PUBLISHED ON : செப் 27, 2024 12:00 AM

ரேவதி பாலு, சென்னையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: வி.சி., தலைவர்திருமாவளவன், திடீரென்று ஞானோதயம்வந்தது போல சில நாட்களாக பேச ஆரம்பித்திருக்கிறார். மது ஒழிப்பு மாநாடு என ஆரம்பித்து, நாடகத்திற்கான திரையை உயர்த்தினார்.
'இது தேர்தல் அரசியல். தி.மு.க.,விற்கு கொடுக்கப்படும் நெருக்கடி' என்று விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், 'ஒரு துாய நோக்கத்திற்காக எல்லாரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்கிறோம். இதில், எந்தவித உள்நோக்கமும் கிடையாது. இது தேர்தல் அரசியல் அல்ல; இதனால், தி.மு.க.,உடனான எங்கள் கூட்டணியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. உண்மையாக,மக்கள் நலம் விரும்பி நடக்கும் மாநாடு' என்கிறார், எச்சரிக்கை உணர்வுடன்!
'ஒருவேளை உங்கள் மாநாட்டிற்கு பின்னும், தி.மு.க., மதுவிலக்கு கொள்கையை நிறைவேற்ற முன்வரா விட்டால், வி.சி., நிலைப்பாடு என்னவாக இருக்கும்?' என, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 'இரண்டு ஆண்டுகளுக்குபின்னும் நிறைவேற்றவில்லை என்றால்,என்ன நடக்கும் என்பது போன்ற யூகங்களின் அடிப்படையிலான கேள்விகளுக்குபதில் சொல்ல விரும்பவில்லை' என்கிறார்.
இதை விட நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், மது ஒழிப்பை செயல்படுத்தக்கூடிய அதிகாரத்தை, தன் கையில் வைத்திருக்கும் ஆளுங்கட்சியான தி.மு.க., இந்த மாநாட்டிற்கு தங்கள் சார்பில் மது ஒழிப்பை வலியுறுத்த இரண்டு பிரதிநிதிகளை அனுப்பி வைக்கப் போகிறதாம். இது எப்படி இருக்கிறது?
'நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்; நீ அழுவுறா மாதிரி அழு' என்று திருமாவளவன்சொல்வது போலில்லை? தமிழக மக்கள் எனும் ஏமாளிகளை வைத்து, தங்கள் பொழுதுபோக்கிற்காக அடுத்த நாடகத்தை இவர்கள் துவக்கியுள்ளனர்.
வெ ளிநாட்டு மதத்தின் அதிகாரமா ?
எஸ்.ஆர்.
ரத்தினம், மாவட்ட துணைத்தலைவர், பா.ஜ., ஊரப்பாக்கம் மேற்கு, செங்கல்பட்டு
மாவட்டத்தில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: ஆன்மிகம் மற்றும்
தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பேச்சாளர் மகாவிஷ்ணு மூடநம்பிக்கைகளை
வளர்க்கிறார் என்று குற்றம்சாட்டி அரசு அவரை கைது செய்திஇருக்கிறது.
ஜனநாயகம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்றெல்லாம் மேடைகளிலே
முழங்கும் சில அரசியல் தலைவர்கள்தங்களின் கோபத்தையும்,ஆணவத்தையும், அதிகார
திமிரையும் இதில் காட்டி இருக்கின்றனர்.
மகாவிஷ்ணுவின் முழு பேச்சு
குறித்து, அவர் தரப்பு விளக்கம் குறித்தும்,எந்த விசாரணையும் செய்யாமல்,
எடுத்த எடுப்பில் அவரை குற்றவாளி என்று பிரகடனப்படுத்தி இருக்கின்றனர்.
கஞ்சா விற்பவரிடமும், கள்ளக்கடத்தல் செய்கிறவர்களிடமும்,
வன்முறையில்ஈடுபடுகிறவர்களிடமும், பாலியல் குற்றவாளிகளிடமும் காட்டாத
கடுமையை இவரிடம் காட்டி இருக்கின்றனர்.
கர்மா தியரி, 'முன்வினைப்
பயன்' என்பது, நம் நாட்டின் புகழ்பெற்ற தத்துவம்; வேறு எந்த மதமும்
சொல்லாத, ஹிந்து மதம் மட்டுமே அறுதியிட்டு சொன்ன அரிய கருத்து அது.
திருவள்ளுவர் கூடதன்னுடைய குறள்கள் வாயிலாக இதைச் சொல்லிஇருக்கிறார். மனித
வாழ்வில் நடக்கிற அத்தனை செயல்களுக்கும் காரணம் சொல்லும் அற்புத விளக்கம்
அது. இதை மறுத்தால், மனித வாழ்வில் இருக்கும் பல்வேறு சுக
துக்கங்களுக்கும், இன்ப துன்பங்களுக்கும் எவராலும்காரணம் சொல்ல முடியாது.
'இந்த
பிறவியில் நல்லது செய்தால் அதன் பலன் அடுத்த பிறவியில்
கிடைக்கும்'என்றார். 'யாரும் பாவம் செய்யாதீர்கள், பிற உயிர்களை
துன்பப்படுத்தாதீர்கள்,உண்மையை பேசுங்கள், உண்மையாக நடங்கள், அறத்தின்படி
நடங்கள். இந்த ஜென்மம் மட்டுமல்ல,அடுத்த ஜென்மத்திலும் உங்களுக்கு நன்மைகள்
கிடைக்கும்' என, அவர் கூறி இருக்கிறார்.
