PUBLISHED ON : செப் 18, 2026 01:45 AM

எல்.சுப்பு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆன்லைன்' வாயிலாக மேற்கொள்ளப்படும், யு.பி.ஐ., பணப் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கு செலவு அதிகரிப்பதால், யு.பி.ஐ., மூலம், 2,000 ரூபாய்க்கு மேல் பணம் பெறும் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது, தேசிய பணப் பரிவர்த்தனை கழகம்.
யு.பி.ஐ., என்பது புதிய செலவு அல்ல; அதிக செலவு பிடிக்கும் பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாக வந்துள்ள டிஜிட்டல் முறை!
பணத்தை கையாளுவதற்கு ஊழியர்கள், ஏ.டி.எம்., பராமரிப்பு, பாதுகாப்பு, பணம் எண்ணும் இயந்திரங்கள், பழைய நோட்டுகளை திரும்பப் பெறுதல் என, வங்கிகளுக்கு நேரடி மற்றும் மறைமுகச் செலவுகள் மிக அதிகம்.
யு.பி.ஐ., இந்தச் செலவுகளை பெருமளவு குறைத்துள்ளது என்றால் மிகையில்லை!
முன்பு வங்கிகள் கணினி மயமாக்கப்பட்டபோது, செலவுகள் வெகுவாக குறைந்தன; அதைப் போல் தான், இதையும் பார்க்க வேண்டும்.
மேலும், கருப்புப் பணம், கள்ளநோட்டு மற்றும் கணக்கில் வராத பணப்புழக்கத்தை ஒழித்து, பொருளாதாரத்தில் வெளிப்படைத் தன்மையை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம்!
இதனால் தான், வரி வசூலும், கண்காணிப்பும் எளிதாகியுள்ளது.
அரசின் நலத்திட்டப் பணிகளுக்கான பணப் பரிவர்த்தனையை கூட, நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டதன் நோக்கம் கூட, வெளிப்படைத் தன்மை தானே?
கடந்த 2014-ல், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, 'டிஜிட்டல் இந்தியா' என்ற திட்டத்தை முன்மொழிந்தபோது, கருப்புப் பணத்தையும், அதிகப்படியான பணப் புழக்கத்தையும் குறைத்து, நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவது தானே அதன் நோக்கமாக இருந்தது?
தற்போது, அந்நோக்கத்தையே கேள்விக்குறியாக்கும் விதமாக, யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிப்பது, மக்களை மீண்டும் பணப் பரிவர்த்தனைக்கே அல்லவா திருப்பி விடும்.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும், யு.பி.ஐ., சேவைக்கு கட்டணம் விதிப்பது, பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றைக் கிழிக்கும் செயலுக்கு ஒப்பானது!
'வணிக நிறுவனங்களுக்கு மட்டும் கட்டணம் விதிக்கப்படும்; வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது; தனி நபர்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும், யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாக இருக்கும்' என்று கூறினாலும், காங்கிரஸ் எம்.பி.,ராகுல் கூறுவது போல், நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் கட்டணம், வாடிக்கையாளர்களின் பாக்கெட்டைத் தான் பதம் பார்க்கும்!
எனவே, யு.பி.ஐ., சேவைக்கான சிறிய செலவை மட்டும் தனிமைப் படுத்திப் பார்க்காமல், பணத்தை அச்சிட்டு விநியோகிப்பதற்கான ஒட்டுமொத்த செலவும் மிச்சமாவதையும், டிஜிட்டல் பொருளாதாரத்தால் கிடைக்கும் நிர்வாகப் பலன்களையும் கருத்தில் வைத்து, யு.பி.ஐ., சேவையை முற்றிலும் இலவசமாகவே அரசு தொடர வேண்டும்!
கட்டண உயர்வு நாடகம் தேவையா?
எஸ்.சுந்தரம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றன, ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள். அரசும் அதை பரிசீலிப்பதாக கூறியுள்ளது.
