/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்கலாமே!
/
உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்கலாமே!
PUBLISHED ON : ஏப் 01, 2025 12:00 AM

ரா.தங்கசாமி, நெல்லையில் இருந்து எழுது கிறார்: தொகுதி மறுவரையில், தமிழகத்திற்கான எண்ணிக்கை குறைக்கப்படும் என்று ஆருடம் சொல்லிக் கொண்டிருக்கிறார், தமிழக முதல்வர். இங்கிருந்து சென்றுள்ள, 39 எம்.பி.,க்கள் தினமும், பார்லிமென்டில் கூச்சல் போடுவதை தவிர, தங்கள் தொகுதி மேம்பாட்டிற்காக என்ன செய்துள்ளனர்?
தற்போது லோக்சபா உறுப்பினர்கள் எண்ணிக்கை, 543 ஆகவும், ராஜ்யசபா உறுப்பினர்கள் எண்ணிக்கை, 245 ஆகவும் உள்ளது. இதை, 350 மற்றும் 150 ஆகவும் குறைக்கலாம்.
இதனால், எம்.பி.,க்களின் சம்பளம், பயணப்படி, பென்ஷன் மற்றும் பலவகை செலவுகள் கணிசமாக குறையும். ஏதோ காரணத்தால், சட்டசபை கலைக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகளில் மீதமுள்ள காலத்திற்கு மட்டும் தேர்தல் நடத்தலாம். பார்லிமென்ட்டில் தொகுதி பிரச்னை குறித்து உறுப்பினர்கள் பேசுவதற்கு நேரம் கிடைக்கும்.
இன்று, நிறைய எம்.பி.,க்கள் இருந்தும், தமிழக மீனவர் பிரச்னை தீர்க்கப்பட்டதா? கங்கை - காவிரி இணைக்கப்பட்டதா? கூவம் மணக்கிறதா? சேது சமுத்திர திட்டம் நிறைவேறியதா?
எதுவும் இல்லை; பின் எதற்கு இத்தனை எம்.பி.,க்கள்?
அதேபோன்று, லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்திவிடலாம்; அதனால், எந்த பலனும் இல்லை. இன்று, ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைத்தால் போதும் என்ற நிலையிலேயே நாட்டில் பல கட்சிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த உறுப்பினர்களுக்கு என்று எந்த தொகுதியும் கிடையாது.
தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்து, ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை பெற உழைக்கின்றனர். அதேபோன்று, சட்டசபை மேலவையையும் கலைத்து விடலாம்.
இதை எல்லாம் செய்து விட்டு, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடத்தினால், பார்லிமென்ட் செலவுகள் கணிசமாக குறையும்; நாட்டின் வளர்ச்சியும் வேகமடையும்!
என்ன செய்து விட முடியும்?
என்.மல்லிகை
மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இலங்கையில்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்தவரை, தமிழக மீனவர்கள்
அச்சமின்றி மீன் பிடித்து வந்தனர். அதற்கு காரணம், இலங்கை அரசு
பிரபாகரனைக் கண்டு அஞ்சியது.
'அப்படியொரு நிலைமை மீண்டும் வர
வேண்டும் என்றால், இன்னொரு பிரபாகரனான நான், தமிழக முதல்வர் ஆக வேண்டும்'
என்று கூறியுள்ளார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
பிரபாகரனை
கண்டு இலங்கை அரசு அஞ்சியிருந்தால், அங்குள்ள தமிழர்கள் அச்சமின்றி
வாழ்ந்திருப்பரே... அவர் உயிரோடு இருந்தவரை, ஒருநாள் கூட அவர்கள்
நிம்மதியாக வாழவில்லையே!
தினந்தினம் இலங்கை அரசின் விமானத்
தாக்குதலுக்கு பயந்து, பதுங்கு குழிக்குள் மறைந்து, உயிர் பிழைத்தால்
போதும் என்ற நிலையில் தானே வாழ்ந்தனர்?
அப்படி இருக்கும்போது தமிழக மீனவர்கள் மட்டும் எப்படி நிம்மதியாக வாழ்ந்திருக்க முடியும்?
கச்சத்தீவை
என்றைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா வும், தி.மு.க., தலைவர் கருணாநிதியும்
சேர்ந்து, இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தனரோ, அன்றைக்கு பிடித்தது,
தமிழக மீனவர்களுக்கு சனி!
அதன்பிடியில் சிக்கிய மீனவர்கள், இன்றுவரை நிம்மதி இழந்து தவிப்பது தான் நிதர்சனம்.
உண்மை
இவ்வாறு இருக்க, 'மீனவர்கள் மீன் பிடித்து நிம்மதியாக வாழவேண்டும்
என்றால், நான் தமிழக முதல்வர் ஆக வேண்டும்' என்கிறார், சீமான்.
