PUBLISHED ON : ஜன 24, 2025 12:00 AM

அ.அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: என் கல்லுாரி காலம்தொட்டு, அதாவது 1975லிருந்து, 'தினமலர்' நாளிதழின், 'இது உங்கள் இடம்' பகுதியில் எழுதி வருகிறேன்.  நாட்டுநடப்பு, அரசியல் நிலவரம் குறித்த மக்களின் பார்வை, நடுநிலையான, நக்கீரத்தனமான கருத்துக்கள், இப்பகுதியில் இடம்பெறுவதால், இதற்கென தனி வாசகர் வட்டமே உண்டு.
அப்படித்தான், நாகப்பட்டினத்தில் வசிக்கும் ஓர் ஆசிரியர், இப்பகுதியில் வரும் என் கடிதங்களால் கவரப்பட்டு, 'நீ சென்னை சென்றால் முன்னேறலாம்' என்று வாழ்த்தி, கல்லுாரி படிப்பு முடிந்ததும், சென்னையில் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.
ஆக, முதன்முதலாக எனக்கு வேலை கிடைக்க காரணமாக இருந்தது, இது உங்கள் இடம் பகுதிதான்!
அதுமட்டுமா... ஜாதக தோஷத்தால் எனக்கு திருமணம் தாமதமானது; கும்பகோணத்தில் இருக்கும் ஒரு திருமண தகவல் மையத்தில், என் பெயரை அப்பா பதிவு செய்த போது, அந்த திருமண மையத்தை நடத்துபவர், என் பெயரை பார்த்ததும், 'உங்கள் மகன் தினமலர் பத்திரிகையில் இது உங்கள் இடம் பகுதியில் எழுதுவாரா...' என்று கேட்டுள்ளார்.
என் தந்தை, 'ஆமாம்' என்றதும், 'தினமலர் இதழ் வாங்கியதும், நான் முதலில் படிக்கும் பகுதி, இது உங்கள் இடம் தான்; அதில், உங்கள் மகன் கடிதம் என்றால், விரும்பி வாசிப்பேன்' என்று பாராட்டியுள்ளார்.
அந்த அபிமானத்தில், எனக்கு பொருத்தமான ஒரு பெண் ஜாதகத்தை தேர்ந்தெடுத்து, பெண் வீட்டாரிடம் பேசி, அப்போது வேலையில் இல்லாத எனக்கு, திருமணத்தை நடத்திக் கொடுத்தார்.
ஆம்... சிக்கலான ஜாதக தோஷத்திலும், எனக்கு திருமணம் இனிதே நிறைவேற காரணமாய் இருந்தது,  இது உங்கள் இடம் பகுதி தான்!
இதோ... 2025ம் ஆண்டிலும் என் படைப்புகள் அவ்வப்போது வெளியாகி, என்னை பெருமிதத்தில் பூரிக்க வைக்கிறது.
'தினமலர்' நாளிதழுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
அஜித் பவாரின் 'அட்ராசிட்டி!'
கே.சுப்பு,
 சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:  'தேர்தலில் எனக்கு 
ஓட்டு போட்டதால், நீங்கள் என் முதலாளி ஆகி விடுவீர்களா... உங்களுடைய 
வேலையாள் என்று என்னை நினைத்தீர்களா' என, பொங்கி எழுந்துள்ளார், மஹாராஷ்டிர
 துணை முதல்வரும், தேசியவாத காங்., கட்சி தலைவருமான அஜித் பவார்!
தான்
 போட்டியிட்ட  பாராமதி தொகுதியில், மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சியில் 
கோரிக்கை மனு அளிக்க மக்கள் முண்டியடிக்கவே, அவர்களிடம், இப்படி பொங்கி 
எழுந்து உள்ளார்.
வெறும் பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்த அஜித் பவாரை, துணை முதல்வராக உயர்த்தி வைத்த தொகுதி மக்களுக்கு, இக்கேள்வி தேவை தான்!
சிவசேனா
 - காங்., - தேசியவாத காங்., கூட்டணியில், தனக்கு துணை முதல்வர் பதவி 
மறுக்கப்படவே, தேசியவாத காங்.,கில் இருந்து பிரிந்து, பா.ஜ.,விற்கு 
ஆதரவளித்தவர் இந்த அஜித் பவார்.
அவரது ஒரே கண்டிஷன்... தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும்!
ராகு
 காலத்தில் பதவி ஏற்றாரே என்னவோ... மூன்றே நாட்களில் அந்த ஆட்சி முடிவுக்கு
 வரவே, வேறு வழியின்றி மீண்டும் தன் சித்தப்பா சரத் பவாரின் காலில் 
விழுந்து, மன்னிப்பு கேட்டு கட்சியில் சேர்ந்தார்.
சிவசேனா 
ஆட்சியில், முதல்வர் உத்தவ் தாக்கரேவை நச்சரித்து துணை முதல்வர் பதவி 
பெற்று, ஆனந்தமாக அதிகார சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கையில், மீண்டும் 
ஒரு திருப்பம்...
