PUBLISHED ON : அக் 11, 2024 12:00 AM

ஆர்.எஸ்.ராவணன், சைதாப்பேட்டையிலிருந்து எழுதிய, 'இ - மெயில்' கடிதம்: இத்தாலியின் ரோம் நகரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது, அது குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாமல், வயலின் வாசித்துக் கொண்டிருந்த மன்னன் நீரோ குறித்து, வரலாற்றில் வாசித்து இருக்கிறோம்.
'நீரோ மன்னனைப் பார்த்ததில்லை நீங்கள்; இதோ நானிருக்கிறேன் பாருங்கள்' என்ற தன் உண்மையான முகத்தைக் காட்டியிருக்கிறார், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு.மணியன் என்ற மா.சுப்ரமணியன்.
விஷயத்திற்கு வருகிறேன்...
அரசு துறைகளில் ஒருங்கிணைப்பு இல்லாமல் நவக்கிரகங்களை போல, ஆளுக்கு ஒரு பக்கமாக முறுக்கிக் கொண்டு நின்றிருந்ததே, சரித்திரத்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய, விமானப்படை சாகச நிகழ்ச்சி ஐந்து உயிர்களை பலி கொண்டு சோகத்தில் முடிந்தது.
இன்றைய நிலையில் அ.தி.மு.க.,வோ அல்லது வேறு ஏதாவது அரசியல் கட்சியோ ஆட்சி பீடத்தில் அமர்ந்து இருந்தால், சாகச நிகழ்ச்சி, சோகத்தில் முடிந்ததற்கு பொறுப்பேற்று, முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், மொத்தத்தில் ஆட்சியையே கவர்னர் கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அறிக்கை விட்டிருப்பர்; பேட்டி அளித்திருப்பர்; அறைகூவல் விடுத்திருப்பர்.
ஆனால், நடப்பது திராவிட மாடல் ஆட்சியல்லவா!
'சாகச நிகழ்ச்சியை, 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். அவ்வளவு பேர் கூடினாலும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்படவில்லை; அவற்றால் இறப்புகள் நடக்கவில்லை. வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு நேர்ந்துள்ளது. ஐந்து பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்தான் இறந்துள்ளனர். இறப்பை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்; செய்ய நினைத்தால் தோற்றுப்போவர்.
'மெரினாவில், 15 லட்சம் பேர் கூடிய நிலையில், ஒருவருக்கு ஒரு காவலரையா போட முடியும்?' என விபரமாக சொல்லி இருக்கிறார் மா.சு.மணியன்.
அ.தி.மு.க., ஆட்சியில் அமர்ந்து இருந்தபோது, 'எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?' என்று ஒருவர் சொன்னதை சற்று நினைவுபடுத்தி பாருங்கள்.
சென்னையில், ஆழ்வார்பேட்டை முதல்வர் இல்லத்தில், பர்மனென்டாக 50 காவலர்கள் காவல் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தவிர, முதல்வர் கோட்டைக்கு புறப்பட்டு விட்டார் என்றால், ஆழ்வார்பேட்டை இல்லத்திலிருந்து கோட்டை வளாகம் வரை, 10 அடிக்கு ஒரு காவலரை, வெயிலானாலும், மழையானாலும் நிப்பாட்டி வைக்கிறீர்கள்.
அந்த காவலர்கள் ஆண்களோ, பெண்களோ இயற்கை உபாதைகளை எந்த இடத்தில் கழிப்பர் என்று, பதவி சுகத்தில் மிதந்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் என்றைக்காவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?
'ஒருவருக்கு ஒரு காவலரையா போட முடியும்?' என்று கேட்ட நிகழ்கால நீரோ அமைச்சரை என்னென்று சொல்வது!
'ஸ்மார்ட்' ஆக செயல்பட வேண்டும்!
ஜி.ரங்கநாதன்,
சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இப் பகுதியில், வாசகர்
ஒருவர், 'இருந்ததை கோட்டை விட்டோமே...' என, துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை
இழந்ததை குறிப்பிட்டு வருந்தியிருந்தார். ஏன் இழந்தோம்... சில போலி
சமூகப்போராளிகளை, அப்போதைய அரசு சமாளிக்க இயலாமல் திணறியதால், வன்முறை
ஏற்படவே துப்பாக்கி சூடு நடந்து, 13 உயிர்கள் பலியாகின. அதனால், நீதிமன்றமே
ஆலையை மூட உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
சற்றே எண்ணிப்
பாருங்கள்... கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையம் செயல்பட, எத்தனை தடைகள்!
எல்லா சமூகப் போராளிகளும் ஒன்று சேர்ந்தனர்; கூடவே, உள்ளூர் உதயகுமார்
என்பவரும், ரகளை செய்தார்.
