/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
ஜோதிடம் கணித்துக் கூறும் பொறுப்பை ஏற்ற துணை முதல்வர்
/
ஜோதிடம் கணித்துக் கூறும் பொறுப்பை ஏற்ற துணை முதல்வர்
ஜோதிடம் கணித்துக் கூறும் பொறுப்பை ஏற்ற துணை முதல்வர்
ஜோதிடம் கணித்துக் கூறும் பொறுப்பை ஏற்ற துணை முதல்வர்
PUBLISHED ON : நவ 27, 2024 12:00 AM
முயன்றுதான் பாருங்களேன்!
எஸ்.ராம், சென்னையிலிருந்துஅனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:முன்னாள் பிரதமர் இந்திரா,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்குஜோதிட ஆலோசனைகள் வழங்கிய கேரளாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் பூஞ்சார்மித்ரன் நம்பூதிரிபாட் உடல்நலக் குறைவால் காலமாகி விட்டார்.
'வருமான வரித்துறை இன்னொரு முறை சோதனை நடத்தினால், பழனிசாமி, அ.தி.மு.க.,வை பா.ஜ.,வுடன் இணைத்து விடுவார். மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் தி.மு.க., அரசை மக்கள் கொண்டாடுவதை சகிக்க முடியாமல், பழனிசாமிக்கு கோபம் வருகிறது.
'அரசின் திட்டங்களுக்குஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர் வைத்தால்கூட,பழனிசாமி ஏற்றுக்கொள்ளமாட்டார்; காரணம் அவருடைய ஆதர்ஷ தலைவர்களான மோடி, அமித் ஷா பெயரை சூட்டத்தான் அவர் விரும்புவார்' என்று, துணைமுதல்வர் உதயநிதி கூறியுள்ளார்.
ஜோதிடர் பூஞ்சார்மித்ரன் நம்பூதிரிபாட் காலமானதும்,அவரைப்போலவே அரசியல்வாதிகளுக்கு ஜோதிடம் கணித்துக் கூறும் பொறுப்பை துணை முதல்வர் உதயநிதி ஏற்றுக்கொண்டுள்ளார். வாழ்க அவரது ஆரூடம்!
இவரது ஆரூட கணிப்புமெய்யா அல்லது பொய்யா என்று கணித்துப் பார்க்க ஒரு சூப்பர் ஆலோசனை...
அதாவது, திராவிட மாடல் கழக அரசு அடுத்து செயல்படுத்தவுள்ள மக்கள் நலத்திட்டத்திற்கு, 'எம்.ஜி.ஆர்., அல்லது ஜெயலலிதா' பெயரை சூட்டி அறிவிப்பு வெளியிடட்டும்.
அப்போது முன்னாள் முதல்வர் பழனிசாமி அதை ஏற்றுக்கொண்டு, அமைதியாக கழக அரசுக்கு வாழ்த்து தெரிவிக்கிறாரா அல்லது அந்த திட்டத்திற்கு, மோடி அல்லது அமித் ஷா பெயரைத்தான் சூட்ட வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாரா என்று, முயன்று பார்த்து விடலாம் அல்லவா?
உதயநிதி மேலும் கூறிய ஆரூட பலன் என்னவெனில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் அல்லது பழனிசாமியின் சொந்தக்காரர்கள் யார் வீட்டுக்காவது வருமான வரித்துறை சோதனை நடத்தினால், பழனிசாமி, அ.தி.மு.க.,வை பா.ஜ.,வுடன் இணைத்து விடுவார் என்பது.
அ.தி.மு.க.,வை பா.ஜ., உடன் தான் இணைக்க வேண்டுமா... தாய் கழகமான தி.மு.க.,வுடன் இணைக்க முன்வந்தால், ஏற்றுக்கொள்வார்களா, மாட்டார்களா?
