தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/காங்., இரட்டை வேடம் எத்தனை நாளைக்கு?

காங்., இரட்டை வேடம் எத்தனை நாளைக்கு?

காங்., இரட்டை வேடம் எத்தனை நாளைக்கு?


PUBLISHED ON : ஆக 03, 2026 12:37 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 03, 2026 12:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழ.சுந்தரமூர்த்தி, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் பட்டமளிப்பு விழாவில், முதலில் வந்தே மாதரமும், அதையடுத்து தேசிய கீதமும், பின் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டுள்ளன. விழாவில் கவர்னர் பங்கேற்ற காரணத்தால், இந்த மரபு பின்பற்றப்பட்டுள்ளது.

உடனே, இங்குள்ள போலி தமிழ் பற்றாளர்கள் வீறு கொண்டு எழுந்து, கவர்னருக்கு எதிராக கண்டன அம்புகளை வீசி வருகின்றனர்.

இதில் நகைச்சுவை என்னவென்றால், காங்கிரசாரும் எதிர்ப்பது தான்!

சுதந்திரப் போராட்ட களத்தில், ஜாதி, மதம், இனம், மொழி பேதம் கடந்து ஒட்டு மொத்த இந்தியரும் ஒரே குரலில், ஆங்கிலேயருக்கு எதிராக தங்கள் எதிர்ப்பையும், நாட்டுப்பற்றையும் வெளிப்படுத்தும் விதமாக பாடப்பட்ட பாடல் வந்தே மாதரம்!

அன்று ஒற்றுமையின் அடையாளமாக, விடுதலை வேட்கையை துாண்டும் சுடராக இருந்த பாடல் இன்று, தமிழகத்தில் மட்டும் வேண்டாத பாடலாக பார்க்கப்படுவது வேதனையை ஏற்படுத்துகிறது.

கடந்த 1908ல், 18 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் குதிராம் போஸ், தன்னை துாக்கிலிடும் போது, 'வந்தே மாதரம்' என முழங்கியபடி இந்நாட்டுக்காக உயிர் நீத்தார். 1905ல் வங்காளத்தை இரண்டாகப் பிரிக்கும் வங்கப் பிரிவினையை ஆங்கிலேயர் அறிவித்த போது, அதை எதிர்த்து கொல்கட்டாவில், 40,000 பேர், ஒரே குரலில் வந்தே மாதரம் பாடலை பாடி போராட்டம் நடத்தினர்.

எழுச்சிமிகு அப்பாடலைக் கேட்டு, பயந்த அன்றைய கொல்கட்டா கவர்னர், அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டதுடன், வந்தே மாதரம் பாடலை பாடவும் தடை விதித்தார். ஆனாலும், ஆங்கிலேயரின் அடிகளையும், உதைகளையும் தாங்கி, விடுதலையின் வேட்கையாக இமயம் முதல் குமரி வரை ஒலித்த ஒரே பாடல், வந்தே மாதரம் தான்!

அதனால் தான், 1950, ஜன., 24ம் தேதி, அன்றைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், அரசியல் நிர்ணய சபை கூட்டத்தில், ' ஜன கன மன' பாடலை தேசிய கீதமாகவும், விடுதலைப் போராட்டத்தின் சிறப்பு பாடலான, வந்தே மாதரத்தை தேசிய பாடலாகவும் அறிவித்தார்.

இப்படி நீண்ட வரலாறு கொண்ட வந்தே மாதரம் பாடலைப் பாட, இங்குள்ள பிரிவினைவாத கும்பல் எதிர்ப்பு குரல் எழுப்புகின்றன.

அன்று ஆங்கிலேயரின் அடிவருடிய இந்த கும்பல், சுதந்திரத்திற்கு பின், தங்கள் அரசியல் பிழைப்புக்காக மொழி எனும் ஆயுதத்தை கையில் ஏந்தியது.

அந்த கும்பல் தான் வந்தே மாதரம் பாடலை முன் வைத்து வெறுப்பு அரசியல் செய்கிறது என்றால், தேசிய கட்சியான காங்கிரசின் தமிழக தலைவர்களும் இதை எதிர்க்கின்றனர்.

தேசியத்தை முன்னிறுத்தும் ஒரு கட்சி, தேசப் பாடலை எதிர்க்கிறது என்றால், காங்கிரசின் அரசியல் நிலைப்பாடு என்ன?

