/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
மோசடி நிதி நிறுவனங்களிடம் ஏமாறாதீர்கள்!
/
மோசடி நிதி நிறுவனங்களிடம் ஏமாறாதீர்கள்!
PUBLISHED ON : பிப் 13, 2024 12:00 AM
ரெ. ஆத்மநாதன், டாம்பா, புளோரிடா மாகாணம், அமெரிக்காவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அதிக வட்டி கிடைக்கும் என்று பேராசைப்பட்டு, சிறுக சிறுக சேமித்த பணத்தை பலர் தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர். அந்நிறுவனங்களும், சில மாதங்களுக்கு அந்த வட்டியை கொடுத்து, பின், கோடிக்கணக்கில் சுருட்டி தலைமறைவாகி
விடுகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள், தமிழகத்தில் தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகின்றன. பணம் கிடைக்காத வேதனை தாங்காமல், பலர் தற்கொலை செய்து கொள்ளும் துயர சம்பவங்களும் ஆங்காங்கு நடைபெற்ற வண்ணம் உள்ளன.
வங்கிகள் இல்லாத ஊரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, நாட்டுடமை ஆக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் நாடு முழுதும் வியாபித்துள்ளன. அவை அனைத்திலும் பணம் போட்டு எடுக்கும் எளிய வசதிகளும், சிறுக சிறுக சேமிப்பதற்கான வசதிகளும், அதிகமான பணத்தை நம் வசதிக்கேற்ப, எவ்வளவு நாளுக்கு வேண்டுமோ, அவ்வளவு நாளுக்கு வைப்புத் தொகையாக வைத்துக் கொள்ளும் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அளிக்கப்படும் வட்டியின் சதவீதமும் தெளிவாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கிகள் இல்லாத சிறு ஊர்களில், தபால் அலுவலகங்கள் உள்ளன. அங்கும், சேமிப்பதற்கு ஏதுவாக பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன. ஆயினும், 'வங்கிகள் அளிக்கும் வட்டிக்கு மேல் தனியார் நிதி நிறுவனங்களால் மட்டும் எப்படி அதிக வட்டியை கொடுக்க முடியும்' என்று, நாம் சிந்தித்து பார்ப்பதே இல்லை.ஏமாற்றும் எண்ணத்துடனேயே ஆரம்பிக்கப்படும் நிதி நிறுவனங்களும், நம் ஆசையை துாண்டி, அவர்கள் பக்கம் இழுக்க, முதலில் சிலருக்கு அதிக வட்டியைக் கொடுத்து, அவர்கள் வாயிலாக, பலரை தங்கள் வலைக்குள் சிக்க வைத்து விடுகின்றன. மக்களும் விட்டில் பூச்சிகளாக அந்த நிறுவனங்களில் பணத்தை போடுகின்றனர். அவர்களது பேராசையே, பிற்காலத்தில் பெரும் துன்பத்திற்கு காரணமாகிறது.எனவே, மக்கள் பேராசையை விட்டொழித்து, 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்பது போல, வங்கிகள் மற்றும் தபால் அலுவலகம் வாயிலாக சேமிக்கவும், பணத்தை
முதலீடு செய்யவும் முன் வர வேண்டும். அவ்வாறு செய்தால், ஏமாற்றும் நிதி நிறுவனங்களே இல்லாமல் போகும்; இதனால், வீண் தற்கொலைகளையும் தடுக்க முடியும்.
ஜனநாயகத்தை மேம்படுத்த வேண்டும்!
சு.ஸ்ரீனிவாசன், கோவையில் இருந்து எழுதுகிறார்: சோழ மன்னர்கள் காலத்தில், குடவோலை முறை வாயிலாக மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களாட்சி நடைபெற்றதாகவும், அது சிறப்பாக இருந்ததாகவும் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய பாரத நாட்டின் ஜனநாயக முறையில், அந்த குடியாட்சியானது சிறப்பாக
உள்ளதா என்பது மிகுந்த கேள்விக்குறியே.இந்தியா சுதந்திரமடைந்து, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து, நமக்கு குடியரசு என்ற ஜனநாயக ஆட்சி முறை அரசியல் சாசன அடிப்படையில் வழங்கப்பட்டது. மத்தியிலும், மாநிலங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரதிநிதிகள் ஆண்டு வருகின்றனர்.நடைமுறையில் உள்ள ஜனநாயக ஆட்சியில் உண்மையான ஜனநாயக விழுமியங்கள் உள்ளனவா என்றால், இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.மாநிலங்களிலும், மத்தியிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரதிநிதிகளுக்கான தொகுதிகள் மிகப் பரந்து விரிந்துள்ளதால்,
தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் தகுதிகள் மக்களுக்கு சரியாக தெரியவே வாய்ப்பு இல்லை.மேலும், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் பெரும்பாலும் குற்றப் பின்னணி உடையோராக இருப்பதும் கண்கூடு. இவர்களில் யாரை தேர்ந்தெடுத்தாலும், மக்களுக்கு கிடைப்பதென்னவோ கசப்பான விளைவுகள் தான்.
தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் யாருமே, மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணமில்லாமல், தம் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், இதர பதவி சுகங்களை அனுபவிக்கும் எண்ணத்திலுமே தீவிரமாக செயல்படுவதை யாரால் மறுக்க இயலும்?
எனவே, சான்றோர்களும், சிந்தனையாளர்களும் நம் ஜனநாயகத்தை மேம்படுத்தி, மக்கள் உண்மையிலேயே நல்லாட்சி பெற்று, மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வதற்கான வழி முறைகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போது தான், ஜனநாயக குடியரசு என, நெஞ்சு நிமிர்த்தி கூற முடியும்.
அவலத்துக்கு முற்றும் போட்ட பழனிசாமி!
பொன்மணி ஜெயராஜ், செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தீயசக்தி தி.மு.க.,வுடன் நாங்கள் எப்படி பயணிக்க முடியாதோ, அதுபோல துரோக சக்தியான பழனிசாமியுடனும் நானோ, அ.ம.மு.க., தொண்டர்களோ பயணிக்க மாட்டோம். எக்காலத்திலும் அவருடன் இணைந்து செயல்பட மாட்டோம். துரோகத்தினாலேயே பழனிசாமி அரசியலில் வீழ்வார்' என்று அ.ம.மு.க, பொதுச் செயலர் தினகரன் கூறியுள்ளார்.
பெரியவர்கள் காலில் விழுந்து வணங்குவது நம் கலாசாரம்; அதில் தவறில்லை. அதே போல், ஆன்மிகவாதிகள், சாதனை புரிந்தோர், மகத்தான சேவை செய்தோர், வயதில் குறைந்தோராக இருந்தாலும், அவர்களின் காலில் விழுந்து வணங்குவதும் தவறல்ல. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பதவிக்காக ஜெ., காலில் விழும் கலாசாரம் அ.தி.மு.க.,வில் அதிகமாக இருந்தது. வயது வித்தியாசம் இன்றி எல்லா தலைவர்களும், அமைச்சர்களும் ஜெ., காலடியில் விழுந்தே கிடந்தனர்.
தலைவியை வரவேற்க நேராக கூட நிற்காமல், கூன் விழுந்தவர்கள் போல் வளைந்து, குனிந்து தான் நிற்பர்; அவ்வளவு பணிவு. அவர்களின் செயல் கண்டு, தலைகுனிந்த தமிழர்கள் அதிகம். இவ்வளவு ஏன், ஜெ., பயணித்த காரின் டயரை தொட்டு கும்பிட்டவர்களும் உண்டு.
அவரின் மறைவுக்கு பின், அந்த கலாசாரமும் மறையும் என்று நினைத்தேன்; ஆனால், அவரது தோழி சசிகலா காலிலும் எல்லாரும் விழ ஆரம்பித்து விட்டனர். அதிலும் பழனிசாமி, முதல்வர் பதவிக்காக தவழ்ந்து சென்று சசிகலாவின் காலில் விழுந்த காட்சிகள், இன்றும் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.இருப்பினும், தனக்கு முதல்வர் பதவி கிடைக்க காரணமான சசிகலாவையே, கட்சியை விட்டு நீக்கிய பழனிசாமியின் செயலை பன்னீர்செல்வம், தினகரன் போன்ற
சிலர், நம்பிக்கை துரோகம் என்கின்றனர்.ஆனால், அவர் அப்படி செய்திருக்கா விட்டால் அ.தி.மு.க., பெருந்தலைகள் இன்றும் சசிகலாவின் காலில் வீழ்ந்தும், அவருக்கு அடிமையாக வளைந்தும் வாழ வேண்டிய அவல நிலை தொடரும். அதில், பன்னீர்செல்வம் முதல் ஆளாக இருந்திருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை.