PUBLISHED ON : ஜன 19, 2025 12:00 AM

கே.மணி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஈ.வெ.ரா.,வின் பெண்ணிய சிந்தனையின் வீரியம், இவ்வளவு நாட்களாக பொதுமேடைக்கு வர தயங்கிக் கொண்டிருந்தது என்பதை விட, அதை நாகரிகமான மனிதர்கள் பேச தயங்கினர் என்பதே நிதர்சனம்!
அந்த நாகரிக பூட்டை உடைத்து, ஈ.வெ.ரா.,வின் புடைநாற்றமடைந்த சிந்தனைகளை வீதிக்கு கொண்டு வந்து விட்டார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
திராவிட கட்சிகளின், 70 ஆண்டுகால பித்தலாட்டம், இன்று சமூக வீதியில் தோல் உரிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.
எந்த வாயை வைத்து, ஈ.வெ.ரா., தமிழ் மொழிக்கும், தமிழினத்துக்கும் எதிராக தமிழகத்திலேயே வடை சுட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தாரோ அந்த வடையின் ஊசல் நாற்றம், இன்று தமிழகத்தின் மூலைமுடுக்கு எல்லாம் நாறிக் கொண்டிருக்கிறது.
ஈ.வெ.ரா., இல்லையென்றால், பெண்கள் படித்திருக்க முடியுமா, கல்வி கற்றிருக்க முடியுமா, கோவில்களுக்குள் தலித்துகள் நுழைந்திருக்க முடியுமா என்று ஏகப்பட்ட முடியுமாக்களைப் போட்டு, கதை கட்டி வந்த கூட்டத்திற்கு, சீமானைப் போன்றவர்கள் எதிர்க்கேள்வி கேட்பதை தாங்க முடியவில்லை!
கொடி பிடித்து புறப்பட்டு விட்டனர்!
சீமான் என்ன தவறாக கூறி விட்டார்...'கணவன் ஒழுக்கம் தவறினால், மனைவியும் தனக்கு பிடித்த ஆணுடன் உறவு வைத்துக் கொள்ளலாம்' என்று பச்சையாக கூறியவர் தானே ஈ.வெ.ரா.,
உலகத்தில் ஒரு ஒழுக்கத் தவறை, உயர்த்திப் பிடித்து, அதை பெண்ணியம் என்று பெயரிட்ட மேதை அல்லவா ஈ.வெ.ரா.,
அவர் சமூக நீதிக்கு போராடினார், பெண்ணுரிமைக்காக கொடி பிடித்தார், ஆலய புரட்சி செய்தார் என்றால், அவர் அக்காலத்தில் பேசிய பேச்சுகளையும், ஒலிநாடாக்களையும், அவரது புத்தகங்களையும் பொதுவுடைமை ஆக்க வேண்டியது தானே... ஏன் திராவிட கழகத்தினர் பூதம் புதையலைக் காப்பது போல், காத்துக் கொண்டிருக்கின்றனர்?
சந்தைக்கு வந்தால் தானே தெரியும்... அது நல்ல கத்தரிக்காயா, சொத்த கத்தரிக்காயா என்று!
அதனால், முதலில், ஈ.வெ.ரா.,வின் புத்தகங்களை பொதுவுடைமை ஆக்குங்கள்... பின், அவர் செய்த சமூக புரட்சி குறித்து மக்கள் பேசட்டும்!
பெருமைக்கு அளவில்லை!
எம்.வேல்வேந்தன்,
கன்னியாகுமரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்த மூன்று
ஆண்டுகளில், 12,000 கோப்புகளில், கையெழுத்து போட்டுள்ளேன்' என தனக்குத்
தானே தற்பெருமை பேசி, பெருமிதம் கொண்டுள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.
படிப்பறிவும், பகுத்தறிவும் இல்லாத பாமர மக்களுக்கு வேண்டுமானால், அவரது தற்புகழ்ச்சி பிரமிப்பாக தோன்றலாம்.
ஆனால்,
அரசு அலுவலகங்களில் -குறிப்பாக, இந்திய அஞ்சல் துறையில் தேசிய சேமிப்பு
பத்திரங்கள் விற்பனை பிரிவில் பணிபுரிவோர், மூன்று ஆண்டுகளில், 2 லட்சம்
கையெழுத்துகளுக்கு மேல் போட்டிருப்பர்.
சட்டசபை ஆண்டுக்கு, 40 நாட்கள் கூடி இருக்குமா என்பதே சந்தேகம் தான்...
அப்படியே,
40 நாட்கள் என்று வைத்துக் கொண்டாலும், மூன்று ஆண்டுகளில், 120 நாட்கள்
சட்டசபை கூடியிருக்கும். முதல்வர் கையெழுத்திட்டதாக பெருமைப்பட்டு
கொண்டிருக்கும், 12,000 கையெழுத்துக்களை, 120 ஆல் வகுத்தால், ஒரு நாளைக்கு,
100 கையெழுத்துக்கள் போட்டுள்ளார்.
ஒரு நாளைக்கு, 100
கையெழுத்துக்கள் போடுவது ஒன்றும் கின்னஸ் சாதனையோ, லிம்கா புக் ஆப்
ரிகார்ட் சாதனையோ அல்ல; சர்வ சாதாரணமான ஒன்றுதான்.
ஒரு சாதாரண
அஞ்சல் அலுவலகத்தில், தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம்
போன்ற பல வகையான சேமிப்பு பத்திரங்கள் 100, 500, 1,000, 5,000, 10,000
வடிவங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு அஞ்சல் துறை
சூப்பர்வைசர், ஆண்டொன்றுக்கு ஞாயிற்றுக் கிழமை, பண்டிகை விடுமுறை, தற்செயல்
விடுப்பு என, அனைத்து விடுமுறை நாட்கள் நீங்கலாக, 200 நாட்கள்
பணிபுரிகிறார்.
இந்த விற்பனை பத்திரங்கள் சராசரியாக நாளொன்றுக்கு
மினிமம், 100லிருந்து 400 வரை விற்பனை ஆகும். தோராயமாக, 200 என்றே வைத்துக்
கொண்டாலும், நாளொன்றுக்கு, 200 வீதம் 200 நாட்களுக்கு, 40,000 கையெழுத்து
போடுவார். மூன்று ஆண்டு களுக்கு, ஒரு லட்சத்து, 20,000 கையெழுத்துக்கள்
போட்டு இருப்பார்.
அதற்காக எந்த அஞ்சலக சூப்பர்வைசரும், 'நான் ஆண்டுக்கு, 40,000 கையெழுத்துக்கள் போட்டிருக்கிறேன்' என்று பெருமைப்படுவது இல்லை!
ஆனால், முதல்வரோ, மூன்று ஆண்டுகளில், 12,000 கோப்புகளில் கையெழுத்து போட்டதாக, சட்டசபை பதிவேட்டில் பதிவு செய்துள்ளார்.
இதற்கு
முன், தமிழக முன்னாள் முதல்வர்கள் யாராவது இது போல, தாங்கள் போட்ட
கையெழுத்துக்களை கணக்கு வைத்து, பெருமை பீற்றியதாக நினைவு இல்லை!
திராவிட மாடல் ஆட்சியில் எதற்கெல்லாம் பெருமைப்படுவது என்ற வரன்முறையே இல்லை!
பழங்குடியினருக்கு வாய்ப்பு கொடுங்கள்!
வி.எச்.கே.ஹரிஹரன்,
திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ- மெயில்' கடிதம்: ------------நம்
நாட்டின் பரப்பளவில், 22 சதவீதம் தான் காடுகள் உள்ளன. மலைகள் நிறைந்த எட்டு
மாநிலங்களின் வன வளம் இன்று கவலைக்குரியதாக உள்ளது.
இந்நிலையில், காடுகளின் வளத்தைக் காப்பாற்ற, வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்; ஆனால், அவர்களுக்கு ஊதியம் குறைவு.
அவுட்சோர்ஸ்
நியமனம் என்பதால், பணி நிரந்தரம் இல்லை; உயிருக்கும் பாதுகாப்பு இல்லை.
தமிழகத்தில், 1,500 வன வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளனர். காடுகளின்
பூகோளம், வனவிலங்குகளின் குணம் இவர்களுக்கு அத்துப்படி!
அதேநேரம்,
தனியார் நிறுவனங்கள் வாயிலாக தேர்வாகும் தொகுப்பூதிய காவலர்களுக்கு,
காடுகளின் பூகோளம் தெரியாது. அத்துடன், வேலையில் பெரிதாக
அக்கறையின்மையும், குறைந்த ஊதியத்தில் நீண்ட நேரம் வேலை செய்யும் சூழல்
இருப்பதால், காட்டு வளம் திருடு போக வாய்ப்புகள்அதிகம்!
அதனால்
தான், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில், வனப் பாதுகாப்பில் அக்கறையுள்ள
பழங்குடியினர் மற்றும் மலைவாசிகளையே வேட்டைக் காவலர் பணியில்
அமர்த்துகின்றனர்; நல்ல ஊதியமும் வழங்குகின்றனர். இதனால், காட்டின் வளம்
பேணப்படுவதுடன், அவர்களது வாழ்வும் வளம் பெறுகிறது.
தமிழக அரசும்
பழங்குடியினர் மற்றும் மலைவாசிகளுக்கு வேட்டை தடுப்பு காவலர் பணி வாய்ப்பை
தந்து, அவர்களது வாழ்வாதாரத்தையும், காடுகளின் வளத்தையும் உயர்த்த
வேண்டும்!
அரசு பரிசீலிக்குமா?