சிவசேனாவில் இருந்து, 40 எம்.எல்.ஏ.,க்களுடன் 
பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் ஆட்சிக்கு வேட்டு வைத்து, பா.ஜ.,வுடன் 
இணைந்து ஆட்சி அமைத்ததும், கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், மீண்டும் சரத் 
பவாருக்கு துரோகம் செய்து, பா.ஜ, கூட்டணியில் இணைந்து, துணை முதல்வர் பதவி 
பெற்றவர் தான், இந்த அஜித் பவார்.
படிக்கும் வயதில் தகப்பனை இழந்து,
 தவித்துக் கொண்டிருந்தவரை, கட்சியில் இணைத்து ஆளாக்கி, எம்.பி., - கேபினட்
 அமைச்சர்,  துணை முதல்வர் என்று அழகு பார்த்த சரத் பவாருக்கே விசுவாசம் 
இல்லாமல், அவரிடமிருந்து கட்சியை அபகரித்தவர், ஓட்டு போட்ட மக்களுக்கா 
விசுவாசமாக இருப்பார்?
ஓட்டுகளை வாங்கும் வரை, எல்லாரும் இந்நாட்டு 
மன்னர்கள் தான்;  வாங்கிய பின், மக்கள் அடிமைகள்; வெற்றி பெற்றவர்கள் 
மன்னர்கள். இது தானே அரசியல்வாதிகளின் எண்ணமாக இருக்கிறது!
அஜித் பவார் மனதில் நினைத்ததை வெளிப்படுத்தி விட்டார்;  வெளிப்படுத்தாத மன்னர்கள் இங்கே அநேகர் உள்ளனர்!
கனிமொழிக்கு தான் புரியவில்லை!
எஸ்.ராமசாமி,
 சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அடிப்படையான எந்த 
புரிதலுமே இல்லாமல் சிலர், ஈ.வெ.ராமசாமி குறித்து பேசுகின்றனர்.  முகவரி 
காணாமல் போகப் போகிறது என பயப்படும் அரசியல்வாதிகள், ஈ.வெ.ரா., குறித்து 
விமர்சித்து, மக்கள் கவனத்தை ஈர்த்து, ஓட்டு ஈட்டத் துவங்கும் வேலையில் 
ஈடுபடுகின்றனர்.
'யாரால் தனக்கு இந்த உயர்வு கிடைத்தது; தனக்கு 
படிக்கவோ, வாய்ப்பு கள் கிடைக்கவோ திராவிட இயக்கம் என்னென்ன தியாகங்கள் 
செய்து இருக்கிறது என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் பேசுவோரை என்ன செய்ய
 முடியும்?
'அவர்கள் என்ன செய்வர் பாவம். எஜமானர்களுக்கு 
அடிபணிந்து பேசுகின்றனர்' என்று விபரமில்லாமல், வெகுளித்தனமாக, சிறுபிள்ளை 
போல பேசி இருக்கிறார், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி.
'திருக்குறள்
 என்பது தங்கத்தட்டில் வைக்கப்பட்ட மலம்' என்றும், 'தமிழ், காட்டுமிராண்டி 
மொழி' என்றும், கடவுள் பக்தி குறித்து, ஈ.வெ.ராமசாமி வெளியிட்ட ஒவ்வொரு  
கருத்தும், தி.மு.க.,காரர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம்.
ஆனால்,
 தமிழக மக்கள் யாரும், அவற்றை ஏற்றுக் கொண்டதில்லை. ஈ.வெ.ரா.,வுக்கு 
மறுப்பு தெரிவிக்காமல்,- 'துஷ்டனை கண்டால் துார விலகு' என்ற கோணத்தில் 
அமைதியாகி விட்டனர்.
'படிக்கவும், வாய்ப்புகள் கிடைக்கவும் திராவிட 
இயக்கம் என்னென்ன தியாகங்கள் செய்திருக்கிறது என்று புரிந்துகொள்ள 
வேண்டும்' என்கிறார் கனிமொழி.
நாமெல்லாம் படிக்கவோ, வேலை வாய்ப்பு பெறவோ, திராவிட இயக்கம் எந்த உதவியும் செய்ய வுமில்லை; எந்த தியாகமும் செய்யவுமில்லை.
நம்மைப் படிக்க வைத்தது, நம் தந்தை தானே தவிர, ஈ.வெ.ரா., அல்ல.
மேலும்,
 ஈ.வெ.ராமசாமியோ, திராவிடர் கழகமோ, தி.மு.கழகமோ இலவசமாக பயிற்றுவிக்கும் 
கல்வி நிறுவனங்களையோ, கல்லுாரிகளையோ நடத்தி கொண்டிருக்கவில்லை. எங்கும், 
எதற்கும்,  துட்டு தான்.
அது போல நம் தகுதியாலும், திறமையாலும் தான்
 வேலை வாய்ப்பு கிட்டியதே தவிர, திராவிடர் கழகமோ, தி.மு.கழகமோ நமக்கு எந்த 
சிபாரிசும், உதவியும் செய்வது இல்லை.
மக்கள் இவற்றை நன்றாக புரிந்து வைத்திருக்கின்றனர்; கனிமொழிக்கு தான், நிர்வாகத்துக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பது புரியவில்லை.

