PUBLISHED ON : நவ 12, 2026 12:00 AM

மாயாவதி புரிந்து
கொண்டால் சரி!
ஆர்.மணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, ‘இ –மெயில்’ கடிதம்: ‘நாட்டின் பெரும்பான்மையான மக்கள், மின்னணு ஓட்டுப்பதிவு முறையின் நம்பகத் தன்மையை ஏற்கவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலம், தேர்தலை பாதிக்கும் முயற்சிகள் நடப்பதாக கருதுகின்றனர். மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்’ என, கதையளந்திருக்கிறார், உ.பி.,யின் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மூலம் ஓட்டளிக்கும் முறை, முதன்முதலாக, கேரள மாநிலம், பரவூர் சட்டசபை தொகுதியில், 50 ஓட்டுச்சாவடிகளில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின், 1989 முதல், பரவலாக நாடு முழுதும் நடைமுறைக்கு வந்தது.
மாயாவதி, நான்காவதுமுறையாக, உ.பி., சட்டசபைத் தேர்தலில், 206 இடங்களில் வென்று முதலமைச்சராக அமர்ந்த தேர்தலின் போதும், ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மூலமாகத் தான், தேர்தலே நடத்தப்பட்டது.
ஓட்டளிக்கும் மக்கள்ஒருவரும், அந்த ஓட்டுப்பதிவு இயந்திரத்தின்மீது குறையும் சொல்வதில்லை; நம்பிக்கை இல்லை என்றும் சொல்வதில்லை.
இந்த அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தான், தேர்தல்களில் வெற்றி பெற்றால், அது ஜனநாயகத்தின் வெற்றி என்றும், தோல்வி யுற்றால், அது ஓட்டுப் பதிவு இயந்திரத்தின் மூலம் நடந்த மோசடி, ஓட்டு திருட்டு என்றும் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர்.
இப்போது அந்த, ‘டுபாக்கூர்’ பட்டியலில், மாயாவதி, தன் பெயரையும் இணைத்து கொண்டுள்ளார்.
ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மூலம் நடத்தப்படும் தேர்தல்களில் உள்ள ஒரே ஒரு குறை என்னவென்றால், அரசியல் கட்சிகளால், கள்ள ஓட்டு போட முடியாது என்பது மட்டும் தான்.
கள்ள ஓட்டுக்கள் மூலமாக வெற்றி பெற்று ஆட்சிக்கு வருபவர்கள், நியாயமான, நேர்மை யான நல்லாட்சி நடத்தி விடுவரா என்ன!
ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மூலமாக நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த மாயாவதி, ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பது மாதிரி, அந்த ஓட்டுப்பதிவு இயந்திரத்தை குறை கூறுகிறார்.
அவர் ஆசைப்படி, ஓட்டுச்சீட்டு முறைப்படி தேர்தல் நடந்தாலும், மாயாவதிக்கு டிபாசிட் கூட கிடைக்காத நிலை ஏற்படலாம்; ஏனெனில், ‘மாயாவதியா... யார் அது?’ என்று, மக்கள்கேட்கும் நிலை தான், உ.பி.,யில் உள்ளது. மாயாவதி புரிந்து கொண்டால் சரி!
சந்தேகம்
எழுகிறதே, உமா?
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: சனாதன எதிர்ப்பு, ஹிந்துக்களைப் பழிப்பது, அவமதிப்பது ஆகியவை, தி.மு.க.,வின் தரம் தாழ்ந்த, மலிவு அரசியலின், முக்கிய கொள்கைகளில், ஒரு பகுதி.
அக்கட்சியைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ- – வைஷ்ணவ கலாசாரத்தைபொதுவெளியில் இழிவாகப் பேசியதைக் கண்டித்து, சென்னை மாநகராட்சி, பா.ஜ., கவுன்சிலர் உட்பட ஏராளமானோர் புகார் அளித்தனர்; சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு நிறைவு பெறக்கூடிய நிலையை நெருங்கும் வேளையில், பா.ஜ., கவுன்சிலர் உமா, வழக்கை வாபஸ் பெற்றார். இதைக் கண்டதும், தி.மு.க.,வும், பா.ஜ.,வும் நெருக்கம் காட்டுகின்றனவோ என்று சந்தேகப்படத் தோன்றுகிறது.
ஹிந்துக்களுக்கு, எப்போதுமே சட்டப்படி உரிய நியாயம் கிடைப்பது கடினம். நீதிமன்றங்களாவது நல்லது செய்யும் என்றிருந்த நிலையில், இப்படி அவர் செய்தது மனதை வேதனையுறச் செய்கிறது.
