/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தி.மு.க., விதித்த நிபந்தனைகள் எத்தனையோ?
/
தி.மு.க., விதித்த நிபந்தனைகள் எத்தனையோ?
PUBLISHED ON : ஏப் 25, 2025 12:00 AM

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபையில், மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானியக் கோரிக்கையின்போது, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியிடம், 'நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்ற நிபந்தனையோடு, பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணியை தொடருமா?' என, கேள்வி எழுப்பியுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
கடந்த 1977ல் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயை சந்தித்து, 'இந்திரா என் மீது போட்டுள்ள சர்க்காரியா கமிஷனை வாபஸ் பெற வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார், கருணாநிதி.
அதற்கு, 'கூட்டணி வேறு; வழக்கு வேறு. அதை, நீதிமன்றத்தில் சரிசெய்து கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டார், மொரார்ஜி.
அன்று, இதை நிபந்தனையாக வைக்கத்தான், ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்ததா தி.மு.க.,?
எமர்ஜென்சி காலத்தில், சிறையில் ஏற்பட்ட காயம் கூட ஆறாத நிலையில், 1980 சட்டசபை தேர்தலில் தி.மு.க., - 110, காங்கிரஸ் - 110 என காங்கிரசோடு தி.மு.க., கூட்டணி அமைத்தது எந்த நிபந்தனைக்காக?
தமிழகத்தை மெஜாரிட்டி பலத்துடன் ஆண்ட எம்.ஜி.ஆர்., ஆட்சியை கலைத்தாரே இந்திரா... அந்த நிபந்தனைக்காகவா?
'பண்டாரம், பரதேசி' என பா.ஜ.,வை விமர்சனம் செய்து விட்டு, 1999ல் அக்கட்சியோடு கூட்டணி அமைத்தது எந்த நிபந்தனைக்காக-?
கடந்த 2004ல் காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி அமைத்து, 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகித்த தி.மு.க., தன் அதிகாரத்தை பயன்படுத்தி கச்சத்தீவை மீட்க, காவேரி மற்றும் முல்லை - பெரியாறு பிரச்னையை தீர்க்க காங்.,கட்சிக்கு நிபந்தனை விதித்து, அவற்றை எல்லாம் முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாமே... ஏன் செய்யவில்லை?
மாறாக, இப்போதுள்ள சட்ட அமைச்சர் ரகுபதிக்கு, அப்போது, மத்திய உள்துறை இணையமைச்சர் பதவிக்கு பட்டியல் அனுப்பப்பட்டிருக்க, மறுநாள் செய்தித்தாளில் ரகுபதி வனத்துறை இணையமைச்சர் என வெளியானது கண்டு கோபம் கொண்ட கருணாநிதி, 'உள்துறையாக இருந்ததை வனத்துறையாக மாற்றியது- யார்?' என கேள்வி எழுப்பி, அமைச்சரவைக்கு அளிக்கும் ஆதரவுக் கடிதத்தை நிறுத்தி வைத்தார். ரகுபதிக்கு உள்துறையை வழங்கி அறிவிப்பு வெளியான பின்புதான், ஆதரவுக் கடிதம் ஜனாதிபதிக்கே அனுப்பப்பட்டது.
இப்படி பதவிக்காக வைத்த நிபந்தனைகளை தவிர, மக்கள் பிரச்னைக்காக தி.மு.க., எப்போதாவது நிபந்தனை விதித்தது உண்டா?
இப்போது, 'நீட்' தேர்வை காரணம் காட்டி, அ.தி.மு.க., நிபந்தனை விதிக்க வேண்டும் எனச் சொல்வது, தனக்கு காய்ச்சல் என்பதற்காக, பக்கத்து வீட்டுக்காரரை மருந்து சாப்பிட சொல்வது போல் அபத்தமாக உள்ளது!
அதிகாரத்தை இழக்க விரும்புவரா?
அ.குணா,
கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவில், பல
மாநிலங்களில் குடும்ப அரசியலில் இன்றளவும் பல கட்சிகள் கோலோச்சி வருகின்றன.
இதில், கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே விதிவிலக்கு!
இக்குடும்ப அரசியலால் கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்படுவதுடன், பல கிளை கட்சிகளும் தோன்றுகின்றன.
ஏனெனில், அதிகார சுகத்தை அனுபவித்தவர்கள், அதை இழக்க தயாராக இருப்பது இல்லை.
இதற்கு சிறந்த உதாரணம், தி.மு.க.,!
தலைவராக
கருணாநிதி எப்போது பொறுப்பேற்றாரோ, அன்று முதல் குடும்ப அரசியல்
தி.மு.க.,விற்குள் புகுந்து விட்டது. முரசொலி மாறன், அழகிரி, ஸ்டாலின்,
கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி என்று அதன் பட்டியல் பெரிது.