செந்தில் பாலாஜி உட்பட, அ.தி.மு.க.,வில் இருந்து கட்சி தாவி, தி.மு.க.,வுக்கு வந்த அத்தனை பேருக்கும் மதிப்பு மருவாதியோடு, அமைச்சர் பதவிகளும் கொடுத்த அரசியல் கட்சியான திராவிட மாடல் கழகமானது, தற்போது, அ.தி.மு.க.,வையே கலைத்து தி.மு.க.,வில் இணைக்க முன்வந்தால் ஏற்றுக்கொள்வார்களா, மாட்டார்களா?
துணை முதல்வர் பதவியோடு, அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எதிர்கால பலனை, காலஞ்சென்ற ஜோதிடர் பூஞ்சார்மித்ரன் நம்பூதிரிபாட் போல, துல்லியமாக புட்டுப்புட்டு வைக்கும் உதயநிதியை, பாராட்டி கைதட்டி வரவேற்போம்!
சமூகத் தின் மரியாதையை காப்பாற்றுங்கள்!
ஏ.ஸ்ரீவாஸ், சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், ஒரு ஆவணப்படம் பார்த்தேன். அதில், தமிழ் சினிமாவில் பிராமணர்களை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தியுள்ளனர் என்பதை காட்சிப்படுத்தி இருந்தனர். இந்த, 'திருப்பணி'யின் முக்கிய பங்காளரே ஈ.வெ.ரா., தான் என்பது நாடறிந்த உண்மை.
அதேநேரம், தி.க.,வினர் கொடுக்கும், 'பில்டப்' போல, ஈ.வெ.ரா.,ஒரு நாஸ்தீகர், சமூகநீதிக்காரர் மட்டுமல்ல... இந்தியாவை உடைத்து, 'திராவிடஸ்தான்' எனும் பெயரில், இன்னுமொரு பிரிவினையை உண்டாக்க திட்டமிட்டவர்.
இதில், ஜின்னாவை சேர்த்துக் கொண்டு, ஓர் ஆட்டம் போடலாம் என்று, முட்டி மோதி பார்த்தார்; ஒன்றும் நடக்கவில்லை என்றதும், பிராமண துவேஷத்தை கையில் எடுத்துக் கொண்டு, மக்களிடையே விஷ விதைகளை துாவியுள்ளார்.
அவரே சொன்னதுபோல், ஹிட்லரை முன்னுதாரணமாக கொண்டு, தமிழகத்தின் எல்லா தீமைகளுக்கும் காரணம், பார்ப்பனர் என்றும், அவர்களை விரட்ட வேண்டும் அல்லதுகொல்ல வேண்டும் என்று,1930ல், அவர் மேற்கொண்ட முயற்சியை, அவரது தனிப்பட்ட வாழ்க்கையால், அண்ணாதுரை போன்றோர் அவரைவிட்டு விலகியதால், அதன் தீவிரம் குறைந்து போனது.
அதன் நீட்சியாக, இன்றும் தமிழ் சினிமாவில் பிராமணர்களை கேவலப்படுத்துவது நிற்கவில்லை. சென்சார் விழித்துக்கொண்டு, ஒரு சமூகத்தின் மரியாதையை, 'டேமேஜ்' ஆகாமல் பார்த்துக் கொண்டால் நல்லது!
முதல்வர் படிக்க வேண்டும்!
ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக முதல்வர், அடிக்கடி, தன் தலைமையில் வெகு சிறப்பாக ஆட்சி நடைபெறுவதாக பெருமைப்பட்டுக் கொள்கிறார். தமிழகத்தின் உண்மை நிலையை அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், தினமும் சிறிது நேரம் ஒதுக்கி, 'தினமலர்' நாளிதழில் வெளியாகும், 'இது உங்கள் இடம்' பகுதியை படிக்க வேண்டும்.
பொதுமக்கள், அரசு ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரின் மனநிலையையும், இதன் வாயிலாக அறிந்து கொள்ளலாம். அத்துடன், பிரச்னைகளுக்கான தீர்வும், ஆலோசனைகளும் கிடைக்கும்!
உளவுத்துறைக்கு இணையான இப்பகுதியை தமிழக முதல்வர் படிப்பாரா?