தமிழகத்தில் ஓடும் அனைத்து ஆட்டோக்களும், 10 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயித்த கட்டணங்களை மீட்டர்படி வாங்கிக் கொள்வது போலவும், அதை, தற்போதைய விலை வாசிக்கு ஏற்றபடி உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துவது போன்று உள்ளது, ஆட்டோ ஓட்டுநர்களின் கட்டண உயர்வு கோரிக்கை!
'பொட்'டென்று சிறு துாறல் விழுந்தால் போதும்; வழக்கமான, 100 ரூபாய் கட்டணம், 150 ரூபாய் ஆகிவிடும்; அலுவலகம் முடியும் நேரம் என்றால், ஒரு தனிக் கட்டணம்; இரவு, 8:00 மணியாகி விட்டால், டபுள் கட்டணம்; பெட்ரோல் விலை, 1 ரூபாய் அதிகரித்தால், வழக்கமான, 100 ரூபாய் கட்டணம், 120 ரூபா யாக உயர்ந்து விடும்.
இப்படி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் இஷ்டத் திற்கு கட்டணத்தை உயர்த்தி, பயணியருக்கு, 'பிளட் பிரஷரை' ஏற்றி வரும் நிலையில், எதற்கு தனியாக கட்டண உயர்வு கோரிக்கை?
ஓலா, ஊபர் போன்ற தனியார் நிறுவனங்கள் நியாயமான கட்டணங்களை வாங்குகின்றன.
ஓர் இடத்திற்கு ஓலா கட்டணம், 150 ரூபாய் என்றால், சாதாரண ஆட்டோவில் பயணிக்க, 200 ரூபாய் முதல், 250 ரூபாய் வரை கேட்கின்றனர்.
இந்நிலையில், எதற்கு கட்டண உயர்வு நாடகம்?
வழக்கை இழுத்தடிக்கக் கூடாது!
அ.யாழினி பர்வதம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
இந்தியாவில் செல்வாக்கு மிக்கவர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமான காரியமாக உள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளார், உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
சட்டம் அனைவருக்கும் சமம் என்பது வெறும் ஏட்டளவிலான வார்த்தையாக உள்ளது. தி.மு.க., அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், பல தசாப்தங்களை கடந்தும், இன்று வரை வெறும் குற்றச்சாட்டுகளாக இருக்கின்றனவே தவிர, தண்டனை கிடைத்த பாடில்லை.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தன் மீதான சொத்து குவிப்பு வழக்கை, 18 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்த தந்திரங்களைதான், அவரது கட்சியில் இருந்து, தி.மு.க.,வுக்கு தாவிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போன்றோர் தற்போது பின்பற்றுகின்றனர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க., மீதான ஊழல் வழக்குகளை பட்டியலிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இப்போது அது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.
இப்படி தேர்தல் அரசியலுக்காகவும், தங்களை எதிர்ப்போரை மிரட்டவும் மட்டுமே லஞ்சம் - ஊழல் வழக்குகள் ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதே தவிர, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதாக தெரியவில்லை.
இதனால் தான், 'ஆதாரமிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே...' என்றும், 'தொட்டுப் பார்' என்றும் வீரவசனம் பேசி, தங்களை யோக்கியர்களாக காட்டிக் கொள்கின்றனர், ஊழல் அரசியல்வாதிகள் .
இவர்களைப் பார்த்து, 'தப்பு செய்தால் ஜாமினில் வெளிவந்து விடலாம்' என்ற தைரியம், சராசரி மனிதனுக்கும் வந்து விடுகிறது; அதனால் துணிச்சலாக தவறு செய்கின்றனர்.
இந்தப் போக்கு நல்லதல்ல; மக்கள் பிரதிநிதிகளை விசாரிப்பதற்கென தனி நீதிமன்றங்கள் அமைத்த பிறகும், வழக்குகள் இழுத்தடிக்கப்படுவது ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையது அல்ல!
எனவே, ஊழல்வாதிகள் தப்பிக்கும் விதமாக உள்ள சட்டத்தின் ஓட்டைகளை, சட்ட திருத்தத்தின் வாயிலாக அடைத்து, குற்றவாளிகள் உடனுக்குடன் தண்டிக்கப்பட்டால் தான் ஜனநாயகமும், அரசியலும், தேசமும் சுத்தமாகும்!
