sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

தேர்தல் ஆணையம் அதிரடி; மூக்கால் அழும் எதிர்க்கட்சிகள்!

/

தேர்தல் ஆணையம் அதிரடி; மூக்கால் அழும் எதிர்க்கட்சிகள்!

தேர்தல் ஆணையம் அதிரடி; மூக்கால் அழும் எதிர்க்கட்சிகள்!

தேர்தல் ஆணையம் அதிரடி; மூக்கால் அழும் எதிர்க்கட்சிகள்!

1


PUBLISHED ON : ஜூலை 31, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 31, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.சந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பீஹாரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து, 65 லட்சம் வாக்காளர்களை நீக்கி உள்ளனர். அம்மாநில மக்கள் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் வேலை செய்கின்றனர். அவர்களது பெயர்களை எல்லாம் நீக்கிவிட்டால் எப்படி ஓட்டு போடுவர்? பட்டியலில், இறந்து போன, 22 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இருப்பதாக கூறுகின்றனர். இப்பட்டியலை வைத்து தானே கடந்தாண்டு மோடி பிரதமர் ஆனார்?

'இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் சிவப்பு குறியிட்டு அடையாளப்படுத்தலாமே? போலி ஓட்டுப்பதிவை தடுக்க பல வழிகள் உள்ள நிலையில், பெரிய புல்டோசரை வைத்து, வாக்காளர் பட்டியல் மீது தேர்தல் ஆணையம் தாக்குதல் நடத்துகிறது' என்று கூறியுள்ளார், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்.

ஆனால், 'வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து வந்தோர், இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் தான், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்' என்கிறது தேர்தல் ஆணையம்.

இடம் பெயர்ந்தோர், அவர்கள் இடம் மாறிய இடத்தில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை இணைத்து கொண்டிருப்பர். எனவே, பழைய இடத்தில் அவர்களது பெயர்களை நீக்குவதில் என்ன தவறு உள்ளது?

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ள வெளிநாட்டினர் மீது எதிர்க்கட்சிகள் ஏன் இவ்வளவு கரிசனம் காட்டுகின்றன? அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்தவர்கள் தாங்கள் என்பதாலும், அவர்கள் தங்களுக்கே ஓட்டளிப்பர் என்பதாலுமா?

'இப்பட்டியலை வைத்து தானே கடந்தாண்டு மோடி பிரதமர் ஆனார்?' என்று கேட்டுள்ளார் சிதம்பரம்.

கடந்த தேர்தலில், அவர்கள் மோடிக்கு தான் ஓட்டளித்தனர் என்றால், இந்நடவடிக்கையால் அவர் சார்ந்த கட்சிக்கு தானே பாதிப்பு ஏற்படும்?

இதற்கு எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சி தானே அடைய வேண்டும். எதிர்ப்பதன் மர்மம் என்ன?

காரணம், இறந்து போனவர்கள் வந்து, பட்டியலில் இருந்து தங்கள் பெயர்களை நீக்க கோரப் போவதில்லை. ஓட்டுப்பதிவன்று தான், அவர்கள் இறந்து போய் விட்டனர் என்பதே தெரியவரும். உடனே, அவர்கள் ஓட்டை எதிர்க்கட்சியினர் பதிவு செய்து விடுவர். அதை தடுக்கத் தான், அவர்கள் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தங்கள் ஓட்டு வங்கிக்கு பாதிப்பு வரும் என்பதால், இறந்தவர்கள் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது என்று ஒப்பாரி வைக்கின்றனர், 'இண்டியா' கூட்டணியினர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள, 11 ஆவணங்களும் சாதாரணமாக பொதுமக்களிடம் இருப்பதில்லை. அதனால், தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் மற்றும் ரேஷன் அட்டையை ஆதாரமாக எடுத்துக் கொள்ளச் சொல்லி, தி.மு.க., சார்பில், அக்கட்சியின் மூத்த வழக்கறிஞர் இளங்கோ வலியுறுத்தியுள்ளாராம்!

ஆதார் மற்றும் ரேஷன் அட்டை சர்வ சாதாரணமாக போலியாக தயாரிக்கப்படுவதை செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. அதனால் தான் தேர்தல் ஆணையம் அவற்றை ஏற்க மறுக்கிறது.

