபோல் குவியும் குப்பை என, இம்சை தான். குப்பையை சுத்தம் செய்ய, அரசுக்கு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். தீ விபத்துகள், உயிரிழப்பு கள், காயங்கள் போன்றவை யும் ஏற்படுகின்றன.
இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு, டில்லி போன்ற சில மாநிலங்கள், தீபாவளி சமயத்தில் பட்டாசுகள் வெடிப்பதை தடை செய்துள்ளன.
நீதி மன்றங்கள், மாநில அரசுகள், கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை விதித்தாலும்; பசுமை வெடிகளையே உபயோகப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டாலும், அவ்வுத்தரவுகள் மதிக்கப்படுவதில்லை; உறுதியுடன் அமல்படுத்தப்படுவதில்லை.
சாஸ்திர, சம்பிரதாயங்களில் நம்பிக்கையுள்ளவர்கள் கூட, ஒன்று அல்லது இரண்டு அதிக மாசு ஏற்படுத்தாத, அதிக சத்தம் ஏற்படுத்தாத, பசுமை வெடிகளை வெடிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்.
சில ஆர்வலர்கள், அரசியல் காரணங்கள் உட்பட, பட்டாசு உற்பத்தி குறைந்தால், வேலை இழப்பு ஏற்படும் என்று கூறி, இதற்கு ஆதரவாக பேசி வருகின்றனர். பல வருடங்களாகவே பட்டாசுகள் ஏற்படுத்தும் தீமைகளைப் பற்றி நாம் அனைவரும் பேசி வருகிறோம். பல பள்ளிகளில் கூட ஆசிரியர்கள் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீமைகளை இளம் உள்ளங்களுக்கு புரிய வைக்கின்றனர்.
எனவே, மிதமாய் பட்டாசு வெடித்து, குறைவாய் குப்பை சேர்த்து, அதிகமாய் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காத்து, தீபாவளி கொண்டாடுவோம்!