கருணாநிதி
குடும்பத்திற்கு சவாலாக, கட்சியில் ஒருவர் வளர்ந்து வந்தால், அவர்களை
சாமர்த்தியமாக கட்டம் கட்டி ஒதுக்கிவிடுவர். அவ்வரிசையில், கட்சியின் வரவு -
செலவு கணக்கு கேட்டதாக கூறி, முதன் முதலில் வெளியேற்றப்பட்டவர்,
எம்.ஜி.ஆர்.,!
அதைத் தொடர்ந்து எத்தனையோ பேர்... அவர்களில் ஒருவர் வைகோ!
அண்ணாதுரை
காலத்தில் தி.மு.க.,வில் இணைந்து, தன் பேச்சு திறமையால், குறிப்பிடத்தக்க
தலைவராக வளர்ந்தவர் வைகோ. பொதுக் கூட்டங்களில் வைகோ பேசுவதை கேட்கவே,
மிகப்பெரிய கூட்டம் கூடுவதும், அவர் பேசி முடித்தவுடன் கூட்டம் கலைய
ஆரம்பித்ததும் கருணாநிதி குடும்பத்திற்கு கவலையை ஏற்படுத்தியது.
அத்துடன்,
பார்லிமென்டில் தன் அனல் பறக்கும் பேச்சு வாயிலாக, நாடு முழுதும் அனைத்து
அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பரிச்சயம் ஆனார்.
வைகோவின்
அபரிமிதமான வளர்ச்சி, தி.மு.க., குடும்பத்தை பயமுறுத்தவே, கருணாநிதியை
கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறி, 1992ல் கட்சியை விட்டு
வெளியேற்றப்பட்டார்.
பின், ம.தி.மு.க., என்ற கட்சியைத் துவங்கி,
தி.மு.க.,வின் குடும்ப அரசியல் மற்றும் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல்
கொடுத்து வந்தார், வைகோ.
மாற்றத்தை விரும்பிய மக்களும், ஜெயலலிதா
மற்றும் கருணாநிதிக்கு மாற்றாக வைகோ வருவார் என்றே எண்ணினர். ஆனால்,
வைகோவின் அரசியல் நகர்வுகள், அவரது கட்சியையும், பத்தோடு பதினொன்றாக
மாற்றிப் போட்டது.
மேலும், தன்னை வெளியேற்றிய தி.மு.க.,வுடன்
மீண்டும் இணைந்ததுடன், தன் மகன் துரை வைகோவிற்கு ம.தி.மு.க.,வின் கட்சி
முதன்மை செயலராக பதவி அளித்து, குடும்ப அரசியலை புகுத்தி, தானும் ஒரே
குட்டையில் ஊறிய மட்டை தான் என்று நிரூபித்தார்.
இதோ... துரை- வைகோவுக்கும்-, கட்சி துணை பொதுச் செயலர் மல்லை சத்யாவுக்கும் மோதல்...
தற்போது, அது சமாதானப்படுத்தப்பட்டாலும், மல்லை சத்தியா ஒருநாள் வெளியேற்றப்படலாம்!
காரணம், இங்கு எவரும் அதிகார சுகத்தை இழக்க விரும்புவதில்லை. அதற்கு வைகோ மட்டும் விதிவிலக்கா என்ன?
தமிழகமே 'அவுட் ஆப் கன்ட்ரோல்!'
முனைவர்
வி.மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: 'தி.மு.க., என்றுமே, 'அவுட் ஆப் கன்ட்ரோல்' தான்' என்று
கூறியுள்ளார், முதல்வர் ஸ்டாலின். இதை முதல்வர் சொல்லித்தான் தமிழக மக்கள்
தெரிந்து கொள்ள வேண்டுமா?
திராவிட மாடல் ஆட்சியில் கோலோச்சும் அமைச்சர்கள், அதிகாரிகள், தொண்டர்கள் எல்லாமே, 'அவுட் ஆப் கன்ட்ரோல்' ஆகத் தானே இருக்கின்றனர்!
விஜயவாடாவுக்கும்,
விசாகப்பட்டினத்திற்கும் வித்தியாசம் தெரியாத சரித்திர பேராசிரியராக
இருந்த ஓர் அமைச்சருக்கு, சைவ - வைணவ சின்னங்களை பார்க்கும் போது கூட, அவர்
புத்தி, 'அவுட் ஆப் கன்ட்ரோல்' ஆகி விடுகிறது.
நாடே போராட்டம் நடத்தியும், அவர் பதவியை முதல்வரால் பறிக்க முடியவில்லை. காரணம், முதல்வரே 'அவுட் ஆப் கன்ட்ரோல்!'
மாற்றுத்திறனாளிகளை
இழிவுபடுத்தும் விதமாக, 'குருடு, செவிடு' என்று பொதுமேடையில் பேசிய
துரைமுருகன் மன்னிக்கப்பட்டார். இதே குற்றத்திற்காக, மஹாவிஷ்ணு எனும்
பேச்சாளர் கைது செய்யப்பட்டார்.
அதுமட்டுமா... கொலை, கொள்ளை, போதை என தமிழகமே திராவிட மாடல் ஆட்சியில் அவுட் ஆப் கன்ட்ரோலாகத் தானே இருக்கிறது!

