PUBLISHED ON : நவ 12, 2026 12:00 AM

முனைவர் இரா.சண்முகசுந்தரம், விவசாய ஆராய்ச்சியாளர், அவினாசி, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘கடவுளே... இன்னும் நன்றாக மழை பெய்ய வேண்டும்... நிலமெல்லாம், சாலைகளெல்லாம் வெள்ளமாகப் பெருக வேண்டும்’ என, தமிழக பள்ளி மாணவர்கள், வேண்டிக் கொள்கின்றனர். இதைப் பார்த்தால், சிரிப்பாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
நான், மகாராஷ்டிர மாநிலம், புனேயிலும்; கர்நாடக மாநிலம், பெங்களூரிலும் சில ஆண்டுகள் வசித்திருக்கிறேன். அங்கெல்லாம், ஜூன் முதல் அக்டோபர் வரை, தென்மேற்குப் பருவமழை பெய்யும். குறிப்பாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், தொடர்ந்து பல நாட்கள் மழை பெய்வதைப் பார்த்திருக்கிறேன்.
ஆனாலும், அங்குள்ள மாணவர்கள், மழைக்காகப் பள்ளி விடுமுறையை எதிர் பார்த்துக் காத்திருப்பதில்லை. மழைக்கேற்ற உடைகளை அணிந்து, குடை மற்றும் மழைக் கவசங்களுடன் பள்ளிக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். மழை என்பது, அவர்களது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.
ஆனால் தமிழகத்தில், சிறிய மழை பெய்தால் கூட, பள்ளி விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து விடுகிறது.
சமீபத்தில், திருப்பூரில் பலத்த மழை பெய்தபோது, விடுமுறையை எதிர்பார்த்துக் காத்திருந்த மாணவர்கள் ஏமாற்றமடைந்த தாக வெளியான செய்தியைப் படித்தபோது, சிரிப்பு தான் வந்தது. பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதை விட, விடுமுறை அறிவிப்பு வருமா என்பதே மாணவர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக மாறி விட்டது என்பது வேதனை!
பள்ளிகளின் கட்டமைப்பு, சாலைகளின் நிலை, போக்குவரத்துப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே விடுமுறை அறிவிக்கப்படுவதாக நிர்வாகம் கூறலாம்; அது ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணம் தான். ஆனால் இதே மழை, மற்ற மாநிலங்களிலும் பெய்கிறது அல்லவா? அங்குள்ள பள்ளிகள், மழைக்காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும்போது, நம்மிடம் மட்டும் ஏன் இந்த நிலை?
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்த அரசுகள், பள்ளிக் கட்டமைப்பு, மின் வசதி, மின் கசிவைத் தடுக்கும் வசதி, மழைநீர் வடிகால், சாலை வசதி, பாதுகாப்பான போக்கு வரத்து ஆகியவற்றில், போதிய கவனம் செலுத்தியுள்ளனவா என்ற கேள்வியும் எழுகிறது. ஒருபுறம், ‘கல்வியில் சிறந்த தமிழகம்’ என்று பெருமை பேசுகிறோம்; மறுபுறம், மழை பெய்தாலே பள்ளிகளைத் திறந்து நடத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
மிகக் கனமழை, வெள்ளப்பெருக்கு, புயல், நீர்த்தேக்கம், போக்குவரத்து ஆபத்து போன்ற சூழல்களில், பள்ளி களுக்கு விடுமுறை அளிப்பது அவசியமானதும், சரியானதும் தான். மாணவர்களின் பாதுகாப்பில் எந்தச் சமரசமும் இருக்கக்கூடாது. ஆனால், சாதாரண மழைக்கும் பள்ளி விடுமுறையை எதிர்பார்க்கும் மனநிலை, மாணவர்களிடையே உருவாகி விட்டது தான் வேதனை!
மழை பெய்வது இயற்கை; அதற்காகக் கல்வி தடைபடுவது, அரசு நிர்வாகத்தின் பலவீனமாக மாறிவிடக் கூடாது!
எனவே, பள்ளிக் கல்வித் துறை, நீண்ட காலத் திட்டம் வகுத்து, வகுப்பறைகளையும், பள்ளியையும், சாலைகளையும் சீரமைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, மழைக்காலத்திலும், ‘பள்ளிக்குப் போலாம் வாரியா...’ என மாணவர்கள் சந்தோஷமாகப் பாடும் நிலையை உருவாக்க வேண்டும்!