இதில் என்ன தவறு? அற
வாழ்க்கை வாழச் சொல்வது தவறா? இதில் மூடநம்பிக்கை எங்கே வந்தது? வன்முறை
பேச்சு எங்கே வந்தது? தீய போதனை எங்கே இருக்கிறது? கைதுசெய்ய வேண்டிய
அளவிற்கு குற்றம் எங்கே இருக்கிறது? ஒவ்வொரு ஆசிரியரும் போதிக்க வேண்டிய
கருத்து தானே இது, ஒவ்வொரு பெற்றோரும், தங்களுடையபிள்ளைகளுக்கு போதிக்க
வேண்டிய கருத்துதானே இது?
மறுபிறவி என்பது மூடநம்பிக்கை என்றால்,
இறந்த பின் சொர்க்கம் கிடைக்கும் என்பதும், மரணத்திற்குப் பின்
உயிர்த்தெழுதல் என்பதும் என்ன நம்பிக்கை? அவற்றை பாடத்திட்டமாக,
சட்டப்பூர்வமாகவே போதிக்கும் பள்ளிகள் தமிழகத்தில்... இருக்கின்றனவே அவை
குறித்து உங்கள் கருத்து என்ன? அவை பற்றிபேசும் துணிவு
உங்களுக்குஇருக்கிறதா? அங்கே உங்கள் கோபத்தை காட்ட முடியுமா?
ஆசிரியர்களை
அடிக்கும்மாணவர்கள் மீது நடவடிக்கை இல்லை. ஆசிரியர்களை தாக்கும் சமூக
விரோதிகள் மீது நடவடிக்கை இல்லை. ஆசிரியர் போராட்டங்கள் கண்டுகொள்ளப்படுவது
இல்லை.
ஊழல்கள், முறைகேடுகள்,பாலியல் குற்றங்கள், போதைப்பொருள்
கடத்தல்,கொலை, கொள்ளை, வெள்ளம், வறட்சி, காலியாக உள்ள அரசு கஜானா, அரசின்
கடன் சுமை, லஞ்ச லாவண்யங்கள், பயங்கரவாதிகள் நடமாட்டம் என, நாட்டை
அழிக்கும் தன்மை கொண்ட, 100 விஷயங்கள் கவனிக்கப்படாமல் இருக்கின்றன.
சொந்த
நாட்டு மதத்தை, சொந்த கலாச்சாரத்தை, சொந்த மண்ணின் பண்டிகைகளை
விரும்பாதவர்கள் அதிகாரத்தில் இருப்பது, அந்த நாட்டின் எதிர்காலத்திற்கு
நல்லதல்ல. ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு சொந்த மண்ணின் மதம் என்று ஒன்று
உண்டு; அதை அவர்கள் போற்றிப் பாதுகாக்கின்றனர்.
மதத்தை
பாதுகாப்பதன்வாயிலாக மட்டுமே இனத்தையும், மொழியையும்,மண்ணையும், மண்ணின்
அதிகாரத்தையும் தங்களிடம் தக்க வைத்துக்கொள்ள முடியும் என, உலகம்முழுதும்
உள்ள மக்களுக்குபுரிந்திருக்கிறது.
உள்ளூர் மதம் அதிகாரத்தில்
இருந்தால், உள்ளூர் மக்களிடம் அதிகாரம் இருக்கும். வெளிநாட்டு மதத்தவரிடம்
அதிகாரம் சென்றால், அந்த அதிகாரம் வெளிநாட்டின் கைகளுக்கு சென்று
சேரும்.சுதந்திரத்திற்கு முன், 1,000 ஆண்டுகள் இந்த நிலைதான் இருந்தது.
அந்த நிலையை நோக்கி நாம் மீண்டும் சென்று கொண்டிருக்கிறோம்.
விபரம் அறிந்தவர்கள் பார்க்கவில்லையோ?
வி.மைதிலி,
பெங்களூரில்இருந்து அனுப்பிய, 'இ-மெயில்'கடிதம்: சன் 'டிவி'யில் ராமாயண
தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் சொல்லப்படும் கருத்துக்கள், உண்மைக்குப்
புறம்பாக உள்ளன.
சீதை, அசோகவனத்தை விட்டு, ராவணன் அரண்மனைக்குச் சென்றதே இல்லை. இலங்கிணியும் சீதையை சந்திக்க வரவில்லை.
இந்நிகழ்ச்சியைத்
தயாரித்தவர்கள், வால்மீகிராமாயணத்தையோ, தமிழில்கம்ப ராமாயணத்தையோ
முழுமையாகப் படிக்க வேண்டும். அது மிக கடினமாக இருந்தால், ராஜாஜி எழுதிய,
'சக்கரவர்த்தி திருமகன்' புத்தகத்தை, மிக எளிமையான தமிழில்
சொல்லப்பட்டிருப்பதைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
ராமாயணத்தை நன்கு அறிந்தவர்கள் யாரும் பார்த்தால், வழக்கே போடுவர். விபரம் அறிந்தவர்கள் யாரும் இதைப் பார்க்கவில்லையோ?