எம்.ஜி.ஆர்.,
- ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்களாலேயே தீர்வு காண
முடியாத தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு, சீமான் முதல்வராகி, தீர்வு
காண்பதாகச் சொல்வது நல்ல காமெடி!
இருநாட்டு கடல் எல்லை பிரச்னைக்கு,
ஒரு மாநில அரசால் என்ன தீர்வு காண முடியும்? இலங்கை கடற்படையுடன், தமிழக
போலீசாரை வைத்து, துப்பாக்கி சண்டை போடுவாரா இல்லை கச்சத்தீவை மீட்டெடுக்க
இலங்கை மீது போர் தொடுப்பாரா?
சீமானின் பேச்சு, மீனவர் ஓட்டுக்காக சொல்லப்படும், கதைக்கு உதவாத வெற்றுப் பேச்சுகளே!
எத்தனை காலம் தான் ஏமாறுவர்?
கே.எஸ்.தியாகராஜ்
பாண்டியன், காரைக்குடியில் இருந்து எழுதுகிறார்: நடிகர் கமல்ஹாசனுக்கு
ராஜ்யசபா உறுப்பினர் பதவியை, தி.மு.க., தன் கட்சி கோட்டாவில் வழங்க உள்ளது.
காரணம், அவர் தற்போது தங்கள் கூட்டணியில் இருப்பதால் மட்டும் அல்ல;
2021ல் தி.மு.க., வெல்வதற்கு அவர் செய்த உதவிக்கு நன்றிக்கடனாக இந்த
எம்.பி., பதவி!
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி
கட்சிகள் ஒருபுறமும், எதிர் அணியில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியும்
போட்டியிட்டன. 10 ஆண்டுகளாக பதவியில் இல்லாத நிலையில், ஜெயித்தே ஆக வேண்டிய
கட்டாயம் தி.மு.க.,விற்கு!
அதேநேரம், ஆளும் கட்சிகளாக இருந்த,
அ.தி.மு.க., - பா.ஜ., அணியை வீழ்த்துவது அவ்வளவு சுலபம் அல்ல என உணர்ந்து,
தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் ஒரு புள்ளியில் சேர விடாமல் தடுப்பதற்காக,
கமல் வாயிலாக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை களம் இறக்கியது, தி.மு.க.,!
ஏனெனில்,
தி.மு.க.,விற்கு ஆதரவு ஓட்டு வங்கியை விட, எதிர்ப்பு ஓட்டு அதிகம்.
1972ல், தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆர்., விலகியது முதல், அக்கட்சிக்கு
எதிர்ப்பு ஓட்டு வங்கி தான் அதிகம்.
எனவே, அக்கட்சியின்
அறிவுரைப்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய கமல், தன்னை தி.மு.க.,
எதிர்ப்பாளராகவே காட்டிக் கொண்டார். கலைஞர் தொலைக்காட்சி பெட்டியை, தன்
கட்சி சின்னமான, 'டார்ச் லைட்'டால் அடித்து நொறுக்கி, 'யாருக்கு உங்கள்
ஓட்டு' என, ஆவேசமாக கேள்வி கேட்டார்.
வாரிசு அரசியலை, ஊழலை ஒழிக்க வேண்டும் என வீராவேசம் காட்டினார்.
அதுமட்டுமா...
'கருப்பு கூட என் கண்களுக்கு காவி போல் தெரிகிறது' என, அவரது பாணியில்
பேசினார். மக்கள் அவரை நம்பி, 12 லட்சம் ஓட்டுகளை அவர் கட்சிக்கு
வழங்கினர்.
தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் பிரியவே கமல் புண்ணியத்தில் எளிதாக வென்றது, தி.மு.க.,
அதுவரை,
தி.மு.க., வின், 'பி' டீமாக செயல்பட்ட கமல், பின், அக்கட்சியில்
ஐக்கியமாகி விட்டார். தி.மு.க.,வும், கைமாறாக, அவருக்கு ராஜ்யசபா
உறுப்பினர் பதவி அளிக்க முன்வந்து உள்ளது.
இந்த இருவரின் கள்ளக்
கூட்டணியால், தி.மு.க.,விற்கு அதிகாரமும், கமலுக்கு எம்.பி., பதவியும்
கிடைக்க உள்ளது. ஆனால், கமலை நம்பி ஓட்டளித்த, 12 லட்சம் மக்களுக்கு
ஏமாற்றமே கிடைத்துள்ளது!
இதுபோன்ற கொள்கையற்ற நடிகர்களை நம்பி, எத்தனை காலம் தான் தமிழக மக்கள் ஏமாறுவாரோ!