மத்தியில், பா.ஜ., ஆட்சி பொறுப்பேற்ற பின், போலி ஆதார், ரேஷன் அட்டை வாயிலாக, பல கோடி போலி எரிவாயு இணைப்புகளும், போலி ரேஷன் அட்டைகளும் புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தடை செய்யப்பட்டன.

அப்படி இருக்கையில் அவற்றை எப்படி ஆதாரமாக கொள்ள முடியும்?

நல்லவேளை... தி.மு.க., உறுப்பினர் அட்டைகளையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளச் சொல்லி தேர்தல் ஆணையத்தை நிர்ப்பந்திக்கவில்லையே... அதுவரை மகிழ்ச்சி!

கருப்பு கொடி வேண்டாம்; கழக கொடியை காட்டுங்கள்! எஸ்.சண்முகபாண்டியன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காமராஜர் குறித்து தி.மு.க., - எம்.பி., சிவா கூறிய கருத்துகளை, முடிந்து போன விவகாரம் என்று கூறி, முதல்வர் ஸ்டாலின் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

ஆனாலும், எம்.பி.,யை கண்டித்து, ஆங்காங்கே சில தன்மானமுள்ள காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில், துாத்துக்குடியில், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடந்தது.

அப்போது, எம்.பி., சிவாவின் புகைப்படத்தை செருப்பு மற்றும் துடைப் பத்தால் அடித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மேலும், 'காமராஜர் குறித்து பேச சிவாவுக்கு என்ன அருகதை உள்ளது. அவரது ஒழுக்கம் ஊரறிந்த விஷயம். முதல்வர் அவரை கண்டித்து, பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைக்கவில்லை என்றால், துாத்துக்குடி வரும் முதல்வருக்கு கருப்பு கொடி காட்டுவோம்' எனக் கூறியுள்ளார், பெருமாள்சாமி.

தமிழகத்தில் சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க.,வின் காலடியில் கிடக்கும் போது, இதுபோன்ற சலசலப்புகளுக்கு தி.மு.க., செவி சாய்க்குமா என்ன?

எதற்கு இந்த வேண்டாத வேலை... முதல்வர் துாத்துக்குடி வரும்போது, கருப்பு கொடி காட்டுவற்கு பதில், கருப்பு - சிவப்பு கலந்து உள்ள கழக கொடியை காட்டுவதே சீட்டுக்கு மட்டுமல்ல, கூட்டணிக்கும் நன்மை பயக்கும்!



அமெரிக்காவில் வேலை இல்லை ! மரகதம், நியூஜெர்ஸி, அமெரிக்கா நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்படிப்பு படிக்க வரும் மாணவர்கள், படிப்பை முடித்து, இங்கேயே வேலை வாய்ப்பையும் பெற்று விடலாம் என்ற எண்ணத்துடன் வருகின்றனர்.

ஆனால், தற்போது இங்குள்ள நிலவரமோ வேறு!

நான், 25 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா வந்தபோது, இந்நாட்டின் வளத்தையும், செழிப்பையும் நம் நாட்டோடு ஒப்பிட்டு, மனம் வருந்திஉள்ளேன்.

ஆனால், இன்றோ இங்கு நிலைமை தலை கீழாக உள்ளது.

இங்கேயே பிறந்து, வளர்ந்த வெளிநாட்டினருக்கே வேலை கிடைப்பதில்லை. நம் நாட்டில் நல்ல கம்பெனியில் பணிபுரிந்தவர்கள் கூட, மேல் படிப்புக்காக இங்கே வந்து வேலை கிடைக்காமல் அவதிப் படுகின்றனர்.

அப்படியே வேலை கிடைத்தாலும் வேலைக்கான, 'விசா' கிடைப்பதில்லை.

அத்துடன், இங்கே மருத்துவ செலவும் மிக அதிகம். மருத்துவ இன்ஷுரன்ஸ் எடுத்திருக்கா விட்டால், நாம் சம்பாதித்த அத்தனை சொத்தையும் விற்று தான் வைத்தியம் பார்க்க வேண்டும்.

அதனால் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் சட்ட விரோதமாக அமெரிக்கா வில் தங்கி இருப்போரை வெளியேற்றுகிறார்.

-எனவே, இங்கே மேற்படிப்பு படித்து, வேலையிலும் அமரலாம் என்று நினைக்கும் மாணவர்கள் அந்த எண்ணத்தை மறந்து, அமெரிக்காவிற்கு படிக்க வாருங்கள்!








      Dinamalar
      Follow us