மொழி அரசியல் தான் வருங்காலத்தில் காங்கிரசின் கொள்கையாக இருக்கும் என்றால், கர்நாடாகாவை சேர்ந்த கன்னட மொழி பேசும் மல்லிகார்ஜுன கார்கே ஏன் அக்கட்சி தலைவராக இருக்க வேண்டும்? சீனாவின் அடிவருடியாக உள்ள காங்., - எம்.பி., ராகுலை, ஏன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்?

பா.ஜ., எதிர்ப்பு அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக, காங்., இதுபோன்று எத்தனை மாநிலங்களில் இரட்டை வேடம் பூணும்?

அரைத்தாலும் சந்தனம் தன் மணம் மாறாது!


வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

மொழி அரசியலிலும், பிராமண துவேஷத்திலும் தன்னை வளர்த்துக் கொண்ட கட்சி, தி.மு.க., அதன் வழி தொட்டு நடப்பதையே தங்கள் கொள்கையாக வைத்துள்ளன, விடுதலை சிறுத்தைகள் போன்ற ஜாதிக்கட்சிகளும், சில லெட்டர் பேடு கட்சிகளும்!

அவ்வகையில், தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில், பிராமண வகுப்பை சேர்ந்த ரமேஷுக்கு, அறநிலையத் துறையை ஒதுக்கியபோது, 'தாம் துாம்' என்று குதித்தனர், தி.மு.க.,வும், அதன் துதிபாடி கட்சிகளும்!

அதேபோன்று, சட்டசபை தேர்தலின் போது, நடுநிலையாக செயல்பட வேண்டும் என்பதற்காக, சாய்குமார் ஐ.ஏ.எஸ்.,சை தமிழக தலைமை செயலராக நியமனம் செய்தது, தேர்தல் ஆணையம்.

தேர்தலுக்கு பின், புதிதாக ஆட்சிக்கு வந்த த.வெ.க., அரசு, அவருடைய பதவி காலத்தை நீட்டிக்கவே, 'சாய்குமாரை நியமித்துள்ளதன் வாயிலாக, மத்திய பா.ஜ., அரசே தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது' என்று கூற ஆரம்பித்து விட்டன, தி.மு.க.,வும், அதன் தொண்டரடி கட்சிகளும்!

சரி... தமிழகத்தில் தான் இந்த, 'சமூக' அநீதியாளர்கள் அக்கப்போர் செய்கின்றனர் என்று பார்த்தால், 'நீட்' தேர்வு வினாத்தாள்கள் கசிவதைத் தடுக்க, நந்தன் நிலேகனி தலைமையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி இடம் பெற்றுள்ளதை தாங்க முடியாமல், பார்லிமென்டில் தன் வன்மத்தை கக்கியுள்ளார், காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா.

கடந்த ஆண்டு ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற காமகோடி, பஞ்சகவ்யத்தின் மருத்துவ குணங்கள் குறித்து பேசினார். இதை மனதில் வைத்து, அவரை, 'கோ மூத்ர மனிதர்' என்று விமர்சித்துள்ளார், பிரியங்கா.

பிரியங்கா வேற்று மத இனக் கலப்பில் பிறந்தவராக இருந்தாலும், அவரது அப்பா வழி பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா, அந்த கோ மூத்ர வழிபாடு கொண்டவர்கள் வழியில் வந்தவர் தான் என்பதை மறந்து விட்டார்.

காமகோடி ஓர் ஆராய்ச்சியாளர்; அதனால், தான் ஆராய்ந்து பார்த்த விஷயத்தை கூறியுள்ளார். அதில் மருத்துவ குணம் இல்லை என்று பிரியங்கா எப்படி அறிந்தார்?

விமர்சிக்க அறிவு தேவை இல்லை; படிக்காத பாமரனும் விமர்சிப்பான். நிரூபிக்கத் தான் ஞானம் வேண்டும்!

அந்த அறிவு பிரியங்காவுக்கு இருந்தால், காமகோடியைப் போல ஆய்வு செய்து, அதன்பின் அல்லவா விமர்சித்திருக்க வேண்டும்!

அதைவிடுத்து, இந்தியாவின் பெருமை மிகுந்த கல்வி நிறுவனத்தில் இயக்குநராக இருப்பவர் குறித்து, தரம் தாழ்ந்து பேசி, வன்மத்தை கக்கியுள்ளார்.

அரைக்க அரைக்க சந்தனம் தன் மணம் மாறாது; சங்கை எத்தனை தான் சுட்டாலும், அது தன் வெண்மை நிறத்தை இழக்காது. அது போன்று தான் கற்றறிந்தவர்கள் மீதான விமர்சனமும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us