தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: அக். 28

இது உங்கள் இடம்: அக். 28

இது உங்கள் இடம்: அக். 28


PUBLISHED ON : அக் 28, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாதந்தோறும் ‘ரீடிங்’ முறை வருமா?



எஸ்.ரேவதி பாலு, சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மின் கணக்கீடு, கடந்த ஆறு மாதங்களாக, அதாவது, மூன்று முறையும் மின் கணக்கீட்டாளர்,சரியான தேதிக்கு, ‘ரீடிங்’ எடுக்க வரவில்லை. பணியாளர்கள் பற்றாக்குறையை இதற்கு காரணமாக சொல்கின்றனர்.

முதல் இரண்டு முறை, ‘ரீடிங்’ எடுக்க, ஆள் வருவார்கள் என்று காத்திருந்து காத்திருந்து, பின், ‘ஸ்லாப்’ மாறி, மின் கட்டணம் எகிறி விடுமேயென்று அஞ்சி, அலுவலகத்திற்கு நேரில் சென்று முறையிட்டபோது, ‘நாளைக்கு நிச்சயமாக வருவார்’ என்றனர்.

ஆனாலும், ஆறு நாட்கள் கழித்து தான், மின் கணக்கீடு அலுவலர் வந்தார். அஞ்சியது போலவே, பயனீட்டு காலமான இரண்டு மாதத்திற்கு மேல், 15 நாட்கள் கூடுதலாகி விட்டபடியால், 2,000 ரூபாய் கூடுதலாக மின் கட்டணம் கட்டும்படி ஆகிவிட்டது.

அடுத்து வந்த ரீடிங் மாதமும் அதே கதைதான்... மின் கணக்கீட்டாளர், தன் கடமையை ஒழுங்காக செய்யாததற்கு, நாங்கள் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் அபராதம் போல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில், நுகர்வோரே, ‘ரீடிங்’ எடுக்கும் வசதி வர இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி, ஆறுதல் அளிக்கிறது.

அதேநேரம், பொதுமக்களே, ‘ரீடிங்’ எடுக்கும் வசதியை மின்வாரியம் எப்போது நடைமுறைப்படுத்துகிறதோ, அப்போதிலிருந்து, மாதாமாதம் ரீடிங் முறையையும் கொண்டு வரவேண்டும்.

மாதந்தோறும், ‘ரீடிங்’ எடுக்கும் போது, ‘ஸ்லாப்’ மாறுவது நின்றுவிடும். அதனால் ஏற்படும் அதிகப்படியான மின்கட்டணமும் தவிர்க்கப்படும்.

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாதாமாதம் மின் கட்டண, ரீடிங் எடுக்கும் முறை அமலுக்கு வரும்’ என்று, முதல்வர் விஜய் கொடுத்த தேர்தல் வாக்குறுதியும், இதன் வாயிலாக நிறைவேறும்.

முதல்வர் கவனத்தில் கொள்வாரா?

lll

அண்டை மாநிலங்களிடம் கையேந்தலாமா?



கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: திராவிட கட்சிகளின் ஆட்சியில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க, தானிய கிடங்குகளை அமைப்பதற்கு பதில், கட்சி தலைவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவது, சிலைகள் வைப்பது என்று மக்களின் வரிப்பணத்தை வீணடித்தனர்.

சரி... புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசாவது, இக்கட்சிகளிலிருந்து மாறுபட்டு விவசாயிகளின் நலனை பேணும் விதமாக, உற்பத்தி பொருட்களை பாதுகாக்க தானிய கிடங்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்கும் என்று பார்த்தால், அதுவும் திராவிட கட்சிகளின் வழியில் தான் பயணிக்கிறது.

மேட்டூர் அணை மற்றும் கோவையில் உள்ள, ஈ.வெ.ரா., நுாலக திறப்பு விழாவுக்கு, தன் பாதுகாப்பு பணிக்காக, பல கோடி ரூபாயை செலவு செய்த முதல்வருக்கு, நெல் மூட்டைகள், மழையில் நனைந்து வீணாவதை தடுக்க, சேமிப்பு கிடங்குகளை கட்ட தோன்றவில்லை.

ஒருபுறம் அரிசி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது; மற்றொருபுறம், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, முளைவிட்டு வீணாகின்றன.

இப்படியே போனால், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் கப்பக்கிழங்கை காய வைத்து, அதை மாவாக அரைத்து, காய்ச்சி குடித்து பசியாறிய நிலை, திரும்ப வந்துவிடும்!

கடந்த 1972- – 73 கருணாநிதி ஆட்சிக் காலத்தில், பருவ மழை பொய்த்து, கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மக்கள், பசிக் கொடுமையில், கப்பக்கிழங்கு, மக்காச்சோளக் குருணையை மாவாக அரைத்து கஞ்சி காய்ச்சி குடித்தனர். ஒருவேளையாவது மக்கள் பசியாற வேண்டும் என்று, மக்களே ஊர்தோறும் கஞ்சித் தொட்டிகளை திறந்தனர்.

தற்போதும், பருவ நிலை மாற்றத்தால், உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. பல நாடுகள் உணவு பற்றாக்குறையையும், விலைவாசி உயர்வையும் சந்தித்து வருகின்றன.

தமிழகத்திலும் முன்னெப்போதும் இல்லாத அளவு, அரிசி விலை உயர்ந்து வருகிறது. ‘கர்நாடகா, ஆந்திராவில் இருந்து அரிசி வரத்து குறைந்தது தான், அரிசி விலை உயர்வுக்கு காரணம்’ என்று, தமிழக அமைச்சர்கள் கூறுகின்றனர்.

இங்குள்ள நம் விவசாயிகள் உற்பத்தி செய்த தானியங்களை பாதுகாத்தாலே போதும்; அரிசி விலை உயர்வை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

எனவே, போர்கால அடிப்படையில் போதுமான அளவு தானிய சேமிப்பு கிடங்குகளை அரசு அமைக்க வேண்டும்!

தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, நம்மிடம் இருக்கும் தானியங்களை வீணடித்து விட்டு, அண்டை மாநிலங்களிடம் கையேந்தக் கூடாது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us