அத்தனையையும் ஜெயலலிதா அழகாக சமாளித்து,
தானும் கூடங்குளத்தை எதிர்ப்பது போல் போக்கு காட்டி, சாத்தான்குளம்
தேர்தலை சந்தித்து, கூடங்குளத்தையே மத்திய அரசிடம் காட்டி, தமிழகத்திற்கு
அதிக மின்சாரமும் வாங்கிக் கொண்டார்.
இன்று ஓரளவு நாம் மின்சாரத்தில் தப்பிப்பதற்கு, இதுதான் காரணம்.
உதயகுமார் வகையறாக்கள், இப்போது எங்கே போயினர்?
ஆளும் அரசு, பிரச்னைகளை பக்குவமாகக் கையாள வேண்டும்.
சேலம்
- சென்னை எட்டுவழிச் சாலையை, ஸ்டாலின் ஏன் எதிர்த்தார்? இந்த
விஷயத்திற்காக ஸ்டாலினுடன் அப்போது அமர்ந்த போராளிகளின் சுவடு, இப்போது
காணவே காணோம்!
இத்தகைய போராளிகளை கையாள, ஜெயலலிதாவை மிஞ்சியவர்
எவரும் இலர். கிடுக்கிப்பிடி வைத்தியம், சில சமயங்களில் தேவை. அதை அன்றைய
முதல்வர் பழனிசாமி செய்ய தவறி விட்டார்; அதனால், எட்டுவழிச் சாலை
விவகாரத்தில், பெயரைக் கெடுத்துக் கொண்டார்.
ஒரு தொழிற்சாலை இயங்க,
அரசின் ஆதரவு நிலை தேவை. உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், தாங்கள் கையூட்டு
பெற, ஏதாவது கூறி இறுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீது பழி போடுவர்.
இவற்றை
வெற்றிகரமாக முறியடிக்க, அரசு ஆதரவு தேவை; அதேநேரம் காற்று மாசு, நீர்
மாசு ஆகியவற்றைக் கண்காணிக்க இரும்புக் கரமும் வேண்டும்.
எங்கேதான்
ஆபத்து இல்லை? ஒவ்வொரு வீட்டிலும் உள்ள எரிவாயு சிலிண்டரே கூட ஆபத்து
தான்; மின் கம்பிகள் கூட ஆபத்துதான்; பாதுகாப்பான முறையில்
பயன்படுத்துவதுதான் முக்கியம்.
ஆளும் அரசு, 'ஸ்மார்ட்' ஆக
செயல்பட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிகோல வேண்டும்; தன் பாக்கெட்டை
நிரப்ப மட்டும் சிந்தித்தால், மாநிலம் சீர்கெடும்.
பிச்சைக்காரர்களுக்கு உதவலாமே!
வி.எச்.கே.ஹரிஹரன்,
திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரிசாவை சேர்ந்த
பத்திரிகையாளர் சந்திர மிஸ்ரா, கடந்த 2020ல் கொரோனா தொற்று காலத்தில் வேலை
இழப்பு குறித்து சர்வே நடத்த, காசி சென்று இருந்தார். அப்போது, காசி கங்கை
கரையில் சிறுவர்கள் பிச்சை எடுப்பதை கண்டார்.
சந்திர மிஸ்ராவும்,
அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து, அச்சிறுவர்களுக்கு பள்ளிக்கூடம் துவங்க
திட்டமிட்டனர். அவ்வாறாக, 2022ல் பிச்சைக்காரர் மறுவாழ்வு கார்ப்பரேஷனை
உருவாக்கினர்.
மிஸ்ரா அமைப்பைச் சேர்ந்த பெண் யாசகர் ஒருவர், பைகள்
தைக்கும் கலையை கற்றார்; வருமானமும் கிடைத்தது. அவர் வாயிலாக மேலும், 12
பெண் யாசகிகள் தையல் வேலைக்கு வந்தனர்.
கூடைகள் பின்னிய அவர்கள்
நாளடைவில் சட்டைகள், திரைச்சீலைகள் தைக்கத் துவங்கினர்; அதன்பின், தொழில்
முனைவோராக மாறினர். புண்ணிய ஸ்தலமான காசியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம்
வரவேற்கத்தக்கது.
இப்படி ஒருபுறம் இருக்க, சங்கம் வளர்த்த
மதுரையில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை கூடிவருவதாக மதுரை மாநகராட்சி,
தனியார் அறக்கட்டளை நடத்திய சர்வே தெரிவிக்கிறது.
மதுரையில், 2023
டிசம்பரில் 1,212 ஆக இருந்த பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை இன்று, 1,500
ஆகிவிட்டது. ஒரிசா சந்திர மிஸ்ரா போல தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு தனியார்
தொண்டு நிறுவனம், மத்திய அரசின் பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டத்தை
கையிலெடுத்து, பிச்சைக்காரர்களுக்கு உதவ முன் வரவேண்டும்!