PUBLISHED ON : அக் 27, 2026 12:00 AM
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: சைவ உணவுப் பழக்கம் கொண்ட கேரள கவர்னர் ஓம் பிரகாஷ் மாத்துார், கவர்னர் மாளிகையில், தனக்கான தனி சமையல் அறையில், ‘அசைவ உணவு சமைக்க வேண்டாம்; சைவ உணவு சமைத்தால் போதும்’ என்று கூறியுள்ளார்.
உடனே, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அமைப்புகள் பொங்கி எழுந்து விட்டன.
கேரளாவாசிகள் அனைவரும் அசைவம் சாப்பிடக் கூடாது; சைவம் தான் சாப்பிட வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டது போல், ‘கேரளாவின் பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிப்பதையோ அல்லது அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று ஆணையிடுவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறி, கவர்னருக்கு எதிராக போர்க் கொடி துாக்கியுள்ளனர், காங்., மற்றும் கம்யூ., கட்சியினர்.
‘கவர்னர் மாளிகை ஊழியர்கள், தங்கள் இருப்பிடங்களில் உள்ள சமையல் அறையில் அசைவம் சமைத்து சாப்பிடவோ, வெளியில் இருந்து அசைவ உணவைக் கொண்டுவந்து உண்ணவோ எந்தக் கட்டுப்பாடும் இல்லை’ என்று கவர்னர் மாளிகை விளக்கம் அளித்தும், அவரது உணவுப்பழக்கத்தை விமர்சித்து, அரசியல் ஆக்குகின்றனர் என்றால், இது என்ன வகையான அரசியல்?
கவர்னர் தனக்கான சமையலறையில், தனக்கு என்ன பிடிக்குமோ அதை சமைக்கக் கூறுகிறார். இதில் விமர்சிக்க என்ன உள்ளது?
என் உணவு, என் விருப்பம் என்பது, இவர்களுக்கு மட்டும் தானா... மற்றவர்களுக்கு அந்த உணவு உரிமை இல்லையா?
மக்கள் நல அரசியலை கையில் எடுக்காமல், இதுபோன்று எல்லாவற்றிலும் எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதால் தான், காங்., மற்றும் கம்யூ., கட்சியினர் ஒவ்வொரு மாநிலங்களிலும் மக்களால் துாக்கியெறியப்படுகின்றனர் என்பதை இக்கட்சிகள் எப்போது உணரும்?
lll
